நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! |
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? ||
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் |
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் ||
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் |
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ||
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! |
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 10)
நோன்பிருந்து ஸ்ரீமன் நாராயணனையே பற்றாகக் கொண்டு, பிற செயல்களை விடுத்துப் பரவசத்தில் மூழ்கியிருக்கும் பெண்ணே! நாங்கள் பலமுறை கூப்பிட்டும் கதவைத்தான் திறக்க மறுக்கிறாய், பதில் மொழி கூடவா கூறக் கூடாது? ராமபிரானால், முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்து விட்டானோ? வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே விரைந்து வந்து கதவைத் திறப்பாய். உலகோர் புகழும்படி நோன்பு இருந்து நீராடுவோம் என்று தன் தோழியை நீராட அழைக்கிறாள் ஆண்டாள்.
அளவிட முடியாத பரம்பொருள் ஈசன்!
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் |
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே ||
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் |
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ||
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன் |
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ||
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் |
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். ||
(திருவெம்பாவை 10)
தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்து, கோயில் திருப்பணிகளை மேற்கொள்ளும் பெண்களே! நம் தலைவனாகிய ஈசனின் திருப்பாதங்கள், ஏழு பாதாள உலகங்களையும் கடந்து கீழே உள்ளது. பல்வேறு மலர்களை சூடும் திருமுடி வானத்தின் எல்லைகளைக் கடந்து அனைத்து பொருட்களுக்கும் எல்லையாக உள்ளது. உமையொரு பாகனாக இருப்பதால், அவன் ஒருவன் அல்ல என்பதை அறிகிறோம். வேதங்கள், விண்ணவர், பூலோகத்தினர் ஒன்று சேர்ந்து துதித்தாலும் ஈசன் புகழைப் பாடி முடிக்க இயலாது. யோகிகளுக்கும், ஞானிகளுக்கும் நண்பனாக விளங்கும் ஈசனுக்கு எண்ணற்ற பக்தர்கள் உண்டு. அவனது பெருமைகள் முழுவதையும் போற்றிப் பாடுவது என்பது இயலாத செயல் என்கிறார் மாணிக்கவாசகர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago