ஈன்றாள், மகள், தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா உறையற்க – ஐம்புலனும்
தாங்கற்கு அரிதுஆக லான்
(ஆசாரக்கோவை, 65)
என்கிறது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை. தன்னைப் பெற்றவள், தான் பெற்றவள், தன்னோடு பிறந்தவள் என்றாலும் அவர்களோடு சான்றோர் தனித்து இருக்க மாட்டார்கள். ஏனென்றால், ஐம்புலன்களையும் அடக்கி அமைதியாக இருப்பது சான்றோருக்குமேகூடக் கடினமான வேலைதான்.
சான்றோரின் நிலையே இது என்றால், சாதாரணர்களின் நிலை? பெயர்த்தியின் வயதுள்ள சிறு பெண்ணொருத்தியைப் பெயரன் பெயர்த்தி எடுத்துக் கிழண்டுபோன சில காமுகர்கள் சிதைத்துவிட்டார்கள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று பெண்ணை எந்தப் பருவத்தில் பார்த்தாலும் துய்க்கும் பொருள் என்றே பார்ப்பார்கள்போலும். அலுத்துப் போவார்கள் பெண்கள். அவ்வாறு அலுத்துப்போன ஒருத்தி, கிழவியாக மாறும் வரம் கேட்டு ஔவை ஆனாள் என்று ஒரு தமிழ்த் தொன்மம்.
அவ்வாறு கேட்டுப் பெற்றுக்கொண்டவள் ஔவை ஒருத்தி மட்டுமே அல்லள். காரைக்கால் அம்மையும் இருக்கிறாள். அவள் ஔவையைக் காட்டிலும் இன்னும் ஒரு படி கூடுதல். நரை திரை வந்து கிழவியாகிப் போனாலும்கூட, பேய் உருவத்தை வேண்டிப் பெற்றுக்கொண்டாள். அவள் பாடுகிறாள்:
கொங்கை திரங்கி, நரம்பு எழுந்து,
குண்டுகண், வெண்பல், குழிவ யிற்றுப்
பங்கி சிவந்து, இரு பற்கள் நீண்டு,
பரடுஉயர் நீள்கணைக் கால்ஓர் வெண்பேய்,
தங்கி, அலறி, உலறு காட்டில்,
தாழ்சடை எட்டுத் திக்கும் வீசி,
அங்கம் குளிர்ந்துஅனல் ஆடும் எங்கள்
அப்பன் இடம்திரு ஆலங் காடே.
(காரைக்கால் அம்மையார், மூத்த திருப்பதிகம், 11:02:1)
திரக்குதல் என்றால் வற்றிச் சுருங்கச் செய்தல். சமைப்பதற்காகக் கத்தரிக்காயைத் திரக்குவார்கள். யாரேனும் சமைந்து திரண்டிருக்கும் கொங்கைகளைத் திரக்குவார்களோ? திரக்குவார்கள். திரக்கியிருந்தது ஒரு சுடுகாட்டுப் பேய். பேயின் தோற்றத்தைக் கேளுங்கள்:
திரங்கிய கொங்கைகள்; புடைத்து எழுந்த நரம்புகள்; குழிக்கண்கள்; சாணை பிடித்ததுபோலப் பளிச்சிடும் கூரிய பற்கள்; அதில் கோரைப் பற்கள் இரண்டு கடைவாயில் நீண்டு தெரிந்து அச்சுறுத்துகின்றன; குழி விழுந்த வயிறு; சிவந்திருக்கிற மயிர்; புடைத்துக்கொண்டு தெரிகிற புறங்கால்; இந்தத் தோற்றத்தில், ரத்தம் சுண்டி வெளுத்துப்போன ஒரு வெள்ளைப் பேய். மற்ற பேய்கள் பசிக்குப் பிணம் மேயப் போயிருக்க, அந்த ஆலமரச் சுடுகாட்டில் இந்த ஒற்றைப் பேய் மட்டும் ஆட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மொட்டைச் சுடுகாட்டில் யார் ஆடுகிறார்கள்? அப்பன் சடையன்.
வெண்சாம்பல் புழுதி பறக்க அனலில் ஆடினாலும் அங்கம் குளிர்ந்து ஆடுகிறான். எட்டுத் திக்கும் சடைவீசி ஆடுகிறான். பார்த்துக்கொண்டிருக்கும் காரைக்கால் பேயோ ஆனந்தத்தில் பாடுவதாக நினைத்துக்கொண்டு அலறுகிறது.
எது பேய்?
பேய்மை என்பது இயல்பை மீறியது. இயல்புக்குப் பகையாய் இருப்பதெல்லாம் பேய். பேய்ச் சுரைக்காய், பேய் முருங்கை, பேய்ப் புடலை, பேய்ச் சுண்டை, பேய்க் கரும்பு என்று இவை எல்லாம் இயல்பு மீறியவை; இயல்பான சுவை கூட்டாமல் கசப்புச் சுவை கூட்டுபவை.
குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்துஎன்ன?
குட்டநோய் கொண்டும் என்ன?...
உணவுஅற்ற பேய்ச்சுரை
படர்ந்துஎன்ன படராது
உலர்ந்துதான் போகில் என்ன?...
(அறப்பளீசுர சதகம், 22)
மனித உணவுக்குப் பயன்படாத பேய் முருங்கையும் பேய்ச் சுரையும் தழைத்தால் என்ன? வெம்பிச் செத்தால்தான் என்ன? என்று வம்பு பேசுகிறது அறப்பளீசுர சதகம். ‘உலகம் பிறந்தது எனக்காக! எனக்குப் பயன்படாத உலகம் எதற்காக?’ என்ற தன்-மையப் பார்வை அதற்கு. போகட்டும். ‘ஏழு மணிக்கு மேலே இன்பலட்சுமிகளாக’ இருக்கவென்று கற்பிதம் செய்யப்பட்ட பெண்கள், விடுதலை விரும்பிகளாகி, சிற்றின்ப உலகுக்கு அப்பாலே சென்றுவிட்டார்கள் என்றால், அவர்கள் இயல்பு மீறியவர்கள்தாமே? பேய்ப்பெண்கள்தாமே?
சிவனுக்கு வரித்துக்கொண்ட அக்கமாதேவி
சிற்றின்பம் விட்டு மற்றின்பம் விரும்புகிற பெண் கொங்கை திரங்கிப் பேயாகித்தான் அதைப் பெற்றுக்கொள்ள முடியுமா? கொங்கை திரங்கிப் பேயாகாமல், நரைகூடிக் கிழப்பருவம் எய்தாமல், இருக்கும்நிலையில் இருந்தே அதைப் பெற்றுக்கொள்ள முடியாதா? முடியும். அவ்வண்ணம் பெற்றுக்கொண்டவர் அக்கமாதேவி.
ஆண்டாள் பெருமாளுக்குத் தன்னை வரித்துக்கொண்டதைப் போல சிவனுக்குத் தன்னை வரித்துக்கொண்டவர் அக்கமாதேவி. ஓர் ஆண் சிவனுக்கு அடியான் ஆனால், அவனைச் சிவனடியான் என்று அழைத்துப் பெருமைப்படுத்தும் உலகம், ஒரு பெண் சிவனுக்கு அடியாள் ஆனால், அவளைத் தேவரடியாள் என்று அழைத்துத் தன் தேவைகளுக்குப் பயன்படுத்த நினைக்கிறது. ஆனால், அக்கமாதேவி என்ற மாதேவி அக்காவோ ஆண்கள் அனைவருக்கும் அக்கா ஆனவர்.
வயிற்றுக்குப் பிச்சை;
தவிப்புக்குத் தண்ணீர்;
தூங்கிக் கிடக்க இடிந்த கோவில்;
உயிருக்காக வாங்கிக் கிடக்க,
சென்ன மல்லிகார்ச்சுனா! நீ!
ஏது குறை எனக்கு?
- என்று அக்கா இறைவனைக் கேட்கும்போது ‘உடைக் கோவணம் உண்டு; உறங்கப் புறந் திண்ணை உண்டு’ என்று பாடிய பட்டினத்தார் நினைவில் வருகிறார். ஆணாகிய பட்டினத்தார்கூட உடையாகக் கோவணம் கேட்கிறார்; பெண்ணாகிய அக்காவோ தன் தலைமயிர்க் கற்றைகளையே உடையாக்கிப் போனாள். பேய்ப் பெண்தானோ?
அறிவுப் பெருவெளியை அடையும் மார்க்கம்
இறைவனை ஆண் என்று கற்பித்து, தம்மையும் ஆணாக வைத்துக்கொண்டவர்கள், தம்மை அடையாள மாற்று செய்து, பெண்ணாகப் பாவித்துக்கொண்டு, இறைவனோடு தங்களைச் சேர்ந்துகொள்கிறார்கள். ஆனால், பெண்களோ இந்த அற்ப அடையாளச் சிக்கலுக்கு ஆட்படாமல் பெண்களாக இருந்தே இறைவனைத் தங்களுக்குள் சேர்த்துக்கொள்கிறார்கள். தன்னோடு சேர்ந்துகொண்டாலும் சரி, தங்களோடு சேர்த்துக்கொண்டாலும் சரி, இறைமைக்கு உடன்பாடுதான். இந்த அடையாளச் சிக்கலைப் பாடுகிறார் திருமூலர்:
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது;
சோதிநல் லாளைத் துணைப்பெய்ய வல்லிரேல்,
வேதனை தீர்தரும் வெள்ளடை ஆமே.
(திருமந்திரம், 1157)
மாது நல்லாளும் மணாளனும் ஒரே உருவத்தில் பாதிப் பாதியாக இருக்கிறார்கள். மாதுநல்லாள் இடங் கொடுத்ததால் மணாளன் வந்து ஏறிக்கொண்டானா? அல்லது மணாளன் இடங் கொடுத்ததால் மாதுநல்லாள் வந்து அடைந்துகொண்டாளா? ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையுமா? மாது கொடுத்ததால் பாதி பெற்றவன் பகவன். கொடுத்ததைக்கூடப் பேசிக்காட்டாத சோதி நல்லாள் அவள். நீங்களும் அவனைப்போலவே அவளைத் துணைக்கு வைத்துக்கொள்ளுங்கள். அறிவுப் பெருவெளியை அடைவீர்கள்.
வெள்அடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்அடை யார்அக் கமழ்குழ லார்மன
அள்ளடை யான்ஆம் வகைத்திறம் ஆய்நின்ற
பெண்ஒரு பாகம் பிறவிபெண் ஆமே.
(திருமந்திரம், 1158)
அறிவுப் பெருவெளியாய் விரிந்து கிடப்பவன், கள் உடைய மலர்களைச் சூடி மணக்கும் கூந்தல் உடைய பிராட்டியின் மனத்தில் அடைபட்டுக் கிடக்கிறான். அவன் இருக்கும் வகை என்ன என்று பார்த்தால், ஆணாகவும் இருக்கிறான்; பாதிப் பெண்ணாகவும் இருக்கிறான்; பெண்ணாகவும் இருக்கிறான்.
அன்னே அனேஎனும்
சிலசமயம்; நின்னையே
ஐயாஐயா என்னவே
அலறிடும் சிலசமயம்...
என்னே எனேகருணை
விளையாட்டு இருந்தவாறு...
(தாயுமானவர், எங்கும் நிறைகின்ற பொருள், 1)
என்று பாடுகிறார் தாயுமானவர். அம்மா, அம்மா என்று அழைத்திருக்கிறேன் சில நேரம்; ஐயா, அப்பா என்று அலறியிருக்கிறேன் சில நேரம். நீ அம்மையா இல்லை அப்பனா? நான் எவ்வண்ணம் பார்க்கத் துணிகிறேனோ அவ்வண்ணம் காட்டுகிறாயே அருளனே!
மதங்களைக் கடந்து நிற்பதைப் போலவே ஆண்மையையும் பெண்மையையும் ஆண்மைப் பெண்மையையும் கடந்து நிற்கிறது இறைமை.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago