உயிர் வளர்க்கும் திருமந்திரம் 56: உயிர் வெளுப்பது எப்படி?

By கரு.ஆறுமுகத்தமிழன்

ஓகத்தை வெறும் உடல்சார்ந்ததாகவோ மனம் சார்ந்ததாகவோ புனைந்து, தங்கள் ஓகம் தனி ஓகம் என்று கற்பித்து, அதைத் தங்கள் பெயர்க்குறி பொறித்த குப்பிகளில் அடைத்து, ‘காசுக்கு இரண்டு விற்கும் சிட்டுக் குருவிகளைப்போல’ விற்பனைக்கு விடுகிறார்கள் தற்கால யோகக் குருக்கள். யோகச் சந்தை பெருஞ்சந்தை ஆகிவிட, ஊறுகாய்க் குப்பி ஆகிவிட்டது ஓகம்—சுவைக்குத் தக, தேவைக்குத் தக, காசுக்குத் தகக் கேளுங்கள், தரப்படும்.

ஓகத்தின் நோக்கம் உடலை, அல்லது மனத்தை மட்டும் ஒழுங்கு செய்வதன்று. உயிரை ஒழுங்கு செய்வது. அடமாக ஓகம் செய்வது உடலைப் பயிற்ற; உடலைப் பயிற்றுவது மூச்சைப் பிடிக்க; மூச்சைப் பிடிப்பது மனத்தை நிலைநிறுத்த; இவை அனைத்தையும் செய்வது உயிரை உயர்நெறிப்படுத்த.  உயிர் உயர்நெறிப்பட ஓகம் உதவாது என்றால் ஓகத்தால் என்ன பயன்?

எண்ணாயிரத்து ஆண்டு

யோகம் இருக்கினும்

கண்ணார் அமுதினைக் கண்டுஅறி வார்இல்லை;

உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்

கண்ணாடி போலக்

கலந்துநின்றானே.

(திருமந்திரம் 603)

திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் ஓகம் இருந்தார் என்று ஒரு கதை சொல்லப்படும். ஆனால் திருமூலரே சொல்கிறார்: உள்ளுக்குள் இருக்கின்ற அமுதத்தைத் தோண்டி எடுக்கத் தெரியாவிட்டால், எட்டாயிரம் ஆண்டுகள் ஓகம் இருந்தாலும் பயன் இல்லை. ஓகத்தின் பெருமை, எத்தனை ஆண்டுகள் இருந்தோம் என்பதில் இல்லை; ஓகம் இருந்து எதனைப் பெற்றோம் என்பதில் இருக்கிறது.

உள்ளே இருட்டாக இருக்கிறது என்று அஞ்சி வெளியிலேயே பார்த்துக்கொண்டிருப்பவர்களே! பார்வை திரும்பினால் உள்ளுக்குள் ஒளி வரும். கண்ணாடியில் காண்கிற காட்சிபோலக் காண வேண்டியது தெரியும். காண்கின்ற கண்ணுக்குப் புறத்தில் ஒளி. காணாத கண்ணுக்கு அகத்தில் ஒளி. அதென்ன காண்கின்ற கண், காணாக் கண்?

ஒண்ணா நயனத்தில்

உற்ற ஒளிதன்னைக்

கண்ணாரப் பார்த்துக் கலந்துஅங்கு இருந்திடில்

விண்ஆறு வந்து

வெளிகண்டி டஓடிப்

பண்ணாமல் நின்றது

பார்க்கலும் ஆமே.

(திருமந்திரம் 600)

காண்கின்ற கண் என்பது இயல்புக் கண்கள். எவற்றின் மேலெல்லாம் செலுத்துகின்றோமோ அவற்றையெல்லாம் அவை காண்கின்றன. காணாக் கண் புறப்பொருள்களைக் காணாக் கண்; உள்ளுக்குள் ஒளி தேடும் கண். பிறர் காணாக் கண் என்பதோடு தானுமே காணாக் கண். அந்தக் கண்ணைக் கண்டுகொண்டு அதைத் திறப்பித்தால், அது வேறு ஒளி காட்டும். விண்ணைப் பொத்துக்கொண்டு வந்த கங்கை என்னும் விண் ஆறு, பள்ளம் கண்ட இடத்தில் பாய்ந்துகொண்டதைப்போல, தன்னைப் பொத்துக்கொண்டு வரும் அருள் ஆறு இண்டு இடுக்கெல்லாம் பாயும். தண்ணீரின் தடம் கண்டால், ஏதும் பண்ணாமல் தானாகவே பயிர் வளர்வதைப்போல, அருள் ஆற்றின் தடம் கண்டால், அது ஏதும் பண்ணாமல் தானாகவே உயிர் வளரும். காணாக் கண்ணை எங்கே கண்டுகொள்வது?

நெற்றிக்கு நேரே

புருவத்து இடைவெளி;

உற்றுஉற்றுப் பார்க்க

ஒளிவிடும் மந்திரம்;

பற்றுக்குப் பற்றுஆய

பரமன் இருந்திடம்;

சிற்றம் பலம்என்று

சேர்ந்துகொண் டேனே.

(திருமந்திரம் 2770)

காணாக் கண்ணை, நெற்றிக்கு நடுவில் புருவத்து இடைவெளியில், உற்று உற்றுப் பார்த்துக் கண்டுகொள்க. விளக்கேற்றிய வீடுபோல ஒளி வீசிக் கிடக்கும் அதுதான் பரமன் இருப்பிடம்; சிற்றம்பலம் என்று கண்டுகொள்க.

துணிவெளுக்க மண்உண்டு – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

தோல்வெளுக்கச் சாம்பர்உண்டு – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

மணிவெளுக்கச் சாணைஉண்டு – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

மனம்வெளுக்க வழியில்லை – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

(பாரதி, முத்துமாரி)

துணி வெளுக்க மண், தோல் வெளுக்கச் சாம்பல், மணி வெளுக்கச் சாணை; மனம் வெளுக்க ஏதும் இல்லை என்று வழி அடைத்துப் போடுகிறான் பாரதி. வெளுக்கும் வழி திறந்து காட்டுகிறார் திருமூலர்:

வண்ணான் ஒலிக்கும்

சதுரப் பலகைமேல்

கண்ணாறு மோழை

படாமல் கரைகட்டி

விண்ஆறு பாய்ச்சிக்

குளத்தை நிரப்பினால்

அண்ணாந்து பார்க்க அழுக்குஅற்ற வாறே.

(திருமந்திரம் 800)

துணி வெளுக்கும் தொழிலாளிக்குக் கௌடிலியரின் பொருள் நூல் என்கிற அர்த்த சாத்திரம் சில கடைப்பிடி விதிகளைச் சொல்கிறது: துணி வெளுப்பாளர், வெளுப்புக்காக வந்த துணிகளை வாடகைக்கு விட்டாலோ, அடைமானம் வைத்தாலோ பன்னிரண்டு பணம் தண்டம் கட்டவேண்டும்; துணியை மாற்றிக்கொடுத்துவிட்டாலோ துணியைத் திரும்பப் பெற்றுத் தரவேண்டும் என்பதோடு, துணியின் மதிப்பைப்போல இரண்டு மடங்குப் பணம் தண்டம் கட்டவேண்டும்.

வெளுத்த துணி ஒன்றுக்குக் கூலி ஒரு ‘மாசம்’ அல்லது இரண்டு ‘மாசம்’. மாசம் என்பது, மேற்சொன்ன பணம் என்பதைக் காட்டிலும் குறைந்த மதிப்புள்ள, ஒரு வகைக் காசு. துணி வெளுக்கும் தொழிலாளி, மரப் பலகைகளிலோ அல்லது வழவழத்த மேற்பரப்பைக்கொண்ட கற் பலகைகளிலோ மட்டும்தான் துணி துவைக்க வேண்டும். வேறெங்காவது துணி துவைத்தால் ஆறு பணம் தண்டத் தொகை கட்டுவதுடன் இழப்பீடும் தர வேண்டும்.

உயிர்தான் வெளுக்கும் தொழிலாளி

திருமூலருக்கு நோக்கம் துணி வெளுக்கும் தொழிலாளிக்குக் கௌடிலியரைப்போல விதிமுறைகள் சொல்வதன்று;

துணி வெளுப்பை முன்வைத்து உயிர் வளர்க்கும் விதம் சொல்வது; துணி வெளுக்கும் நடைமுறையை உயிர் வெளுக்கும் நடைமுறையோடு ஒப்பிட்டுக் காட்டுவது.

துணி வெளுக்கும் தொழிலாளிக்குத் துணியை அடித்துத் துவைக்கச் சதுரக் கற்பலகை ஒன்று வேண்டும்; கல்லுக்குப் பக்கத்தில் துணி ஊறப்போடுவதற்காகக் கரை கட்டிக் குழிவு செய்துகொள்ள வேண்டும்; அதில் நீர் தேக்கிக்கொள்ள வேண்டும்; ஊற வைத்த துணியை அடித்துத் துவைத்து உதறி உயரப் பிடித்து அண்ணாந்து பார்த்தால் அழுக்கற்றுப் போனது தெரியும்.

உயிர்தான் துணி வெளுக்கும் தொழிலாளி. நெற்றிதான் உயிர் வெளுக்கும் சதுரக் கற்பலகை. உள்ளுக்குள் சுரக்கும் அருள் ஆறு கசிந்தோடிப் போய்க் குளம் வற்றிவிடாமல் அணை கட்டிப் பாதுகாத்து, நெற்றி நடுவை அண்ணாந்து பார்த்திருக்க, உயிர் அழுக்கு அறும். அருள் ஆறுதான் துணி வெளுக்கும் உவர்நீர். அதன் ஊற்று அடைபட்டுவிடாமலும் குளத்தின் கரை உடைந்து தேக்கிய நீர் வழிந்தோடிப் போய்விடாமலும் பாதுகாத்துக்கொண்டால் போதுமானது. அருள் வளர்ந்தால் உயிர் வளரும்.

(அருள் வளர்ப்போம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்