தெய்வத்தின் குரல்: புலன் வழியே புலனுக்கு அப்பால்

By செய்திப்பிரிவு

மந்திர சப்தங்களுக்கு எப்படிக் கண்டமாயிருந்து கொண்டே அகண்டத்தில் சேர்க்கிற சக்தியிருக்கிறதோ, அப்படியே சங்கீத சப்தங்களுக்கும் சக்தி இருக்கிறது. ஸ்வரஸ்தானம் ஒன்றைத் தீர்க்கமாக சுருதி சேர நீட்டியோ, அல்லது கமகமாக நன்றாக இழைத்தோ மூர்ச்சனையின் உச்ச நிலையை ஸ்வச்சமாகத் தொட்டு விடுகிறபோது கண்டமே அகண்டானுபவத்தில் சேர்த்து விடுகிறது.

நாத யோகம்

இந்த அகண்டானுபவம்தான் அத்தனை வேத, வேதாந்த, யோக, மந்திர, தந்திர சாஸ்திரங்களுக்கும் லட்சியமாயிருப்பது. இதைச் சாதித்துத் தரும் ஸ்தானத்தில்தான் ஓசையை, ஒலியை நாதப் பிரம்மம், சப்தப் பிரம்மம் என்று சாக்ஷாத் பரமாத்மாவாகச் சொல்வது. அதை goal -ஆக நினைத்து, அதாவது காது என்ற இந்திரியத்தின் மூலம் மனசின் இந்திரிய சுகத்துக்காக இன்றி, ஆத்ம சௌக்கியத்தை இலக்காகக் கருதி சங்கீத அப்பியாசம் பண்ணும்போது அது ‘நாதோபாஸனை’, ‘நாத யோகம்’ என்ற உயர்ந்த பெயரைப் பெறுகிறது.

அர்த்தத்தோடு, அக்ஷரத்தோடு கலந்து மனமுருகிப் பாடும்போது பாடுகிறவருக்கும் கேட்கிற சதஸ் முழுவதற்கும் பரமாத்மாவிடம் தோய்ந்து நிற்கிற பெரியதான இன்பம் கிட்டுகிறது. ஜபம், தபம், அஷ்டாங்க யோகம், தியானம் முதலானவை இந்திரிய சம்பந்தமில்லாதவையாகவும் சுலபத்தில் அப்யஸிக்க முடியாதவை யாகவும் இருப்பவை. ஆனால், அவற்றின் பலனான அதே ஈச்வராநுபவம் இந்திரியத்துக்கு சௌக்கியமளிப்பதாகவும், சுலப சாதகமாகவும் உள்ள சங்கீதத்தால் கிடைத்துவிடுகிறது.

விபூதி யோகம்

இந்திரிய விஷயங்கள் போல இருப்பவற்றாலேயே இந்திரியத்துக்கு அப்பாற்பட்ட ஆத்மானந்தத்தை, ஈஸ்வர அனுபவத்தை ஏற்படுத்தித் தருவது நம் மதத்தின் சிறப்பு அம்சம். பூஜையில் செய்கிற பஞ்சோபசாரம் என்ற கந்த, புஷ்ப, தூப, தீப, நைவேத்யங்கள் பஞ்சேந்திரிய செளக்யத்தைத் தரக்கூடியவையால் ஆனவைதாம். உபநிஷத்துக்களிலே பரமாத்மாவை ஓம்கார ஸ்வரூபமாக, ரஸ ஸ்வரூபமாக, ஜ்யோதி ஸ்வரூபமாகவெல்லாம் சொல்லியிருக்கிறது ஓம்காரம் கேட்கிற இந்திரியத்துக்கானது; ரஸம் ருசி பார்க்கிற இந்திரியத்துக்கானது; ஜ்யோதிஸ பார்க்கிற இந்திரியத்துக்கானது.

இந்திரிய செளக்யங்களைச் சிற்றின்பம் என்கிறோமானாலும் பரமாத்ம சம்பந்தத்தோடு அனுபவிக்கும்போது இவையே பேரின்பம் தருகின்றன என்பதை உபநிஷத்துக்கள் பரமாத்மாவையே இன்ப வடிவமாக, ஆனந்த ஸ்வரூபமாகச் சொல்லும் போது நிலைநாட்டி விடுகின்றன. இந்திரிய நுகர்ச்சி வஸ்துக்களாகத் தோன்றுகிறவற்றிலும் ஈஸ்வர ஸாந்நித்யமிருப்பதை பகவானும் விபூதி யோகத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ஈஸ்வரன் இல்லாத இடமில்லை என்றால், இவற்றிலும் அவனுடைய சாந்நித்யம் இருந்துதானே ஆகவேண்டும்? பகவான் தன் விபூதிகளைச் சொல்லும்போது, “ஜ்யோதிஸ்களில் நான் ஸூர்யன்” என்னும்போது ஒளியாக இருப்பதைச் சொல்லிக்கொள்கிறார். இங்கே உஷ்ணமும் அவர்தானென்றாகிறது. அவரே ‘மாஸத்தில் நான் மார்கழி’ என்கிறபோது பனியாகவும் குளிராகவும் இருக்கிறார். தான் ரிதுக்களுக்குள் இயற்கை இன்பம், இந்திரிய செளக்யம் முழுவதும் தரும் வசந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்.

இங்கே ‘வஸந்தம்’ என்பதற்கு ‘குஸுமாகர’ என்ற பெயரை பகவான் சொல்கிறார். அதாவது ‘புஷ்பித்துக் குலுங்கச் செய்கிற ரிது’ என்கிறார். புஷ்பத்தைச் சொன்னதால் ஸ்பர்சானந்தம், நேத்ரானந்தம், க்ராணானந்தம் என்னும் மூக்கின் இன்பம் மூன்றையும் சொன்னதாகிவிடுகிறது. பூர்ணத்தைப் பின்னப்படுத்திப் பார்க்கும்போது நமக்கு எதெல்லாம் சிற்றின்பத்தை மாத்திரம் தந்து பேரின்பத்தைத் தடுக்கின்றனவோ அவற்றாலேயே ஈச்வர உபாஸனை செய்யும்போது அவை பூர்ணர்த்தில் நம்மைச் சேர்க்கும் பேரின்பத்துக்கு சாதனமாகும் என்பதே தாத்பரியம்.

சப்த பிரம்ம அனுபவம்

சப்தமே பிரம்மம், ரூபமே பிரம்மம், ரஸமே பிரம்மம், கந்தமே பிரம்மம், ஸ்பரிசமே பிரம்மம் என்று இப்போதே நம்மால் முழுதும் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இதைக் கொஞ்சம் ஞாபகமாவது படுத்திக்கொண்டேயிருந்தால் ஒருநாள் பலன் தெரியாமல் போகாது. இவற்றிலே சங்கீதத்தில் மெய்மறந்து போய் துளித்துளியாவது சப்த ப்ரம்ம அனுபவத்தைப் பெறுவது மற்றதைவிட நமக்கே சற்று நன்றாகத் தெரிவதாயிருக்கிறது.

சங்கீதக் கலை என்பது கொஞ்சங்கூடக் கஷ்டமில்லாமல் மோக்ஷத்தையே வாங்கிக் கொடுக்கக் கூடியது. வீணை வாத்தியம் ஒன்றை வைத்துக்கொண்டு ஸ்வரசுத்தியோடு கலந்து வாசித்து ஆனந்தமயமாக இருக்கக் கற்றுக்கொண்டு விட்டால் யோகம் பண்ண வேண்டாம், தபஸ் பண்ண வேண்டாம். சுலபமாக மோக்ஷத்தையே அடைந்துவிடலாம். அதோடு யோகி யோகம் செய்தால், தபஸ்வி தபஸ் செய்தால் அவர்களுக்கு மட்டுமே ஆத்மானந்தம் உண்டாகிறது. சங்கீதம் ஒன்றில்தான், அதை அப்யாஸிக்கிறவர் மட்டுமின்றிக் கேட்கிற எல்லோருக்குமே அதே அளவு ஆத்மானந்தம் உண்டாகிறது.

வாய்ப்பாட்டு, வீணை மாதிரி ஸ்வரங்களோடு சேர்ந்த சங்கீதம்தான் என்பதில்லை; ம்ருதங்கம், ஜால்ராவில்கூட நல்ல லயசுத்தத்தோடு சுநாதம் கலந்து வந்துவிட்டால் அது தெய்வீக ஆனந்தத்தில் நம்மைச் செருகிவிடுகிறது.

(தெய்வத்தின் குரல் - மூன்றாவது பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்