அம்பாளின் அருளும் கண்கள்

By செய்திப்பிரிவு

நம் அவயங்களில் கண் மிகவும் முக்கியம். என் கண்ணே என்று பிரியமானவர்களைச் சொல்கிற மாதிரி காதே, மூக்கே என்பதில்லை அல்லவா? அம்பாள் என்பதாகப் பரமாத்மா மூர்த்திகரிக்கிறபோது அவளுடைய கண் அத்தனை முக்கியமாகும். காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி என்கிறபோது அக்ஷி என்பது கண் விசேஷத்தையே சொல்கிறது.

காமாக்ஷியின் கைகளில் மன்மதன் வில்லும் அம்பும் இருப்பதாகச் சொல்கிறோம். அவளுடைய கைகளில் மட்டுமில்லை, கண்களிலும்கூட இவையே இருக்கின்றன என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கவித்துவ நயத்தோடு சொல்கிறார். (ப்ருவெளபுக்நே கிஞ்சித் என்கிற ஸ்லோகம்) என்ன சொல்கிறார்? அம்பாளுடைய புருவம் கொஞ்சம் நெரிந்திருக்கிறதாம். கவலை இருந்தால்தான் புருவம் நெரியும்.

லோக மாதாவுக்கு ஜனங்கள் எல்லோரும் கெட்டுப்போகிறார்களே, அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கவலை. அதனால் புருவம் வளைந்திருக்கிறது. அம்பாளுடைய பரம லக்ஷணமான புருவங்கள் வில் மாதிரி இருக்கின்றன. இரண்டு வளைந்த பாகங்களைக் கொண்ட தனுஸைப் போல் அவை உள்ளன.

ஆனால் புருவ மத்தியில், அதாவது நாசி தொடங்கும் இடத்துக்கு மேலே ரோமம் இல்லை. ரோமம் இருந்தால் அது உத்தமமல்ல. சாமுத்திரிகா லக்ஷணம் ஆகாது. கூடின புருவம் கெடுதல் உண்டாக்கும் என்பார்கள்.

அம்பாளுடைய புருவங்களின் மத்தியில் ரோமமில்லாதது உத்தம லக்ஷணம்தான். இது புருவங்களை வில்லுக்கு உவமிக்கும்போது அவ்வில்லுக்கு நடுவே ஊனம் செய்தாற்போல் தோன்றலாம். அப்படி ஊனம் தோன்றாமல் ஆசார்யார் ஒரு காரணம் சொல்கிறார். வில் என்று ஒன்று இருந்தால், அதை எய்கிறவன், அதன் மத்தியில் தன் முஷ்டியால் அதைப் பிடித்துக் கொண்டுதானே நாணில் அம்பு பூட்டி இழுப்பான்.

முஷ்டி பிடித்திருக்கிற இடம் வில்லின் இரண்டு பாகங்களுக்கு மத்தியில் அந்த வில்லை மறைக்கத்தானே செய்யும். இப்படித்தான் அம்பாளின் புருவ வில்லையும் எவனோ மத்தியில் பிடித்துக்கொண்டு அம்பைப் பூட்டுகிறான். அவனுடைய முஷ்டி உள்ள அந்த மத்ய பாகம்தான் ரோமம் இல்லாத இடைவெளி என்கிறார்.

இப்படி அம்பாளின் புருவத்தை வில்லாக வளைப்பவன் யார்? மன்மதன்தான். அவனுடைய கரும்பு வில் போலத்தான் கருணையால் வளைந்த லோக மாதாவின் புருவம் இருக்கிறது. மன்மதனுடைய வில்லுக்கு வண்டுகள் தானே நாண் கயிறு.

அதற்கேற்றாற்போல் இந்த புருவத்துக்குக் கீழே அம்பாளுடைய வண்டு விழிகள் இப்படியும் அப்படியும் ஒடிக்கொண்டே இருக்கின்றன. ஒருத்தரும் விட்டுப் போகாமல் ஸமஸ்த பக்தர்களுக்கும் அநுக்கிரஹம் செய்ய வேண்டுமென்பதால் அவை இப்படிச் சஞ்சரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நாணிலும், வில்லிலும் மன்மதன் தன்னுடைய சக்தியை வைத்து எய்கிறான்.

அதனால்தான் ஞான மூர்த்தியாயிருந்த பரமேசுவரன் அம்பாளிடம் பிரேமை கொண்டான். அதனால் ஜீவப் பிரபஞ்சமும் முழுதிடமும் அன்புகொண்டான். ஆசையில்லாத பிரம்மம் அசைந்துகொடுத்து, சகல ஜனங்களையும் ரக்ஷித்து, அம்பாளுடைய கவலையையும் தீர்த்தது.

வில்லைப் பிடித்த மன்மதன் முஷ்டி அம்பிகையின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளியாகவும், அவனுடைய மணிகட்டு நாண் கயிறான வண்டு விழிகளுக்கு நடுவில் நாசியின் அடிப்பாகமாகவும் ஆகிவிட்டது. இப்படி ஆசாரியாள் துதிக்கிறார்.

ஈசுவரனின் மீது காம பாணத்தை போடும் அந்தக் கண்களேதான் பக்தர்களைக் கடாக்ஷிக்கும்போது காமத்தைத் துவம்ஸம் செய்து ஞானத்தைப் பொழிகின்றன. மன்மத பாணங்கள் என்பவை என்ன? தாமரை, மல்லிகை, கருங்குவளை, மாம்பூ, அசோக புஷ்பம் ஆகியவைதான் அவனுடைய அம்புகள்.

ரூபம், ரஸம், கந்தம், ஸ்பரிசம் ஆகிய நான்கால் நம்முடைய நான்கு இந்திரியங்களை ஆகர்ஷிப்பது புஷ்பம். அதன் அழகு கண்ணுக்கும், அதில் சுரக்கிற தேனின் ரஸம் நாக்குக்கும், வாசனை மூக்கிற்கும், மென்மை தொடு உணர்ச்சிக்கும், இன்பம் தருகின்றன. பாக்கி இருக்கிற இந்திரியம் காது. அதற்குதான் வண்டு நாண், அது எப்போதும் ரீங்காரம் செய்வது, இந்த ஐந்துக்கும் மேலே கரும்பு வில், அதுதான் எல்லா இந்திரிய சேஷ்டைக்கும் காரணமான மனம்.

வெறும் பூவையும், கரும்பையும், வண்டையும் வைத்துக் கொண்டு மன்மதன் ஸமஸ்த ஜீவராசிகளையும் இந்திரிய வியாபாரத்தால் இழுத்துத் தள்ளுகிறான் என்றால் என்ன அர்த்தம்.? ஸாஷாத் பராசக்தியின் அநுக்கிரஹம் இருந்துவிட்டால், வல்லவனுக்குப் புல்லும் ஆயதமாகிவிடும் என்று அர்த்தம். உலக லீலை நடப்பதற்கு அவனுக்கு இந்தச் சக்தியை அநுக்கிரஹித்தாள்.

ஆகவே கவித்வ அம்புக்காக அவன் அவள் புருவத்தை வளைத்து அம்பு எய்வதாகச் சொன்னாலும் அவள்தான் அவனுக்கும் சக்தி தந்தவள். அவளுடைய சக்தியால்தான் அவன் நம் இந்திரியங்களை வசமாக்கி, ஒடாமல் நிறுத்த முடியும் என்றும் ஏற்படுகிறது.

தண்டிப்பது, காப்பாற்றுவது (சிக்ஷணை, ரக்ஷணை) இரண்டும் செய்கிறவன்தான் பிரபு. நம் கர்மத்துக்காக நம்மை ஆட்டிவைத்து சிக்ஷிக்கிறான். காமனை அதிகாரியாகக் கொண்டு அவனுக்கும் ஜயம் வாங்கித் தருகிறாள். அந்தக் காமன் நம்மிடம் வாலாட்ட முடியாதபடி நம் காம ஜயம் செய்யவும் அவளே கதி. அந்த ரக்ஷணையாச் செய்ய வேண்டுமென்றே லோகமாதாவான அவள் எப்போதும் கவலையோடு புருவ வில்லை வளைத்துக்கொண்டு அம்பு எய்கிற பாணத்தை வீசிப் பரமேசுவரனைக் கருணையில் திருப்பிக் கொண்டிருந்தாள்.

அம்பாளுடைய கண்களிலிருந்து பொங்குகிற கடாக்ஷம் ஸ்ரீ ஆச்சார்யாளிடம் பூரணமாகப் பொலிந்துகொண்டிருந்தபோது, அவரது வாக்கிலிருந்து ஒரு சுலோகம் வந்தது. இதுவும் ‘ஸெளந்தரிய லஹரி'யில் இருக்கிறது.

'த்ருசா த்ராகீயஸ் யாதரதளித நீலோத்பல ருசா' என்ற சுலோகம். அவளுடைய கடாக்ஷம் இல்லாமல் இப்படிப்பட்ட அமிருதம் போன்ற சுலோகம் பிறக்க முடியாது. ஆனால் இந்த சுலோகத்திலோ ஆசாரியாள் அம்பாளின் கடாக்ஷம் தமக்குக்கிட்ட வேண்டுமென்றே பிரார்த்திக்கிறார். தமக்குக்கிட்ட வேண்டும் என்கிறார். பக்தியிலும் ஞானத்திலும் சிகரமாக இருந்தும் துளிகூட அகம்பாவமே இல்லாத நம் ஆசாரியாள்.

காமாக்ஷியின் கடாக்ஷ வீக்ஷண்யத்தின் பெருமையை இந்த சுலோகத்தில் சொல்லுகிறார். அவளுடைய கண் பார்வை எத்தனை தூரமும் தாண்டி விழுமாம் - 'த்ருசா த்ரா கீயஸ்வா' என்கிறார். ஒரு தாயார்க்காரி பச்சைக் குழந்தைகளைத் தன் பார்வைக்குள்ளேதான் வைத்துக் கொள்வாள்.

பெரிய பெரிய காரியம் சாதித்தவர்கள், அகடவிகடம் செய்கிறவர்கள், எல்லோரும்கூட அவளுக்குப் பச்சைக் குழந்தைகள்தான். மிருகங்கள், பட்சிகள், புல்பூண்டு எல்லாவற்றுக்கும் தாயார்க்காரி அவள். எல்லையில்லாத பிரபஞ்சத்துக்கு அம்மா அவளே. இத்தனையும் அவர் பார்வைக்குத்தான் இருக்கின்றன. எனவே அவளுடைய கடாக்ஷத்திற்கும் எல்லையில்லை. அது நீண்டு நீண்டுபோய், தகுதியே இல்லை என்று எட்டாத் தொலைவில் நிற்கிறவர்கள் மீதும் விழுகிறது.

அந்தக் கண்கள் பாதி மூடி, பாதி விரிந்திருக்கிற “நீலோத்பல புஷ்பம்” மாதிரி பரம சீதளமாக இருக்கிறது. அவளுடைய திருஷ்டி, நீண்ட நேத்திரங்கள், குளிர்ந்த நேத்திரங்கள், இதனால் நீலோத்பலத்தை உவமிக்கிறார். இப்படி நீள நெடுக எங்குப் பார்த்தாலும் போய்க் கொண்டிருக்கும் உன் கடாக்ஷப் பிரவாகத்தில் என்னையும் முழுகும்படியாக செய்தருளேன் என்கிறார்.

‘மாம் அபி' என்னைக்கூட என்கிறார். எனக்கு உன் கடாக்ஷம் கிடைக்க நியாயமே இல்லை என்றாலும் தீனனான என்னையும் உன் பார்வையால் ஸ்நானம் பண்ணி வையம்மா என்கிறார். தீனம், மாமபி என்று மிகமிக விநயத்துடன் சொல்லுகிறார் பரமேசுவதாரமான ஆச்சாரியாள்.

எனக்கு யோக்கியதை இல்லாவிட்டாலும் ஏன் கேட்கிறேன் என்றால், இப்படிக் கடாக்ஷிப்பதால் உனக்கு ஒன்றும் நஷ்டம் வந்துவிடவில்லை என்பதாலேயே கேட்கிறேன் என்கிறார். தோஷமுள்ளவர்களைப் பார்த்தாலும்கூட அவளுடைய பார்வைக்குத் தோஷம் வராது. எந்த ஹானியும் வராது. ந ச தே ஹாநிரியதா, உனக்கு நஷ்டமில்லை என்பது மட்டுமில்லை. எனக்கோ இதனால் பரம லாபம் சித்திக்கிறது. நான் தன்யனாகிறேன் என்கிறார்.

‘அனேனாயம் தன்யோ பவதி’. தனத்தை உடையவன் தன்யன். அம்பாளின் கடாக்ஷத்தால் அருட்செல்வம் என்ற தானம் கிடைக்கிறது, அதற்கு மேல் பெரிய செல்வம் எதுவுமில்லை.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்