உயிர் வளர்க்கும் திருமந்திரம் 57: சரம் பார்த்தவன் பரம் பார்ப்பான்

By கரு.ஆறுமுகத்தமிழன்

மூக்கில் இரண்டு துளைகள். இவை இரண்டின் வழியாகவும் ஒருசேர மூச்சை உள்வாங்கி வெளிவிடுவதாக எண்ணியிருக்கிறோம். ஆனால் மூச்சு இரண்டு துளைகளில் ஒன்றின் வழியாகத்தான் நுழைந்து வெளியேறுகிறது. சில மணி நேரங்கள் கழித்து, ஓடிய துளையை ஓயவிட்டு, ஓய்ந்திருந்த பக்கத்துத் துளைக்கு மாறிக்கொள்கிறது. காட்டாக, மூச்சு இப்போது இடது துளையில் ஓடுகிறது என்று வையுங்கள்;

அவ்வாறு ஓடும்போது வலது துளை ஓய்ந்திருக்கும். சில மணி நேரம் கழித்து மூச்சு வலது துளைக்கு மாறிக்கொள்ள, இடது துளை ஓய்ந்திருக்கும். எப்பொழுதேனும் மூச்சு மையமாக இரண்டு துளைகளிலும் ஓடக்கூடும். மூச்சைச் சரம் என்றால், மூச்சு இவ்வாறு மாறி மாறி ஓடுவதற்குச் சர ஓட்டம் என்று பெயர் (nasal cycle).

மூச்சு, மூக்கின் இடது துளை வழியாக ஓடும்போது இடகலை அல்லது இடநாடி வழியாக ஓடுவதாகவும், வலது துளை வழியாக ஓடும்போது பிங்கலை நாடியின் வழியாக ஓடுவதாகவும், இரண்டு துளைகளிலும் நேர்நின்று நடுவாக ஓடும்போது சுழிமுனை அல்லது நடுநாடி ஓடுவதாகவும் கொள்ளப்படும்.

மூச்சு, இடது துளையான இடகலையில் ஓடும்போது, பெருமூளைப் புறணியின் (cerebral cortex) வலதுபக்கம் தூண்டப்பட்டு, துணைப்பரிவு நரம்பு மண்டலம் (parasympathetic nervous system) செயல்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக உடல் குளுமைப்படுத்தப்படுகிறது. மூச்சு, வலது துளையான பிங்கலையில் ஓடும்போது, பெருமூளைப் புறணியின் இடதுபக்கம் தூண்டப்பட்டு, பரிவு நரம்பு மண்டலம் (sympathetic nervous system) செயல்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக உடல் சூடேற்றப்படுகிறது.

பரிவு நரம்பு மண்டலம், துணைப் பரிவு நரம்பு மண்டலம் இரண்டுமே அதே உடற்கருவிகளைத்தான் கட்டுப்படுத்துகின்றன என்றாலும், இரண்டும் நேரெதிரான செயல்பாடுகளைக் கொண்டவை. பரிவு நரம்பு மண்டலம் செயலுக்குத் தூண்டுகிறது; பரபரப்பூட்டுகிறது; ‘எதிர்கொள் அல்லது தப்பி ஓடு’ என்று கட்டளையிடுகிறது. துணைப் பரிவு நரம்பு மண்டலமோ ஆறுதலாக்குகிறது; ‘ஓய்வு கொள், உள் வாங்கு’ என்று அமைதிப்படுத்துகிறது.

சூரியநாடி சந்திரநாடி

மூச்சு, இரண்டு நாடிகளிலும் சமமாக நின்று சுழிமுனையில் ஓடும்போதோ, பரிவு நரம்பு மண்டலம், துணைப் பரிவு மண்டலம் இரண்டுமே சமமான அளவு தூண்டப்பட்டு உடலியக்க ஒருங்கிணைப்பு நிகழ்த்தப்படுகிறது. சூடேற்றுகிற பிங்கலை நாடி, ‘சூரியநாடி’ அல்லது ‘கதிர்’ என்றும், குளுமைப்படுத்துகிற இடகலை நாடி, ‘சந்திரநாடி’ அல்லது ‘மதி’ என்றும், சமப்படுத்துகிற சுழிமுனை நாடி, ‘அக்கினி நாடி’ அல்லது ‘சுடர்’ என்றும் வழங்கப்படுகின்றன.

திருமூலர் சொல்கிறார்:

இரண்டு கடாஉண்டு இவ்வூரின் உள்ளே;

இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்;

இரண்டு கடாவும் இருந்திப் பிடிக்கில்,

இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

(திருமந்திரம் 2889)

இந்த ஊரின் வேலைகளைச் செய்வதற்கு இரண்டு கடாமாடுகள் உள்ளன; இரண்டு கடாமாடுகளையும் ஏற்றத்திலும் உழவிலும் வண்டியிலும் பூட்டி ஓட்டும் உழவுக்காரன் ஒருவன்தான். கடாமாடுகளை உழவுக்காரனிடம் விடாமல் உருத்துக்காரன் தானே நிறுத்திப் பிடித்தால் இரண்டு கடாமாடுகள் ஒரே கடாமாடாக ஆகிவிடும்.

ஊர் என்பது உடம்பு. இரண்டு கடாமாடுகள் என்பன இடகலை நாடியும் பிங்கலை நாடியும். உழவுக்காரன் என்பவன் இயல்பான உடலியக்க முறைமை. உருத்துக்காரன் என்பவன் உயிர். உழவுக்காரனாகிய உடலியக்க முறைமை, இடகலை, பிங்கலை ஆகிய கடாமாடுகளை உழவில் பூட்டி, தனிப்பட்ட அக்கறை ஏதும் இல்லாமல் தன்பாட்டுக்கு உழுதுகொண்டிருக்கும். உருத்துக்காரனாகிய உயிர் கடாமாடுகளைக் கவனித்துத் தன்வசப்படுத்தினால், இடகலை, பிங்கலை ஆகிய இரண்டு கடாமாடுகள் சுழிமுனை என்னும் ஒரே கடாமாடாகி உடலியக்கத்தை ஒருங்கிணைக்கும். ‘மாடு ரெண்டு, பாதை ரெண்டு, வண்டி எங்கே சேரும்?’ என்ற குழப்பத்துக்கு இடமிருக்காது. ஒருங்கிணைக்கும் வழியும் சொல்கிறார் திருமூலர்:

வாமத்தில் ஈர்எட்டு மாத்திரை பூரித்தே

ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்

காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டு

ஓமத்தால் எட்டுஎட்டுக் கும்பிக்க உண்மையே. (திருமந்திரம் 573)

வாமம் என்பது இடப்பாகம். மூச்சை இழுக்கும்போது இடது நாசியாகிய இடகலையில்தான் முதலில் இழுக்க வேண்டும். பதினாறு மாத்திரை அளவுக்கு மூச்சிழுத்தால், இழுத்த மூச்சை அறுபத்தாறு மாத்திரை அளவுக்கு வயிற்றினுள் நிறுத்தி, பின் வலது நாசியாகிய பிங்கலையில் முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்குக் காற்றை வெளிவிட வேண்டும். இவ்வாறு செய்வது சரியான முறைமை.

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர

நூறும் அறுபதும் ஆறும் இடம்வர

நூறும் அறுபதும் ஆறும் எதிரிட

நூறும் அறுபதும் ஆறும் புகுவரே.

(திருமந்திரம் 729)

நூறு மாத்திரை அளவோ, அறுபது மாத்திரை அளவோ, ஆறு மாத்திரை அளவோ, அவரவர் தகுதிக்கும் கொள்ளளவுக்கும் பயிற்சிக்கும் ஏற்ப, மூச்சை வலமாகிய பிங்கலையிலும், இடமாகிய இடகலையிலும், எதிராகிய சுழிமுனையிலும் செலுத்திப் பழகுபவர்கள் தங்கள் இயல்பான வாழ்நாளைக் காட்டிலும் நூறோ, அறுபதோ, ஆறோ அவரவர் முயற்சிக்குத் தகக் கூடுதல் பெறுவார்கள்.

ஐயத்தை வென்றவர் ஐயனார்

இடகலை நாடி, பிங்கலை நாடி, சுழிமுனை நாடி ஆகியன முறையே வளி, அழல், ஐயம் எனப்படும் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றோடு தொடர்புபடுகின்றன. வாதமாகிய வளி உடலை வளர்த்தெடுக்க, பித்தமாகிய அழல் உடலை முறுக்கேற்ற, கபமாகிய ஐயம் உடலைச் சமனப்படுத்துகிறது.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. (குறள் 941)

வளி, அழல், ஐயம் (வாதம், பித்தம், கபம்) ஆகிய மூன்றுக்கும் அளவுக் கணக்கிருக்கிறது. வளி ஒன்று, அழல் அரை, ஐயம் கால் என்னும் வீதத்தில் இருக்க வேண்டும். இந்த வீதம் மிகுந்தோ, குறைந்தோ போகும்போது உடலில் நோய் உண்டாகிறது.

மிகுந்தாலோ, குறைந்தாலே நோய் செய்யும் வளி, அழல், ஐயம் இவற்றைக் கட்டுறுத்தி, அவ்வவற்றின் அளவுக்குள் நிறுத்துவதற்கும் வாழ்நாளை நீட்டிப்பதற்கும் சரஓட்டம் பயன்படும். இவற்றில் ஐயத்தை வென்றவரே ஐயன் நிலையை அடைந்து ஐயனார் ஆகிறார் என்பார் கோரக்கர். அறிவர் பள்ளியின் ஆதி.சங்கரர் திருமூலர் சொல்கிறார்:

இடைபிங் கலைஇம வானோடு இலங்கை;

நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை;

கடவும் திலைவனம் கைகண்ட மூலம்

படர்வுஒன்றி என்னும் பரமாம் பரமே.

(திருமந்திரம் 2754)

இடகலையையும் பிங்கலை யையும் சுழிமுனையையும் நிலவரைப் படம்போட்டு இடம் குறிப்பதுபோலக் குறித்துக் காட்டவேண்டுமென்றால் இப்படி வைத்துக்கொள்ளலாம்: இடகலை என்பது இமயம் என்றால், பிங்கலை என்பது இலங்கை. இரண்டுக்கும் நடுவில் நிற்கும் சுழிமுனையைத் தில்லை வனம் என்க. மூச்சைச் சரியாகச் சுழிமுனையில் இயக்கத் தெரிந்தவன் படர்ந்து பரம ஐயனார் ஆகிறான். சரம் பார்த்தவன் பரம் பார்ப்பான் என்றும் ஒரு வழக்காறு உண்டு.

(பரம் பார்ப்போம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்