ஒன்றில் இரண்டு 11: முக்தி அளிக்கும் அக்கினி தலம்

By ஜி.எஸ்.எஸ்

அக்கினித்தலமான திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று கருதப்படக்கூடிய தலமாகும். இத்தலத்திலுள்ள 2,668 அடி உயரம் கொண்ட லிங்கம் திருவண்ணாமலையின் விசேஷங்களில் ஒன்றாகும்.

ஆம், திருவண்ணா ‘மலை’யைத்தான் குறிப்பிடுகிறோம். இந்த மலையின் அடிவாரத்தில்தான் அருணாசலேஸ்வரர் ஆலயம் இருக்கிறது.  சிவபெருமானின் ஒரு வடிவம்தான் இம்மலை என்று நம்பப்படுகிறது. ஆக, கிரிவலம் என்பது மலையை வலம் வருவது மட்டுமல்ல; சிவபெருமானை வலம் வருவதும்தான்.

இந்தியாவின் மிகப் பழமையான மலைகளில் ஒன்று திருவண்ணாமலை.  ரிக் வேதத்தில்கூட இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கான சாதுக்களும் ரிஷிகளும் இங்கு வருகிறார்கள்.

மலைப்பாதையின் சுற்றளவு 14 கிலோ மீட்டர். பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த மலைப்பாதையில் வலம் வருகிறார்கள். திருவண்ணாமலை ஆலயத்தின் ஆறாவது பிரகாரம் (சுற்று) மாடவீதி என்றும், ஏழாவது பிரகாரம் கிரிவலம் என்றும் கருதப்படுகிறது.  ஆனால், பலருக்கும் அந்த மலையே அருணாசலேஸ்வரர்தான்.  திருவண்ணாமலை வேறு பல பெயர்களாலும் அறியப்படுகிறது. அவற்றில் சில -  அருணகிரி, அருணாசலம், சோனாசலம், சோனகிரி, அருணை.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இந்த மலையின்மீது கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.  அது சிவனடியார்களுக்கு மிகப் புனிதமான நிகழ்வு.  பல்லாயிரக்கணக்கானோர் அன்று திருவண்ணாமலை நகரில் குவிகின்றனர். மலைமேல் தீபம் ஏற்ற உரிமை பெற்றவர்கள் பர்வத ராஜகுலம் எனப்படும் மீனவ குலத்தினர்.

மலையைச் சுற்றி மகான்கள்

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதை  பரணி தீபம் என்றும்  மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் நெக்குருகக் குறிப்பிடுகிறார்கள். மகாதீபத்துக்கு 3,000 கிலோ நெய்யும் 1000 மீட்டர் காடா துணி (திரி)யும் தேவைப்படுகிறதாம்.  அன்று நெல்பொரியுடன் வெல்லப்பாகு சேர்த்து பொரி உருண்டை பிடித்து ஸ்வாமிக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.

இந்த மலையைச் சுற்றி வாழ்ந்த மகான்கள் தங்கள் ஆசிரமங்களை அமைத்துள்ளனர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், ராம்சுரத் குமார் ஆகியோரின் சமாதிகளும் ஆசிரமங்களும் மலையைச் சுற்றியமைந்துள்ளன.

ரமண மகரிஷி சுமார் 60 வருடங்கள் இங்கு தங்கியிருக்கிறார்.

விருபாக்ஷ குகையில் பாதாள லிங்கேஸ்வரர் சன்னிதியில் தவம் செய்து ஞானம் பெற்றார்.  அவர் குறைவாகப் பேசி அதிகமானவற்றைப் புரியவைப்பார்.  அவர் ‘’ஒருமுறை கிரிவலம் செய்து பார்’’ என்று சிலருக்குக் கூறியதுண்டு.

சில சித்தர்களின் ஜீவசமாதிகளும்  இங்கு இருப்பதால் இந்த நம்பிக்கை மேலும் அதிகமாகவே இருக்கிறது.

கிரிவலம் வரும்போது சித்தர்கள் ரூபமாகவோ அரூபமாகவோ இங்கு உடன் வலம்வரக் கூடும் என்றும் அவர்களின் காற்று நம்மீது பட்டால் அது நமக்குப் பெரும் நன்மைகளை விளைவிக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

கிரிவலத்தின்போது அஷ்ட லிங்கங்களைக் காணலாம்.  ஒவ்வொருவரும் தனி சன்னிதியுடன் காணப்படுகின்றனர்.  ஒரு சன்னிதியைத் தரிசித்த பிறகு மேலும் சிறிது கிரிவலம் வந்த பிறகு அடுத்த சன்னிதியைத் தரிசிக்கலாம் எனும் வகையில் இவை அமைந்துள்ளன.

பிரம்மனின் உபதேசம்

முதலில் அமைந்துள்ளது இந்திர லிங்கம்.  அடுத்து அக்னி லிங்கம், பிறகு அடுத்தடுத்து எமலிங்கம், மிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகியோரைத் தரிசிக்க முடியும். ஜனக ரிஷிக்கு பிரம்மன் கிரிவலம் குறித்து உபதேசம் செய்திருக்கிறாராம்.

இந்த மலை கிருத யுகத்தில் (ராமாவதாரத்துக்கு முந்தைய கால கட்டம்) தீயாக இருந்திருக்கிறது. 

திரேதாயுகத்தில் (ராமபிரான் காலத்தில்) இது மாணிக்க மலையாக இருந்திருக்கிறது. 

துவாபர யுகத்தில் (கண்ணனின் காலத்தில்) இது தங்க மலையாக இருந்திருக்கிறது. 

கலியுகத்தில் அது பாறைகளால் ஆன மலையாக இருக்கிறது என்பது ஐதீகம்.

செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் வருவது நல்லது என்கின்றனர்.  இது பலருக்கும் வியப்பளிக்கலாம். காரணம் திங்கட்கிழமைதான் (சோம வாரம்) சிவ ஆலயங்களுக்குப் பொதுவாக உகந்தது. அன்றுதான் சிறப்பு வழிபாடுகள் இருக்கும்.

ஆனால், பஞ்சபூதத் தலங்களில் அக்கினிக்கான தலம் திருவண்ணாமலை. அக்கினிக்குரிய கிரகம் அங்காரகன். எனவே, இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்குச் செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்று கிரிவலம் வருவோருக்கு அதிகப் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தேவாரப் பதிகம் ஒன்றில் “அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே’’ என்கிறது.  உயர்ந்து நிற்கும் திருவண்ணாமலை சிவ ரூபகமாகக் காட்சியளித்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

10 days ago

ஆன்மிகம்

12 days ago

மேலும்