அகத்தின் குரல் ஒன்று தனக்குள் ஒலித்ததைக் கேட்டு, உளவியலாளர் ஹெலன் ஷுக்மன் ’எழுதிய’தாகச் சொல்லப்படும் புத்தகம் ‘ஏ கோர்ஸ் இன் மிராக்கில்ஸ்’. இந்தப் புத்தகம் பிரபஞ்சத்தில் மனிதனாக வாழ்வதற்கான விதிமுறைகளை விளக்குகிறது. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் கொள்கைகளை முன்வைக்கிறது. அற்புதப் பாடங்களின் பின்னணியில், இந்தப் புத்தகம் மனித வாழ்க்கையைப் பின்தொடர்கிறது.
“ஓர் அற்புதம் பல வகையான வடிவங்களில், உடல், மனம் சார்ந்து எப்படி வேண்டுமானாலும் வெளிப்படலாம். ஆனால், நமது தவறான கண்ணோட்டத்திலிருந்து உடனடிச் சுதந்திரம் வழங்குவது அதன் அடிப்படையான அம்சமாக இருக்க வேண்டும்.” இந்தப் புத்தகம் அற்புதத்தைப் பற்றி இப்படி விளக்குகிறது – “தடைகளைத் தாண்டி, அன்பின் இருப்பைப் பற்றி விழிப்படைதல்.” இது ‘புனித கணம்’ என்று விவரிக்கப்படுகிறது.
இந்தத் தருணம் நிகழும்போது, நாம் இறைவனின் அமைதியை உணர்வோம். அப்போது அகந்தையும் அறியாமையும் நம்மைவிட்டு விலகியிருக்கும். இந்த அற்புதத் தருணம் நிரந்தரமானது. அது நிகழ்ந்ததை நாம் மறந்துவிடலாம். ஆனால், அதை நினைவுபடுத்தும் ஒவ்வொரு தருணமும், அதே உணர்வை நம்மால் பெற முடியும்.
புனித உறவுகள்
உறவுகளைப் பற்றி முன்வைத்திருக்கும் கருத்துகள் இந்தப் புத்தகத்தின் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. ’சிறப்பு’ உறவுகள், ’புனித’ உறவுகள் என இரண்டு வகையாக இந்தப் புத்தகம் உறவுகளை விவரிக்கிறது. இந்தச் ’சிறப்பு’ உறவு என்பது அகந்தையின் ஆசைகளால் கட்டமைக்கப்படுகிறது. இந்த வகையான உறவையே பெரும்பாலானவர்கள் தொடர்கிறோம். ஆனால், இந்த வகையான உறவு, இறைவனிடமிருந்து நம்மைப் பிரித்துவிடுகிறது. இதற்கு மாறாக, ’புனித’ உறவு நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது.
நம்முடைய உறவுகள் தன்னலத்திலிருந்தே கட்டமைக்கப்படுவதாக இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஒரு சாதாரண உறவில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லையென்றால், அதை முறித்துவிட முயல்கிறோம். ‘நமது தேவை’ என்ற அகந்தையை முன்வைப்பதே இதற்குக் காரணம். நம்முடைய உறவுகளுக்கு உறுதியான அடித்தளம் இல்லாததும் இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால், இறைவன் நம்முடைய உறவுகளுக்கு நிச்சயமான இலக்கை நிர்ணயித்திருக்கிறார்.
‘பரிசுத்த ஆவி’யின் இருப்பை நம் உறவில் உணரும்போது, நமக்கு உறவுகளின் மீது நம்பிக்கை பிறப்பதாக இந்தப் புத்தகம் விளக்குகிறது. அப்போது நம்மிடமிருந்து நம் உறவுகளைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அத்துடன், மன்னிப்பதன் பரிமாணங்களையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. “மன்னித்தலின் வழியாகவே நாம் நினைவுகூர முடியும். மன்னித்தலின் மூலம் உலகம் தலைகீழாக மாறுகிறது” என்ற கருத்தை இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது.
அற்புதமான பதில்கள்
இந்தப் புத்தகத்தில் ‘அன்பு மட்டுமே நிஜமானது’ என்ற கருத்து தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. அதன் மூலம், மற்றவை எல்லாம், இந்த முழு உலகமும் மாயை என்ற கருத்து சொல்லப்படுகிறது. இந்த உண்மையைப் பற்றிய தவறான கண்ணோட்டத்திலிருந்து வெளிவரவே இறை வழிபாடும் தியானமும் தேவையாக இருக்கிறது. நமது கேள்விகளுக்கான அற்புத பதில்களை முரண்பாடுகளிலிருந்து தேட முடியாது.
ஓர் அற்புத பதில் என்பது இறைவனின் பரிசாக, ஒரு கணத்தின் விழிப்பாக அமைந்திருக்கும். அந்த பதில் என்பது இன்றும் சரியானதாக இருக்கும், நாளையும் சரியானதாக இருக்கும். நாம் உண்மையை உணரும்போது அதுவே அற்புதமாகத் தோன்றும். இறைவனிடமிருந்து நாம் விலகியிருப்பதாக நினைப்பதே ஒரு மாயை என்று இந்தப் புத்தகம் விளக்குகிறது.
“தன்னைத்தானே” எழுதிக்கொண்ட எழுத்துகளுக்கு உதாரணமாகப் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதில், இந்தப் புத்தகம் மக்களால் அதிக அளவில் வாசிக்கப்பட்டது. பைபிள் கருத்துகளின் தாக்கம் இந்தப் புத்தகம் முழுவதும் இருக்கிறது. உலகில் அற்புதங்கள் நிகழ்வது ‘சாதாரணம்’ என்ற கருத்தை இந்தப் புத்ககம் முன்வைக்கிறது.
ஆனால், இந்தப் புத்தகம் வெளியானவுடன் அற்புதங்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகளை முன்வைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கான ஆன்மிக விதிகளை எளிமையாகப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.
ஹெலன் ஷுக்மன், வில்லியம் தெட்ஃபோர்ட்
இவர்கள் இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவியல் ஆராய்ச்சி நியூ யார்க்கில் அமைந்திருக்கும் கொலம்பியா-பிரஸ்பைடிரியன் மருத்துவ மையத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். முற்றிலும் நம்பமுடியாத வகையில், 1965-ம் ஆண்டிலிருந்து 1972-ம் ஆண்டுவரை, ஏழு ஆண்டுகளுக்கு ஷுக்மனின் அகத்திலிருந்து ஒலித்த ஒரு குரலைக் கேட்டு, அவர் “எழுதியதுதான்” ‘ஏ கோர்ஸ் இன் மிராக்கல்ஸ்’ என்ற 1200 பக்க புத்தகம்.
ஷுக்மன் எழுதிய கையெழுத்துப் பிரதியை வில்லியம் தெட்ஃபோர்ட் தட்டச்சு செய்து புத்தகமாகத் தொகுத்திருக்கிறார். 1975-ம் ஆண்டில் வெளியான இந்தப் புத்தகம், லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையானது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago