உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதை மூன்றும் ‘ப்ரஸ்தான த்ரயம்’ என்று வழங்கப்படுகின்றன. அறுதிப் பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது இதன் பொருள். பிரதானமாகக் கருதப்படும் 14 உபநிஷதங்களில் ‘ஐதரேய உபநிஷதம்’
ரிக் வேதத்தின் கீழ் உள்ளது. இதனை அருளியவர் ஐதரேயர் என்ற முனிவர். பூதேவியை வழிபட்டு இதை இவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.
உயிரின் தோற்றம்
உயிர் உருவாதல் என்ற அதிசயமே இந்த உபநிஷதத்தின் மையப் பொருள். தாயில் இருந்து உடம்பையும், தந்தையிடம் இருந்து உயிரையும் பெறுகின்ற மனிதனுள் இறைவன் ஆன்மாவாகப் புகுந்து அவனை இயங்க வைக்கிறார் என்பதை இந்த உபநிஷதம் விரிவாகக் கூறுகிறது. சாந்தி மந்திரத்துடன் ஐதரேய உபநிஷதம் தொடங்குகிறது. 33 மந்திரங்கள் உடைய இந்த உபநிஷதம் மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
படைப்பின் ரகசியம்
கடவுள் உலகையும், மனிதனையும், உணவையும் படைத்ததைப் பற்றி முதல் அத்தியாயம் கூறுகிறது. ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார். வேறு எதுவும் இல்லாத அந்நிலையில், அம்பலோகம், மரீசீலோகம், மரலோகம், ஆபலோகம் ஆகியவற்றைக் கடவுள் படைத்தார்.
‘அம்பஸ்’ என்றால் தண்ணீர். அம்பலோகம் என்றால் தண்ணீர் உலகம். தொலைநோக்கும்போது வானம் நீலக்கடலைப் போல் தோற்றமளிப்பதால் மற்றும் வானில் இருந்து மழை பொழிகிறது என்ற இயல்பான நம்பிக்கையால் அம்பலோகம் தண்ணீர் நிறைந்ததென்று கூறப்படுகிறது. ‘மரம்’ என்றால் மரிப்பவர்கள்.
அதாவது பிறந்து மறையும் மனிதர்கள் வாழும் பூமி மரலோகம் எனப்படுகிறது. “உலகங்களைப் படைத்து விட்டேன். இனி உலகின் காவலர்களைப் படைப்பேன்” என்று கடவுள் நினைத்தார். பிறகு தண்ணீரில் இருந்தே திரட்டி, பிரம்ம தேவனை உருவாக்கினார் என்று இந்த அத்தியாயம் கூறுகிறது. மேலும் பிரம்மதேவனில் இருந்து உலகமும் உயிரினங்களும் தோன்றியதை இம்மந்திரம் கூறுகிறது.
கடவுள் தண்ணீரைப் பற்றி சிந்தித்தார். தண்ணீரில் இருந்து ஓர் உருவம் தோன்றியது. அது உணவே. கடவுள் படைத்த உணவு திரும்பி ஓட ஆரம்பித்தது. மனிதன் அதனை வாக்கினால் பிடிக்க முயற்சித்தான், முடியவில்லை.அவ்வாறு நிகழ்ந்திருந்தால் ‘உணவு’ என்று சொல்வதாலேயே அவன் திருப்தி அடைந்திருப்பான்.
முகர்வதனால் பிடிக்க முயற்சித்தான், முடியவில்லை. அவ்வாறு நிகழ்ந்திருந்தால் ‘உணவை’ முகர்வதினாலேயே திருப்தியடைந்திருப்பான். பார்வையால் பிடிக்க முயற்சித்தான், முடியவில்லை. கேட்பதின் மூலம் பிடிக்க முயற்சித்தான், முடியவில்லை. தொடு உணர்ச்சியால் பிடிக்க நினைத்தான். முடியவில்லை. ஓட முயசித்த உணவை மனதால் பிடிக்க நினைத்தான். குறியின் மூலம் பிடிக்க நினைத்தான். இறுதியாக அபானனால் பிடிக்க முயற்சித்தபோது, அவனால் பிடிக்க முடிந்தது.
பிராண சக்தியின் ஓர் அம்சமே அபானன். வாய்வழி உள்செல்லும் சக்தி இது. வாய்வழி உள்செல்லும் உணவை, அபானன் தான் ஏற்றுக்கொண்டு, அவயங்களுக்கு பிரித்தளிக்கிறது. எனவே அபானனே உணவின் மூலம் வாழ்க்கையைத் தாங்குகிறது.
உலகையும், வழிநடத்தும் தேவர்களையும், உணவையும் படைத்த கடவுள் மனிதனில் புக நினைத்தார். ஜடப்பொருளான உடலில் எவ்வழியாக நுழைவது என்று சிந்தித்து, உச்சியைப் பிளந்துகொண்டு, அந்த வாசல் வழி நுழைந்தார். அதன் பெயர் வித்ருதி. அதுவே ஆனந்தத்தின் உறைவிடம்.
மனிதன் இயங்க ஆரம்பித்ததும் அறியாமையால் தன் உண்மை இயல்பை மறந்தான். பின்னர் அனுபூதி பெறும் காலம் வந்தது. தன்னுள் உறையும் ஆன்மாவைக் கண்டான். அதுவே எங்கும் நிறை இறை என்று உணர்ந்தான்.
மிஞ்சும் அதிசயம்
புற அதிசயங்கள் ஆகிய அனைத்தையும் மிஞ்சும் அதிசயம் ஆன உயிர் உருவாதல் பற்றி இந்த அத்தியாயத்தில் காண்கிறோம். உடல் தாயிடம் இருந்து கிடைக்கிறது. உயிர் தந்தையின் வழியாகத் தாயின் கருப்பையினுள் புகுகிறது. இந்த உடல், உயிரின் சேர்க்கையில் ஆன்மாவாக இறைவன் புகுந்து அதனை இயங்கச் செய்கிறார்.
ஆண் தனது ஆற்றல் அனைத்தையும் திரட்டிய வடிவமாக விந்து அமைகிறது. எனவே விந்தில் அவன் தன்னைத்தானே தாங்குகிறான். அதை பெண்ணில் கடத்துகையில் தன்னைப் பிறப்பித்துக் கொள்கிறான். இது அவனது முதல் பிறப்பு. பெண் கருவைச் சுமக்கிறாள். பாதுகாக்கிறாள். அவளும் பாதுகாக்கப்பட வேண்டியவள். பிறந்த குழந்தையை தானாக எண்ணிப் பாதுகாக்கிறான். இப்பிறப்பு மனிதனின் இரண்டாம் பிறப்பு. தான் செய்தவற்றை குழந்தையைச் செய்ய வைத்த பின், வயதாகி இறப்பது மனிதனின் மூன்றாம் பிறப்பு.
ஆன்மாவே இறைவன்
கதிரவனால் உலகம் இயக்கம் பெறுகிறது. ஆனால், கதிரவன் நேரடியாக எதிலும் ஈடுபடுவது இல்லை. அவன் முன்னிலையில் அனைத்தும் நடைபெறுவதுபோல, ஆன்மா ஒரு சாட்சியாக இருக்க, உயிர் உலகின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.
ஆன்மா அனைத்தையும் கடந்தது என்றாலும், அதுவே உடம்பின், மனதின் இயக்கங்களாகத் திகழ்கிறது. தனிநபர் நிலையில் மட்டுமல்லாமல், பிரபஞ்ச நிலையிலும் அனைத்திற்கும் ஆதாரமான ஆன்மாவே இறைவன். ‘ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம’ என்னும் சொற்றொடர் இதைத் தெளிவாக்குகிறது. இந்த உண்மையை அனுபூதியில் உணர்பவன், மரணமில்லாப் பெருவாழ்வை பெறுகிறான்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago