தானிய வணிகர் ஒருவர் தன்னை உறுத்திச் சிதைக்கும் பிரச்சினை களுக்கான தீர்வை வேண்டி ஞானியிடம் சென்றார். மனத்திலும் உடலிலும் பதற்றம் வழிய வந்த வணிகரை அமர வைத்து அவரது சிக்கல்களைச் சொல்லக் கேட்டார் ஞானி.
“கொஞ்ச காலமாகவே எனக்கு எல்லா வகையிலும் சிக்கல்களுக்கு மேல் சிக்கல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தானியக் கிடங்கு தீப்பற்றிக்கொண்டதில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. தீர்த்தப் பயணம் சென்ற இடத்தில் புனித நீராடும்போது ஆற்றில் மூழ்கி என் மனைவி இறந்துபோனாள்.
தொழிலுக்கு உதவியாக இருப்பதற்காக, என் மூத்த மகனை வெளிநாட்டில் படிக்க வைத்தேன். அவனும் அதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று நாடு திரும்பி வந்து எனது தொழிலுக்குப் பெரும் உதவியாக இருந்து வந்தான்.
அவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. அம்மா ஆற்றில் மூழ்கி இறந்த துயரத்தைத் தாங்கவியலாமல் அவனது மனநிலை பிறழ்ந்துவிட்டது. இந்தத் தொடர் துயரங்களால் எனது உடல் நலம் அடிக்கடி குலைகிறது. அதனால் தொழிலும் பாதிக்கப்படுகிறது. “இது இப்படியே போனால் நான் உயிரைத்தான் விட வேண்டி வரும்” என்று ஞானியின் கரங்களைப் பிடித்துக் கதறினார்.
அவருக்கு ஆறுதல் சொன்ன ஞானி, வணிகர் நிதானமடையும் வரை காத்திருந்துவிட்டுத் தனது வீட்டுக்கு வெளியே அவரை அழைத்துச் சென்றார்.
சிறிது தூரம் நடந்த இருவரும் பெரும் திடலொன்றை அடைந்தனர். அங்கு நிறைய மரங்கள் இருந்தன. திடலின் ஓரத்தில் கழித்துக் கட்டப்பட்ட வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் குவித்துவைக்கப்பட்டிருந்தன. தரை முழுக்க காய்ந்த இலை சருகுகள், பறவைகளின் உதிர்ந்த சிறகுகள் பரவிக் கிடந்தன.
அங்கிருந்த பாறைத் திண்டில் இருவரும் அமர்ந்தனர். அது மாலை நேரம் . கதிரவனின் சிவப்பொளியும் இதமாக இருந்தது. காற்றில் அசைவில்லை. அந்தத் திடலில் இவர்கள் இருவரையும் தவிர வேறு யாருமில்லை.
ஞானி ஏதாவது சொல்வார் என்று வணிகர் காத்திருந்தார். அவரோ மௌனப் புன்னகையுடன் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் காற்று வீசத் தொடங்கியது. சிறு குழந்தையைப் போல தவழத் தொடங்கிய காற்று மெல்ல வலுக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் திடலுக்குள் சுழன்றது. தரையிலிருந்த சருகுகளையும் பறவைகளின் சிறகுகளையும் காற்றானது அரூபக் கரங்களால் எல்லாத் திசைகளிலும் தூக்கி எறிந்தது. அவையோ மிக உயரத்தை எட்டின. திடீரெனத் திடலின் பக்கவாட்டில் இறங்கின. தரையைத் தழுவிக் கொண்டு மையத்தில் பல்வேறு கோலங்களில் பறந்து அலைந்தன.
இவையனைத்தையும் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே திடலின் ஒரு ஓரத்திலிருந்து பெருத்த ஓசை கிளம்பியது. அந்த ஓசையுடன் கண்ணாடிச் சில்லுகள் உடைந்து சிதறும் ஓசையும் பின் தொடர்ந்தது. வணிகர் பதற்றத்துடன் ஞானியைப் பார்த்தார். அவரோ மாறாப் புன்னகையுடன் திடலையே பார்த்துக்கொண்டிருந்தார். தொடர்ந்த காற்றின் வீச்சில் சருகுகளும் சிறகுகளும் திடல் முழுக்க மிதந்து கொண்டிருந்தன. அரை நிமிட உக்கிர நடனத்துக்குப் பிறகு காற்றின் வேகம் மெல்லத் தணியத் தொடங்கியது. படிகளில் இறங்கி வரும் குழந்தையைப் போல சருகுகளும் சிறகுகளும் வான் வெளியிலிருந்து கிறுகிறுவென சுழன்று சுழன்று தரையில் இறங்கி முன்னும் பின்னும் உருண்டு புரண்டு மீண்டும் பழைய நிலையை அடைந்தன.
வணிகரின் கையைப் பிடித்து எழுப்பி ஓசை வந்த இடத்தை நோக்கி அழைத்துச் சென்றார் ஞானி. மூலையில் குவிக்கப்பட்டிருந்த பழைய பொருட்களிலிருந்துதான் அந்த ஓசை கேட்டது. கண்ணாடி பதித்த மரப்பேழை காற்றின் வேகத்தில் குப்புறச் சரிந்து தரையில் மோதி உடைந்து ஐந்து துண்டுகளாய்க் கிடந்தது. கண்ணாடிச் சில்லின் சிதறல்களும் அருகே விரவிக் கிடந்தது.
இப்போது ஞானி பேசத் தொடங்கினார்:
“ வாழ்வில் வரும் துன்பமும் இன்பமும் காற்றின் அரை நொடி சுழற்சிக்குச் சமமானதே. மரப்பேழைக்கும் சருகுகள் சிறகுகளுக்கும் சேர்த்து ஒன்று போலவே காற்று வீசியது. ஆனால், ஆனால் அதன் பின் விளைவுகள் ஒன்று போல இல்லை. காற்று எத்தகைய கொடும் வடிவமும் பூண்டு வரட்டும். அதன் வீச்சுக்குள் உன்னை உதிர்ந்த சருகு போல ஒரு சிறகு போல ஒப்படைத்து விடு. வாழ்வின் மிகப் பெரும் அலைக்கழிப்பு கூட உனக்கு இனிய மிதத்தல் போன்ற அனுபவமாக மாறும்” என்றார் ஞானி.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago