கண்ணன் தயாரித்த அறுசுவை உணவு

கோகுலாஷ்டமி கொண்டாட்டம் கண்ணன் பிறந்த தினமாக இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. கண்ணனைக் குறித்த பாடல்களும், ஆடல்களும், பூஜைகளும் அநேகம். ஆனால் தீபாவளி இனிப்புகள் போல அதிகளவில் பட்சணம் செய்து நிவேதனம் செய்வது இந்த கோகுலாஷ்டமி அன்றுதான்.

அவை திரட்டுப் பால், நெய் மணக்கும் பால் கோவா, வெல்லச் சீடை, உப்புச் சீடை, களவடை, மைசூர் பாகு, லட்டு, அதிரசம் உள்ளிட்ட அவரவர்களுக்குப் பிடித்த உணவை கண்ணனுக்கு நிவேதனம் அளிப்பது இந்திய கலாச்சாரத்தில் ஒன்றாகவே ஆகிவிட்டது. ஆனால் கிருஷ்ணனுக்குப் பிடித்தது காலாதான். அறுசுவையும் ஒன்றாகச் சேர்ந்த இதன் சுவையே கோகுலக் கிருஷ்ணனுக்குப் பிடிக்குமாம். இதற்குப் பின்னால் சுவையான ஒரு கதை உள்ளது.

ஒரு முறை கண்ணனும் அவனது நண்பர்களும் மாடு மேய்க்கத் தொலை தூரம் செல்ல விரும்பினார்கள். சோலைகள் மிகுந்த அவ்விடத்திற்குச் செல்லும்பொழுது, பட்சணங்கள், சாப்பாடு ஆகியவற்றைக் கட்டிக்கொண்டு செல்லலாம் என்று அனைவரும் தீர்மானித்தார்கள். அவரவர்கள் இல்லத்தில் அம்மா கட்டித் தருவதை எல்லாம் எடுத்துக்கொள்ளச் சொன்னான் கண்ணன். நூற்றுக்கணக்கான மாடுகளை ஓட்டிக்கொண்டு சிறுவர்கள் கண்ணனுடன் தொலைதூரத்தில் உள்ள அந்தச் சோலைக்குச் சென்றார்கள்.

பசுக்கள் பசும் புல் தரையில் ஆனந்தமாக மேய்ந்தன. மதிய நேரமும் வந்தது. அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். கண்ணன் தனது சாப்பாட்டு மூட்டையைப் பிரித்தான். அதில் விதவிதமான பட்சணங்கள் இருந்தன. நண்பர் குழாமில் இருந்த பலரும் தங்களது சாப்பாட்டு மூட்டைகளைப் பிரித்துவிட்டனர். இவர்களில் ஏழ்மை நிலையில் இருந்த சிலர் வெட்கப்பட்டுக்கொண்டு, தங்கள் மூட்டைகளைப் பிரிக்க மறுத்தனர். கண்ணனே அம்மூட்டைகளைப் பிரித்தான். அதில் முட நாற்றமுடைய பழைய மோரும் சாதமும் கலந்திருந்தன.

கண்ணா நீயோ ராஜா வீட்டுப் பிள்ளை. உன்னுடைய உணவு பிரமாதமாக இருக்கும். அதனால்தான் நாங்களாக எங்கள் சாப்பாட்டு மூட்டையைத் திறக்கவில்லை என்று தயங்கித் தயங்கிக் கூறினார்கள். கண்ணனோ இதனைக் காதிலேயே வாங்காமல், அங்கு இருந்த வாதா மரத்திலிருந்து நூறு பெரிய இலைகளைப் பறிக்கச் சொன்னான். அந்த இலைகளைச் சிறு குச்சிகளால் இணைத்து மிகப் பெரிய சாப்பாட்டு இலையாக மாற்றிவிட்டான் கண்ணன். அவ்விலையில் அனைவரது உணவும் கொட்டப்பட்டது.

அந்த புளிப்புப் பழைய சாதமும் சேர்க்கப்பட்டது. இதனைத் தன் கைகளால் பிசைந்தான் கண்ணன். பெரிய உருண்டைகளாக ஆக்கி அவற்றை ஒவ்வொரு உருண்டையாகத் தன் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டு, மீதம் இருந்ததைத்தான் உண்டு ரசித்தான் கண்ணன். அறுசுவையும் கொண்ட இந்த உணவிற்கு காலா என்று பெயர் என்பர் மகாராஷ்டிர வாசிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE