ஆன்மா என்னும் புத்தகம் 27: உங்கள் இகிகாயைத் தொடருங்கள்

By என்.கெளரி

ஜப்பானியர்களின் நீண்டகால மகிழ்ச்சிக்கான வாழ்க்கை ரகசியமாக இருக்கிறது ‘இகிகாய்’ (Ikigai) தத்துவம். இகிகாயை ‘இருத்தலின் காரணம்’ (Raison d’être) என்று பிரெஞ்சு மொழியில் விளக்குவார்கள். சிலர் தங்களுக்குள் இருக்கும் இகிகாயைக் கண்டுபிடித்திருப்பார்கள். சிலர் தங்களுக்குள் வைத்திருந்தாலும்  தேடிக்கொண்டிருப்பார்கள். ‘இகிகாய்’ என்பது நம் அனைவருக்குள்ளும் ஆழமாக மறைந்திருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குப் பொறுமை வேண்டும்.

உலகிலேயே நூறு வயதைக் கடந்தவர்கள் அதிகமாக வாழும் பகுதி ஒக்கினாவா தீவு. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றாடம் காலையில் விழிப்பதற்கான காரணமாக ‘இகிகா’யைத் தெரிவிக்கிறார்கள். நிறைவு, மகிழ்ச்சி, வாழ்க்கைக்கான அர்த்தம் போன்றவை நமது இகிகாயை நாம் கண்டறியும்போது கிடைக்கின்றன.

ஸ்பானிய எழுத்தாளர்கள் ஹெக்டோர் கர்ஸியா, பிரான்செஸ்க் மிரால் இருவரும் இணைந்து ஐப்பானியத் தத்துவமான இகிகாயைப் பற்றி ‘இகிகாய்’ என்ற பெயரிலேயே புத்தகமாக எழுதியிருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு ஸ்பானிய மொழியில் வெளியான இந்தப் புத்தகத்தை 2017-ம் ஆண்டு ஹீத்தர் கிளயரி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் மறைந்திருக்கும் இகிகாயைக் கண்டுபிடிப்பதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டுகிறது.

வாழும் கலையைப் பற்றிய பல அம்சங்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இகிகாய் தத்துவத்தை விளக்குவதோடு மட்டுமல்லாமல், இகிகாயைப் பின்பற்றி ஒக்கினோவா தீவில் வாழ்ந்துவரும் நூறு வயதைக் கடந்தவர்கள் தங்களின் மகிழ்ச்சியான  வாழ்க்கைக்கான ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

பத்து விதிகள்

உடல், மனம், ஆன்மா போன்றவற்றை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு இகிகாய் தத்துவம் உதவுகிறது. இந்த இகிகாய் தத்துவத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்குப் பத்து விதிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் உலகிலேயே நீண்டகால மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் ஒக்கினோவா மக்கள்.

‘ஓய்வெடுக்காமல் எப்போதும் இயங்கிக் கொண்டேயிருப்பது’, ‘அவசரமில்லாமல் மெதுவாக அனைத்தையும் எதிர்கொள்வது’, ‘அரைவயிறு சாப்பிடுவது’, ‘நல்ல நண்பர்கள் புடைசூழ வாழ்வது’, ‘தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது’, ‘எப்போதும் புன்னகைப்பது’, ‘இயற்கையுடன் இணைந்திருப்பது’, ‘நன்றி பாராட்டுவது’ ,‘இந்தக் கணத்தில் வாழ்வது’, ‘பேரார்வத்தை, அதாவது உங்களின் இகிகாயைப் பின்தொடர்வது’ போன்றவற்றை இகிகாயுடன் வாழ்வதற்கான பத்து விதிகளாக இந்தப் புத்தகம் முன்வைக்கிறது.

வாழ்வதற்கான காரணங்கள்

‘வாழ்வின் அர்த்தம், மனிதனின் தேடல்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரும் பிரபல ஆஸ்திரிய உளவியல் மருத்துவருமான விக்டர் ஃபிராங்கல் உருவாக்கிய ‘லோகோதெரபி’யைப் பற்றியும் இந்தப் புத்தகம் எளிமையாக விளக்குகிறது. வாழ்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கு லோகோதெரபி உதவுகிறது.

மனிதர்களுக்கு வாழ்வதற்கான  காரணங்கள் அவசியமாகத் தேவைப்படுகின்றன என்பதை இந்த லோகோதெரபி நிறுவுகிறது. அந்தக் காரணத்தை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், அவரால் எந்தச் சூழ்நிலையிலும் வாழ முடியும் என்ற கருத்தைச் சொல்கிறார் ஃபிராங்கல்.

ஜென் பவுத்தத்தின் தாக்கத்தில் ஜப்பானைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் ஷோமா மோரிடா உருவாக்கிய ‘மோரிடா தெரபி’ பற்றியும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. மனித உணர்வுகளைக் கட்டுப்படுத்தாமல் ஏற்றுக்கொள்வதை ‘மோரிடா’ உளசிகிச்சை முன்வைக்கிறது.  மனித உணர்வுகளைப் பொறுத்தவரை, “நாம் ஓர் அலையை மற்றொரு அலையால் தடுக்க முயலும்போது, நம்மிடம் எல்லையற்ற கடல் ஒன்று உருவாகியிருக்கும்” என்ற ஜென் கருத்தை அடிப்படையாக வைத்து இந்த தெரபி கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நாம் நம் உணர்வுகளை உருவாக்குவதில்லை. அவை இயல்பாகவே நம்மிடம் வருகின்றன. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணர்வுகளை நம்மால் கணிக்கவோ, கட்டுப்படுத்துவோ முடியாது. 

அவற்றை நம்மால் கவனிக்க மட்டுமே முடியும். “ஹலோ, தனிமையே, இன்று நீ எப்படி இருக்கிறாய்? வா, என் அருகில் வந்து அமர், உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்ற வியட்நாமிய பவுத்த துறவி திஹ் நட்ஹன் மேற்கோளை இந்த உளசிகிச்சைக்கான கருத்தாக முன்வைக்கிறார் மோரிடா.

அத்துடன், மோரிடா உருவாக்கிய ‘நய்கன்’ தியானப் பயிற்சி பற்றியும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்த தியானப் பயற்சி தேவையற்ற கோப உணர்விலிருந்து ஒருவரை வெளியே கொண்டுவருவதற்கு உதவுகிறது. யார் மீதாவது கோபம் வந்தால், அவரிடம் சண்டைபோட விரும்பினால், அந்தக் கோபத்தை மூன்று நாட்களுக்குத் தள்ளிப்போடுமாறு இந்தப் பயிற்சி சொல்கிறது. மூன்று நாட்களில் அந்தக் கோபம் தானாகவே தணிந்துவிடும் என்று சொல்கிறார் மோரிடா.

நவீன வாழ்க்கைமுறை நம்மை நம் இயல்பிலிருந்து அந்நியமாக்கிவிடுகிறது. அது நம்மை அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ வைக்கிறது. பணம், அதிகாரம், புகழ், வெற்றி போன்ற அம்சங்கள் அன்றாடம் நம் கவனத்தைத் திசைதிருப்புகின்றன. ஆனால், அவை வாழ்க்கையைப் பாதிக்கவிடாமல் பார்த்துகொள்ள வேண்டியது அவசியம். நம் உள்ளுணர்வும், ஆர்வமும் நம் இகிகாயைக் கண்டுபிடிப்பதற்கு வழிகாட்டும் இரண்டு வலிமையான திசைமானிகள் என்று இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது.

ஹெக்டோர் கார்ஸியா (Hector Garcia)

ஸ்பெயினில் பிறந்த இவர், தற்போது ஜப்பானில் வசித்துவருகிறார். முன்னாள் மென்பொறியாளரான இவர், ஜப்பானில் குடியேறுவதற்குமுன் ஸ்விட்சர்லாந்தின் ‘செர்ன்’ நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.  ஜப்பான் சந்தையில் சிலிக்கான் வேலி நிறுவனங்கள் நுழைவதற்கான ‘குரல் அடையாளம்’ காணும் மென்பொருள் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் இவர். kirainet.com என்ற பிரபலமான வலைப்பூவை இவர் நிர்வகித்துவருகிறார். இவரது ‘A Geek in Japan’ புத்தகம் ஜப்பானில் மிகவும் பிரபலம்.

aanma-2jpg100 

பிரான்செஸ்க் மிரால் (Francesc Miralles)

இவர் ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளர். இதழியல், ஆங்கில இலக்கியம், ஜெர்மன் மொழிப் போன்ற துறைகளில் இயங்கிவரும் இவர், புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கிறார். இவரது நாவல் ‘Love in Lowercase’ உலகம் முழுவதும் இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 

இகிகாய் என்றால் என்ன?

# ஜப்பானிய மொழியில் இகிகாய் என்பது ‘வாழ்க்கை’, ‘பயனுள்ளதாக இருப்பது’ என்ற இரண்டு எழுத்துக் குறியீடுகளுடன் சேர்த்து எழுதப்படுகிறது.

# “எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பதன் மகிழ்ச்சி” என்பது இகிகாயின் மொழிபெயர்ப்பு.

# உங்களுக்குள் பேரார்வம் இருக்கிறது. உங்கள் வாழ்நாட்களுக்கு அர்த்தமளிக்கும் தனித்துவமான திறமை இது. உங்களிடம் இருக்கும் சிறந்தவற்றை வாழ்க்கையின் இறுதிவரை, உலகத்துடன் பகிர்வதற்கு இது வழிநடத்தும். உங்கள் இகிகாய் என்னவென்று இதுவரை உங்களுக்குத் தெரியவில்லையென்றால், “அதைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் செயல்திட்டமாக இருக்க வேண்டும்” என்று சொல்கிறார் பிரபல மனநல மருத்துவரும் எழுத்தாளருமான விக்டர் பிராங்கல்.

aanma-3jpg100 

# இகிகாய் என்பது நம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாக இருக்கிறது. ஆனால், நம் அனைவருக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால், அனைவருமே வாழ்வின் அர்த்தத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம். நமக்கு அர்த்தத்தை அளிக்கும் விஷயத்துடன் இணைந்து நம் வாழ்நாட்களைக் கழிக்கும்போது. நாம் நிறைவான வாழ்க்கையை வாழ்கிறோம். அந்த இணைப்பை இழக்கும்போது நாம் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை இழக்கிறோம்.

# நம் ஒவ்வொரு வருக்குள்ளும் இகிகாய் ஒளிந்தி ருக்கிறது. அதைத் தேடிக் கண்டடை வதற்குப் பொறுமை வேண்டும்.

# உங்கள் இகிகாயைக் கண்டு பிடித்தபிறகு, அதை நாள்தோறும் வளர்த்துவருவது உங்கள் வாழ்க்கைக் கான அர்த்தத்தைக் கொடுக்கும்.

# எது எப்படியிருந்தாலும் பேரார்வத்தைப் பின்தொடர்வதுதான் தங்கள் இகிகாயைக் கண்டுபிடித்து அதன் வழிகாட்டலின்படி வாழ்ந்துகொண்டிருப்பவர்களிடம் இருக்கும் ஒற்றுமை.

கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

13 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

23 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்