மிகெய்ல் நைமி, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் ஆன்மிக எழுத்தாளர்களில் ஒருவர். இவர் எழுதிய ‘மிர்தாதின் புத்தகம்’ (The Book of Mirdad) என்ற உருவக நாவல் 1948-ம் ஆண்டு லெபனானில் ஆங்கிலத்தில் வெளியானது. அதற்குப் பிறகு, 1952-ம் ஆண்டு இந்தப் புத்தகம் அரேபிய மொழியில் வெளியானது. 2014-ம் ஆண்டு, கவிஞர் புவியரசின் மொழிபெயர்ப்பில் இந்தப் புத்தகம் தமிழில் வெளியானது.
“உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய தகுதி படைத்த புத்தகம்” என்று மெய்ஞ்ஞானி ஓஷோ இந்தப் புத்தகத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சூபி மறைஞானத்தையும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் தத்துவத்தையும் அடிப்படையாக வைத்து ‘மிர்தாதின் புத்தக’த்தை உருவக நாவலாக எழுதியிருக்கிறார் மிகெய்ல் நைமி. பெருவெள்ளப் பெருக்கின் இறுதியில், உலகமெல்லாம் மூழ்கிவிட்ட நிலையில், நோவாவின் கப்பல் கரையொதுங்கியதாக நம்பப்படும் அராரத் மலை உச்சியில் அமைந்திருக்கும் மடாலயத்தில் நடக்கும் ஒரு கதையாக இந்த நாவல் உள்ளது.
மிர்தாத் என்ற குருவுக்கும் அவருடைய சீடர்களுக்கும் நடக்கும் உரையாடலாக இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் நைமி. மனிதனின் இரட்டைத்தன்மையைக் களைந்து கடவுளைக் கண்டடைவது, அன்பு, வேதனையற்ற வாழ்வுக்கான வழி, எஜமான்-வேலைக்காரன் உறவு, படைப்பாற்றல் தரும் அமைதி, பணம், காலத்துக்கும் இறப்புக்குமான சுழற்சி, மனந்திரும்புதல், வயோதிகம் போன்ற விஷயங்களை இந்தப் புத்தகம் விவாதிக்கிறது.
நோவாவின் கப்பல்
நோவாவின் கப்பல் கரையொதுங்கிய இடத்தைக் காண வேண்டும் என்ற நோக்கத்தில், இளைஞன் ஒருவன் செங்குத்தான மலைமீது ஏற முடிவுசெய்கிறான். அவன் புறப்படும்போது ஏழு ரொட்டித் துண்டுகளையும் ஓர் ஊன்றுகோலையும் எடுத்துகொண்டு புறப்படுகிறான். ஆனால், அவன் மலையேறும்போது பல இன்னல்களைச் சந்திக்கிறான். தான் கொண்டுவந்த உணவு, ஊன்றுகோல், அணிந்திருந்த ஆடை என அனைத்தையும் இழக்கிறான்.
இறுதியாக, அந்த மலையின்மேல் உச்சியில் இருக்கும் பலிபீடத்தின் முனையில் கப்பல் வடிவில் அமைந்திருந்த பாழடைந்த மடாலயத்தை அடைகிறான். அந்த மடாலயத்தின் வாசலில் மயங்கிவிழும் அந்த இளைஞனை சமாதம் என்ற வயதான துறவி காப்பாற்றுகிறார். அவர் அவனுக்காக நூற்றைம்பது ஆண்டுகள் காத்திருந்ததாகக் கூறுகிறார்.
அவர் அவனிடம் ஒரு புத்தகத்தை ஒப்படைப் பதற்காகத்தான் இவ்வளவு காலம் காத்திருந்ததாகக் கூறுகிறார். அவர் அவனிடம் ஒப்படைத்தது ‘மிர்தாதின் புத்தகம்’. அந்தப் புத்தகத்தை அவனிடம் கொடுத்தவுடன் அவர் கல்லாகிப் போகிறார்.
மிர்தாத் காட்டும் பாதை
நோவாவின் மகன் சேம் என்பவனால் உருவாக்கப்பட்டது அந்த மடாலயம். அந்த மடாலயத்தில் ஒன்பது பேர் மட்டுமே வாழ்ந்துவர வேண்டும் என்பது நோவாவின் கட்டளை. அந்த மடாலயத்தின் மூத்த துறவியாக இருந்தவர் சமாதம். ஒன்பது பேரில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் தகுந்த ஒருவரை இறைவன் அனுப்புவார் என்பது மடாலயத்தின் நம்பிக்கை. அப்படி ஒருவர், இறக்கும்போது அந்த மடாலயத்துக்கு வந்துசேர்கிறார் மிர்தாத்.
ஆனால், அவரின் தோற்றத்தைப் பார்த்து அவரைத் துறவியாக ஏற்றுகொள்ள மறுக்கும் சமாதம், ஒரு வேலைக்காரனாகவே அவரை மடாலயத்துக்குள் அனுமதிக்கிறார். ஏழு ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன. ஆனால், இறைவன் அனுப்பிய நபர் வரவேயில்லை. அதனால் வேறு வழியில்லாமல் மிர்தாதை ஒன்பதாவது துறவியாக ஏற்றுகொள்கிறார் சமாதம். ஏழு ஆண்டுகள் எதுவும் பேசாமல் மடாலயத்தின் வேலைக்காரனாகப் பணியாற்றிவரும் மிர்தாத், தன் மவுனம் கலைத்துப் பேச ஆரம்பிக்கிறார். அவரது பேச்சையும் அதற்குப் பிறகான மடாலய நிகழ்வுகளையும் இளம்துறவி நரோண்டா பதிவுசெய்கிறார். அந்தப் பதிவுதான் ‘மிர்தாதின் புத்தகம்’.
முதல் மூன்று அத்தியாயங்கள் நாவலைப் போன்று தொடங்கினாலும், அதற்குப்பிறகான முப்பத்தியேழு அத்தியாயங்கள் குருவுக்கும் சீடர்களுக்கும் நடக்கும் உரையாடலாக விரிகின்றன. ஆன்மிகத் தேடலைக் கொண்டவர்கள் அனைவருக்கும் இந்தப் புத்தகம் என்றென்றும் வழித்துணையாக இருக்கும். நோவாவின் கப்பலால் உலகம் மீண்டும் எப்படி உய்வுற்றதோ, அதேபோல ‘மிர்தாதின் புத்தகம்’ தனக்குள் தொலைந்துபோன மனிதனை மீண்டும் உய்விக்கும் பாதைகளைக் கொண்டது. படிப்போர் பயன்பெறலாம்.
மிர்தாதின் அன்பு மொழிகள்
# அன்பே இறைவனின் சட்டம். அன்பைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் நீங்கள் வாழ்கிறீர்கள். வாழக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள். மனிதனுக்கு வேறு எந்தப் பாடமும் தேவையில்லை.
# வாழ்வு மரம் என்பது நீங்களே. உங்களைப் பிளவுபடுத்திக்கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு கனியை இன்னொரு கனிக்கு எதிராகத் திருப்பிவிடாதீர்கள். ஓர் இலையை மற்றொரு இலைக்கு எதிராகவும் ஒரு கிளையை மற்றொரு கிளைக்கு எதிராகவும் மரத் தண்டை வேர்களுக்கு எதிராகவும் மரத்தைத் தாய் மண்ணுக்கு எதிராகவும் திருப்பிவிடாதீர்கள். மரத்தின் ஒரு பகுதியை மட்டும் நேசித்து மற்ற பகுதிகளைப் புறக்கணிக்கும்போது, அதைத்தான் நீங்கள் துல்லியமாகச் செய்கிறீர்கள்.
# அன்பே வாழ்வின் சாறு. வெறுப்பு, மரணத்தின் சீழ். ஆனால், ரத்தம் குழாய்கள் வழியாகத் தடையின்றிப் பாய்வதுபோல, அன்பு உடலெங்கும் பாய வேண்டும். ரத்தம் தடைபடும்போது, அது நோயாகிறது. வெறுப்பு என்பது தடைபட்ட அன்புதான். அன்பு தடைபடும்போது அது கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும், வெறுப்பவருக்கும் வெறுக்கப்படுபவருக்கும் கொடிய நஞ்சாக மாறுகிறது.
# அன்பினால் வேதனையடையும்வரை, நீங்கள் உண்மை அன்பைக் கண்டு கொள்ளவில்லை, அன்பின் தங்கத் திறவுகோலைக் கண்டு கொள்ளவில்லை என்று பொருள். ஏனென்றால், நிலையற்ற உங்கள் சுயத்தை நீங்கள் நேசிப்பதால் உங்கள் அன்பும் நிலையற்றதாகிறது.
# உங்கள் இதயத்தில் வெறுப்பிருக்கும்வரை, உங்களால் அன்பின் ஆனந்தத்தை உணர முடியாது. எதை நேசித்தாலும், யாரை நேசித்தாலும், அது உண்மையில் உங்களையே நேசிப்பதுதான். வெறுப்பும் அப்படித்தான். நீங்கள் எதை அல்லது யாரை வெறுத்தாலும், அது உண்மையில் உங்களேயே வெறுப்பதுதான்.
# தோல்வி தவிர்த்து வெற்றிகொள்ள, சர்வ வல்ல விருப்பத்தை ஒப்புக்கொள்ளும்படி நான் வேண்டுகிறேன். அதன் மர்மப் பையிலிருந்து அதை, முணுமுணுப்பின்றி ஏற்றுக்கொள்ளுங்கள். நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்; நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களுக்குச் சேரவேண்டிய நியாயமான பங்கு என்று ஏற்றுக்கொள்ளுங்கள்; அவற்றின் மதிப்பையும் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உமது விருப்பத்தின் மறைந்திருக்கும் வழிகளை நீங்கள் புரிந்துகொள்ளும்போது உங்களுடைய சர்வ வல்லமை கொண்ட விருப்பம் எது என்று புரிந்துவிடும்.
மிகெய்ல் நைமி
aanma-3jpgrightகவிஞரும் தத்துவ அறிஞருமான இவர், லெபனானில் 1889-ம் ஆண்டு பிறந்தார். தன் குழந்தைப் பருவத்தை பாலஸ்தீனத்திலும் உக்ரைனிலும் கழித்தார். வாஷிங்டன் –சியாட்டில் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைப் படித்தார். படிப்பை முடித்து நியூயார்க் நகரத்தில் குடியேறிய இவருக்கு எழுத்தாளர் கலீல் ஜிப்ரானுடன் நட்பு உருவானது.
அரேபிய இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதற்காக ‘நியூயார்க் பென் லீக்’ என்ற அமைப்பை இவர்கள் இருவரும் எட்டு எழுத்தாளர்களுடன் இணைந்து உருவாக்கினார்கள்.
இந்த அமைப்பின் தலைவராக கலீல் ஜிப்ரானும் துணைத் தலைவராக நைமியும் பணியாற்றினார்கள். கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற வாழ்க்கை வரலாற்றை இவர் எழுதியிருக்கிறார். இவரது கவிதைளின் தொகுப்பு ‘ஐலிட் விஸ்பரிங்க்ஸ்’ (Eyelid Whisperings) 1945-ம் ஆண்டு வெளியானது.
இவரது கவிதை உலகம் ஆன்மிகத் தத்துவங்களால் நிறைந்தது. ‘தியானப் பார்வை கொண்ட கவிஞர்’ என்று இவர் அறியப்படுகிறார். இவர் 1988-ம் ஆண்டு, லெபனான் தலைநகரம் பெய்ரூத்தில் மறைந்தார்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: gowri.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago