உயிர் வளர்க்கும் திருமந்திரம்: உன்னை எனக்குப் பற்றக்கொடு

By கரு.ஆறுமுகத்தமிழன்

 

ஓடும் பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல், நின்றுகொண்டு செல்ல நேரும்போது, ஓட்ட வேகத்தில் குப்புற விழுந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தினால், பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருக்கும் நிலைக்கம்பிகளையோ, விட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கிடைக்கம்பிகளையோ, இருக்கைகளில் பொருத்தப்பட்டிருக்கும் முதுகுக்கம்பிகளையோ பற்றிக்கொண்டு செல்வோம். பேருந்தை நடத்தும் நடத்துநரோ ஓடும் பேருந்துக்குள்ளேயே தன்னை நிலைப்படுத்திக்கொண்டு நாட்டியம்போல நடப்பார். நிற்கவே முடியாத நிலையில் நடக்கிறாரே? நடத்துநருக்கு இயன்றது நமக்கு ஏன் இயலவில்லை? அவர் பயின்றிருக்கிறார். நாம் பயிலவில்லை. நிலைப்படுத்திக் கொள்ளுதல் நமக்கு இயலாதது அன்று; நாம் முயலாதது. ஆகவே கைவசப்பட மறுக்கிறது.

ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொள்வது குற்றமன்று. ஆனால் பற்றிக்கொள்ளும் பொருள் உறுதியானதா என்று ஆராய்ந்து பற்ற வேண்டும். பேருந்துப் பயணத்தில் யாரேனும் நட்டு இல்லாத கம்பியைப் பற்றிக் கொள்வார்களா? பற்றிக்கொண்டால் கையோடே பிடுங்கிக்கொண்டு வந்துவிடும்; நிலைப்படுத்துவதற்குப் பதிலாக நிலைகுலைத்துவிடும். எனவே, பதம் பார்த்துப் பற்ற வேண்டும்.

ஆராய்ந்து பற்றவேண்டும்

‘உங்களுக்கு நானே பற்றுக்கோடு; என்னைப் பற்றிக்கொள்ளுங்கள்; வாழ்வு வளம் பெறும்; நீங்கள் உய்வடைவீர்கள்’ என்று அரசியல் தலைவர்களும் ஆன்மிகக் குருமார்களும் அழைப்பு விடுக்கிறார்கள். ஆராய்ந்து பற்றியவர்கள் பிழைத்தார்கள்; ஆராயாமல் பற்றியவர்கள் தொலைந்தார்கள். ஆற்றைக் கடப்பதென்று தீர்மானித்துவிட்டால் மண்குதிரையின் மீதா ஏறி அமர்வது?

உயிர் வளர்ப்பிலும் இதுதான் கதை. வெற்றிலைக் கொடி பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பு பதமான பொருள்; உயிர் பற்றிப் படர்வதற்கு எது பதமான பொருள்?

கொம்பர்இல் லாக்கொடி போல்அல மந்தனன் கோமளமே!

வெம்புகின் றேனை விடுதிகண் டாய், விண்ணர் நண்ணுகில்லா

உம்பர்உள் ளாய்மன்னும் உத்தர கோசமங் கைக்குஅரசே!

அம்பர மே, நில னே, அனல், காலொடுஅப்பு ஆனவனே!

- என்று உயிர் பற்றிப் படர்வதற்குக் கொழுகொம்பு கேட்கிறார் மாணிக்கவாசகர். ஏ வெட்டவெளியே! நிலமே! தீயே! காற்றே! தண்ணீரே! எல்லாமும் ஆனவனே! நீ வானத்தில் இருக்கிறாய் என்று எண்ணுகிறார்கள்! வானத்தில் இருப்பவர்களுக்கும் எட்டாமல் அதற்கும் அப்பாலே இருப்பவன் அல்லவா நீ? வானவர்க்கும் எட்டாத நீ எங்களுக்கென்று வந்து வையகத்தில் குடிகொண்டாயே, எங்கள் உத்தரகோச மங்கைக்கு அரசே! கொம்பு இல்லாத கொடி உலைவதுபோல, என் உயிர் உலைகிறது என் கோமளமே! என்னில் உன்னை ஊன்று; உன்னை எனக்குப் பற்றக் கொடு; என் உயிர் வெம்பிவிடாமல், உன்மேல் என்னைப் படர விடு.

கடவுளையே பற்றுக்கோடாக வேண்டுகிறார் மாணிக்கவாசகர். ஏனென்றால் கடவுள்தான் பிடுங்கிக்கொண்டு கையோடு வந்துவிடாத நிலையான பற்றுக்கோடு.

பற்றுக பற்றற்றான் பற்றினை, அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

என்கிறது வள்ளுவம். பேருந்துக்குள் இருந்தால் கம்பியைப் பற்றிக்கொள்கிறோம்; வானுந்துக்குள் இருந்தால் இடுப்புப் பட்டியைப் பூட்டி இருக்கையைப் பற்றிக்கொள்கிறோம்; குடும்பத்துக்குள் இருந்தால் உறவுகளைப் பற்றிக்கொள்கிறோம். இயக்கத்துக்குள் இருந்தால் தலைமையைப் பற்றிக்கொள்கிறோம். எதற்குள் இருந்தாலும் ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொள்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்குள்ளும் பரவி இருக்கும் இறைவனோ, எதையுமே பற்றிக்கொள்ளாமல் தான் தானாகவே நிற்கிறான். அவன் பற்றற்றான். அவன்தான் முன்னோடி. நாம் செய்ய வேண்டியதைச் செய்து காட்டிக்கொண்டிருக்கிறான். அவனைப் பற்றுங்கள். பற்று விடட்டும்.

அளிஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி

புளிஉறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்

தெளிஉறு வித்துச் சிவகதி காட்டி

ஒளிஉற வைத்துஎன்னை உய்யஉண் டாளே

புளி தன் இளமையில் தோலை விட்டுவிடாமல் ஒட்ட ஒட்டப் பற்றிக்கொண்டிருக்கிறது; பக்குவமாகிப் பழுக்கும்போது, தோலைத் தோடாக்கிப் பற்றை விட்டுப் பற்றிக்கொண்டிருக்கிறது. உயிரும் அப்படித்தான். பழுக்கும்வரை ஒட்ட ஒட்டப் பற்றிக்கொள்கிறது. பழுத்தபிறகு பற்றுவிட்டுப் பற்றி இருக்கிறது. புளியங்காயாகத் தோலைப் பற்றிக்கொண்டு இருந்தவரையில் பேசாமல் இருந்தவர்கள், புளியம்பழமாகித் தோடு விட்டபிறகு, புளியை எடுத்து உண்ணத் தலைப்படுகிறார்கள். பழுத்துப் பற்றுவிட்ட உயிரை இறைமை தன்னோடு சேர்த்துக்கொள்ளும்.

எங்கே எப்படிப் பற்றுவது?

முள்ளைக் கொண்டு முள்ளெடுப்பதுபோலத்தான் பற்றைக் கொண்டு பற்றெடுத்தல். கண்டறிந்த ஒன்றைப் பற்றுதல் எளிது. கண்டே அறிந்திராத கடவுளை எங்கே பற்றுவது? எப்படிப் பற்றுவது?

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உணர்வுஉறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே

வானம் என்பது ஒன்றுமில்லாத வெட்டவெளி. அந்த வெட்டவெளியைப் பற்றி நிற்கிறது மறைபொருளாகிய இறைமை. ஒன்றுமில்லாத வெட்டவெளியில் எதைப் பற்றி நிற்கிறது அது? பற்றுவதற்கு ஏதுமில்லாமல் தன்னையே தான் பற்றி நிற்கிறது. பற்றில்லாமல் நிற்கிற அதனைப் பற்றிக்கொள்க. எப்படி? எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் அது, உடலாகிய ஊனைப் பற்றி நிற்கிற உயிரையும் நிறைத்து நிற்கிறது. அங்கே பற்றுக. அங்கே பற்றுவதற்கும் பிடிமானம் இல்லையே என்றால், பிடித்துப் பழகியவர்க்குப் பிடிமானம் கிட்டும். எண்ணெய் பூசிய வழுக்குமரத்தில், நீரடிப்புக்கு நடுவில், உச்சிக்கு ஏறி முடிச்சவிழ்த்துப் பரிசை எடுப்பதுபோலத்தான் இறைமையைப் பற்றுவதும் விடுதலையை எடுப்பதும். வழுக்கத்தான் செய்யும். ஆனாலும் பற்றப் பற்றத் தலைப்படும். பெற்ற நான் சொல்கிறேன். பற்றுங்கள்; தலைப்படும் என்று தன்னையே முன்னிறுத்திச் சான்று பகர்கிறார் திருமூலர்.

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதுஇனிச்

சீர்ஆர் பிரான்வந்துஎன் சிந்தை புகுந்தனன்;

சீராடி அங்கே திரிவதுஅல் லால்இனி

யார்பாடும் சாரா அறிவுஅறிந் தேனே.

பற்றிக்கொண்டுவிட்டேன். சீர்மையின் இலக்கணமாகிய இறைவன் என் உள்ளத்துக்குள் புகுந்து நிற்கிறான். ‘இதைச் செய், அதைச் செய்யாதே; இப்படிப் பேசு, அப்படிப் பேசாதே; இந்த வழியில் வா, அந்த வழியில் போ’ என்றெல்லாம் யாரும் இனி என்னை அரட்டவும் முடியாது; ஆட்டுவிக்கவும் முடியாது. எனக்குள்ளே குடியிருக்க வந்துவிட்ட இறைவனோடு நான் எனக்குள்ளேயே சீராடிக் கிடப்பேனே அல்லாது, யார் பக்கமும் சார்ந்து நிற்க மாட்டேன். யார் பிடிக்குள்ளும் சிக்கவும் மாட்டேன்.

நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்;

நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்;

நடலை இல்லோம்;

ஏமாப்போம்; பிணிஅறியோம்;

பணிவோம் அல்லோம்;

இன்பமே எந்நாளும்

துன்பம் இல்லை;

தாம்ஆர்க்கும் குடிஆகாத்

தன்மை ஆன

சங்கரன்நல் சங்கவெண்

குழைஓர் காதில்

கோமாற்கே நாம்என்றும்

மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடிஇணையே

குறுகி னோமே.

- என்று பாடுகிறார் விடுதலைப் போராளி அப்பர். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை; சாவைக் குறித்து எங்களுக்கு அச்சமில்லை; நரகத்தில் சிக்கிக்கொண்டு உழல மாட்டோம்; எங்களிடம் பொய் இல்லை; ஆகவே களிப்போடு இருப்போம்; ஆகவே எங்களுக்கு நோய் இல்லை; யாருக்கும் பணிதல் இல்லை; எப்போதும் இன்பந்தானே அன்றித் துன்பம் இல்லை. ஏன்? யாரையும், எதனையும், எப்போதும் பற்றி நிற்காத, யாருக்கும் அடிமையாகாத தன்மை உடைய கோமானைப் பற்றிக்கொண்டு நிற்கிறவர்கள் நாங்கள். எங்களுக்கு ஏது தளை? யாருக்கு நாங்கள் அஞ்ச வேண்டும்? யாருக்கு நாங்கள் பணிய வேண்டும்? இனி எங்கள் கடவுள், எங்கள் உரிமை.

தன்விடுதலை உள்ளவரைச் சேர்ந்தால் நாமும் தன்விடுதலை உள்ளவர்கள் ஆவோம். பற்றற்று நிற்பவரைச் சேர்ந்தால், நாமும் பற்றற்று நிற்பவர்கள் ஆவோம். தன்விடுதலை உள்ளாரையும் பற்றற்று நிற்பாரையும் மட்டும் சேர்க.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

15 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்