நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் எனப்படும் ஐந்து பூத திருத்தலங்களில், நிலம் என்ற பூதத்துக்கு உள்ள தலம் காஞ்சி நகரம். காஞ்சி நகரத்துக்குக் கிழக்கே உள்ள மண்ணிவாக்கம் என்று வழங்கப்படும் திருத்தலம் புராணங்களில் மண்ணீஸ்வரம் என அழைக்கப்படுகிறது.
அறம் பாலித்த காமாட்சி அருந்தவம் புரிந்த அற்புதத் தலம். பூதேவி, அகத்தியர் செய்த தவத்துக்கு மகிழ்ந்து அம்மையப்பன் எழுந்தருளிய திருத்தலம் மண்ணீஸ்வரம். காஞ்சி நகரத்தில் கிழக்கே தொடங்கி, எட்டுத் திக்கிலும் திக் விஜயம் செய்த கண்ணுதற்பெருமான், மண்ணீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கியும், மரகதாம்பிகை என்ற திருநாமத்தைத் தாங்கி பார்வதியும் எழுந்தருளப் பெற்ற தலம் இது. திருநீற்றின் மாட்சிமையை உலகுக்கு உணர்த்திய தலம் மண்ணீஸ்வரம்.
ஆதிகாலத்தில் நைமிசாரண்யத்தில் உள்ள இருபத்து ஆறாயிரம் முனிவர்கள், சூத புராணிகரிடம் சிவ மகாத்மியம் குறித்துக் கேட்டனர். மண்ணீஸ்வரரை வழிபட்டால் பயன்பெற்று இகபர சுகம் பெறலாம் என்றார் சூத புராணிகர். குணகாஞ்சி, சிவபுரி, அகத்தியபுரி, இந்திரபுரி என்று புராணங்களில் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மாமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது. இது இந்திரனால் உண்டாக்கப் பெற்ற தலவிருட்சமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் ஞான கங்கை தீர்த்தம்; சரஸ்வதியும் லட்சுமியும் அமைந்த தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் நீராடினால் கல்வியும் செல்வமும் கைவரப் பெறுவர்.
நாக உருவில் சித்தர்கள்
இங்குள்ள நந்தி, புறப்படுவது போன்று கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோலம். இறைவனை நினைந்து திருநீறு இட்டு ஐந்தெழுத்து ஓதுவோர் எவர்க்கும் தான் முன்வந்து வழிகாட்டும் குருபரன், நந்தி என்பதாகும்.
விதர்ப தேசத்து அரசன், வீரவர்மன் வழிபட்டு மாத சிவராத்திரி விரத மகிமையை உலகுக்கு உணர்த்தி, சாம்ராஜ்யப் பதவி பெற்றான். நாகலோகக் கன்னியர்கள் வழிபட்ட திருத்தலமாதலால் நாகங்கள் உருவில் பல சித்தர்கள் நள்ளிரவில் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.
குணகாஞ்சியில் உள்ள இத்திருத்தலம், சிறந்த வித்யாதத் பீடமாக விளங்குகிறது. சரஸ்வதியால் அமைக்கப்பட்ட தீர்த்தத்தில் நீராடி மரகதாம்பிகையை வழிபடுவோர் கலைகளிலும், கைவரப் பெறுவர். நான்கு வேதங்களும் ஆகமமும், பன்னிரு திருமறையும் பிரகாசிக்கும் நந்தி தேவனும் திருவாய் மலர்ந்தருளிய தலம். இங்குள்ள நந்தியம் பெருமாள் கிழக்கு நோக்கி அமர்ந்து, ஐந்தெழுத்தின் மாட்சிமையையும் ஞானத் தத்துவத்தையும் திருநீற்று மாட்சிமையையும் உணர்த்துகிறார்.
தீர்த்தம் அமைத்ததில் திருமகள் பெரும் பங்கு கொண்டு சிவனையும் உமையையும் வழிபட்ட காரணத்தால் எத்தகைய சவுபாக்கியங்களை நாடுவோரும் இத்திருத்தலத்துக்கு வந்து வழிபட்டால் சகல செல்வமும் பெறுவர் என்று அகத்தியர் திருவாய் மலர்ந்தருளினார். ஆலயத்தின் கீழே பூமிக்கடியில் பல சித்தர்கள் தவம்புரிவதாக நம்பப்படுகிறது.
பஞ்ச மகா பாதகங்களையும் நீக்கும் ஐந்தெழுத்தோதி வெண்ணீறு அணிந்து இந்திரன் தவம் புரிந்தது இத்திருத்தலத்தில்தான். இந்தத் திருத்தலத்தின் மேன்மையை உணர்த்த நவக்கிரங்கள், தனித்தனியாக வழிபட்டு பல பேறுகளைப் பெற்று பிரணவபுரி என்ற பெயர் சூட்டப்பட்டதால் இங்குள்ள மண்ணீஸ்வரரை பிரணவபுரிஸ்வரர் என்று வாழ்த்தினர். இத்திருத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைவனை நீராட்டி மலரிட்டு வழிபடுவோர் இம்மை மறுமைப் பயன்களை அடைவர் என்று கருதப்படுகிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago