தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் தங்க முதலீட்டுத் திட்டப் பத்திரங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான முதலீட்டுப் பத்திரங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதன்மூலம் ஆண்டொன்றிற்கு கோயில்களுக்கு 17 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.11) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது.

இதன், அடையாளமாக சமயபுரம் மாரியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள் வி.எஸ்.பி. இளங்கோவன்,கே.எம். சுப்பிரமணியன், இணை ஆணையர்கள் எ.ஆர். பிரகாஷ், செ.மாரிமுத்து, பி. ரமேஷ் மற்றும் உதவி ஆணையர், செயல் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோரிடம் தங்க முதலீட்டிற்கான பத்திரங்களை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருவதோடு, திருக்கோயில்களுக்கு வருவாய் ஈட்டும் வகையில் பல்வேறு முனைப்பான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்தல்: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 2021-2022 ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்று பொன் இனங்களில், கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய இனங்களை மும்பையிலுள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளை கண்காணிப்பதற்கு 3 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழ்நாட்டை சென்னை, திருச்சி மற்றும் மதுரை என மூன்று மண்டலங்களாக பிரித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் க.ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா ஆகியோர் தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, இக்குழுவினரின் கண்காணிப்பில், 21 கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களில் கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் சுத்தத் தங்கம் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் அந்தந்த கோயிலின் பெயரில் தங்கக் கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டொன்றிற்கு கோயில்களுக்கு 17 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது.

21 கோயில்களின் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதற்கு அடையாளமாக சமயபுரம், மாரியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோரிடம் அதற்கான பத்திரங்களை முதல்வர் இன்று வழங்கினார்.

இத்திட்டத்தின் மூலம் கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பலமாற்று பொன் இனங்களை உருக்கி கோயில்களுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதோடு, அதன்மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை அந்தந்த திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் க.ரவிச்சந்திர பாபு, ஆர்.மாலா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

12 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

மேலும்