பு
ராணங்களில் வெறும் கற்பனையும் எங்காவது இருக்கலாம்தான். பிற்காலத்தவர்கள் இடைச் செருகலாக (Interpolation என்பதாக) சிலதை நுழைத்துவிட்டும் இருக்கலாம். ஆனால் எது வெறும் கற்பனை, எது இடைச் செருகல், எது மூல ரூபம் என்று யார் நிர்ணயிப்பது? அவரவரும் தங்களுக்கு இடைச் செருகலாகத் தோன்றுவதை நீக்கிவிடுவது என்று ஆரம்பித்தால் அத்தனை கதைகளும் போய்விடும். மூலக்கதை என்றே ஒன்று நிற்காது. அதனால் சில தப்புகள், கோளாறுகள் இருப்பதாகத் தோன்றினாலுங்கூட இன்றைக்கு நம் கைக்கு எந்த ரூபத்தில் புராணங்கள் வந்திருக்கின்றனவோ அதை அப்படியே வைத்து ரக்ஷிக்கத்தான் வேண்டும்.
அதிலே ஏதாவது கட்டுக்கதை இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும். அது நம் மனசை பகவானிடம் கொண்டுபோய் விட்டுச் சாந்தப்படுத்துகிறதோ இல்லையோ? கடைக்கு ஒரு பண்டம் வாங்கப் போகிறோம். நல்ல சரக்காகக் கிடைக்கிறது. நம் உத்தேசம் பூர்த்தியாகிவிட்டது என்று சந்தோஷப்படுவதா, அல்லது கடையில் இன்ன குறை இருந்தது, கடைக்காரனிடம் இன்ன தோஷம் இருந்தது என்று சொல்லி அதிருப்திப்படுவதா? பூகோள – ககோள (வான் இயல்) வர்ணனைகள், மன்வந்த்ரம் முதலான கால வர்ணனைகள் எங்கேயாவது தப்பிப் போனால்தான் போகட்டுமே! இதெல்லாம் தெரிந்துகொள்ளத்தான் புவியியலும் வானியலும் வரலாறும் இருக்கிறதே! அவை கொடுக்க முடியாத பரமாத்ம தத்துவத்தை, பக்தியை, தர்மத்தைச் சொல்கிற லக்ஷ்யத்தைப் புராணம் பூர்த்தி பண்ணுகிறதோ இல்லையோ?
படிப்பினை கெட்டுப் போய்விடுமா?
‘த்ரேதாயுகம் என்று அத்தனை லக்ஷம் வருஷம் முன்னாடி ராமர் இருந்திருக்க முடியாது. அப்போது ராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கிற நாகரிக வாழ்வு ஏற்பட்டே இராது’ என்கிறது போலப் பல வாதங்கள் செய்கிறார்கள். இதை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்: ராமர் த்ரேதாயுகத்தில் இல்லாமலே இருந்திருக்கட்டும். இப்படியே அதற்கு முந்தி க்ருதயுகத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் கதைகள் அவ்வளவு பூர்வ காலத்தில் நடந்திருக்காமலே இருக்கட்டும். எல்லாம் ஒரு ஏழாயிரம் எட்டாயிரம் வருஷத்துக்குள் நடந்தது என்றே வைத்துக்கொள்ளலாம். அதனால் ஸ்ரீ ராம சரித்திரமோ, மற்ற கதைகளோ மதிப்பிலே குறைந்து விடுமா? அவற்றால் நாம் பெறுகிற படிப்பினை கெட்டுப் போய் விடுமா?
புராணத்தில் சொல்லியுள்ள கதைகளின் காலம் தப்பு என்பது போலவே, இந்த புராணங்கள் ஏற்பட்ட காலத்தைப் பற்றியே சொல்வதெல்லாமும் தப்பு என்கிறார்கள்.
ஐயாயிரம் வருஷத்துக்கு முந்திக் கலியுக ஆரம்பத்தில் வியாஸர் புராணங்களைக் கொடுத்தார் என்பது சாஸ்திரங்களில் சொல்லியுள்ள விஷயம். அவருக்கு முன்பே புராணம் உண்டு. சாந்தோக்ய உபநிஷத்தில் நாரதர் தாம் அத்தியயனம் பண்ணின வித்தைகளின் பேரைச் சொல்லும்போது அவற்றில் ஒன்றாகப் புராணத்தை குறிப்பிடுகிறார். அதனால் வேத- உபநிஷத காலத்திலேயே புராணம் இருந்ததாகத் தெரிகிறது. பிற்கால ஜனங்களின் குறைந்த சக்திக்கு ஏற்ற மாதிரி, ஏற்கெனவே இருந்த வேதங்களை வியாஸர் பல சாகைகளாகப் பிரித்துக் கொடுத்தது போலவே இந்தப் புராணங்களையும் தாமே விரிவாக எழுதிக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது.
ஆனால், இங்கிலீஷ் படிப்பாளிகள் புராணங்கள் அவ்வளவு பழையவை இல்லை என்கிறார்கள். இருந்து விட்டுப் போகட்டுமே! (சென்னை டவுனில் உள்ள) கந்த ஸ்வாமி கோயிலில் ஜே ஜே என்று கூட்டம் சேருகிறது, நல்ல சாந்நித்தியம் இருக்கிறது, அங்கே நல்ல பக்தி ஏற்படுகிறது, சந்நிதானம் நம் துக்கத்தைப் போக்கி அருள் சுரக்கிறது என்றால் அதுதான் கோயிலின் பிரயோஜனம்.
இதிலே திருப்திப்படாமல், ‘இந்தக் கோயில் எப்போது கட்டியது? அருணகிரிநாதர் காலத்தில் இது இருந்ததா? அவர் திருப்புகழ் பாடியிருக்கிறாரா?’ என்று கேட்டுக்கொண்டு போவதில் என்ன அர்த்தம்? இம்மாதிரியானதுதான் புராண காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகளும்! நம் மன அழுக்கை, சித்த மலத்தைப் போக்குவதுதான் புராணங்களின் லக்ஷ்யம் என்பதை நினைவில் வைத்து, பயபக்தியோடு படித்தால் இப்போது எழுகிற அநேக ஆக்ஷேபங்களுக்கு இடமிராது.
புராணங்களின் உத்தேசம்
ஆராய்ச்சி, கீராய்ச்சி, research என்று சொல்லிவிட்டால் உடனே நாம் நம்பிவிடுவது என்பதுதான் எல்லாவற்றையும்விடப் பெரிய மூட நம்பிக்கையாக இருக்கிறது! இப்போதைய ஆராய்ச்சிகளிலும் நிறையப் பொத்தல்கள், குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. இது சரியாக இருந்து, புராணம் கற்பனையாக இருக்கிற இடத்திலுங்கூட, ‘நல்லதைச் செய்தவன் வாழ்ந்தான்; தப்பைச் செய்தவன் கெட்டான்; இப்படிக் கெட்டவர்களையும் அநேக சந்தர்ப்பங்களில் பகவான் கை தூக்கிவிட்டிருக்கிறான்’ என்பதைப் புராணம் நம் மனசில் அழுத்தமாகப் பதிப்பிக்கிறதால் அதன் உத்தேசம் பூர்த்தியாயிற்று என்றுதான் அர்த்தம்.
நவீன மனப்பான்மைக்காரர்கள் மட்டுமின்றி சாஸ்திரஜ்ஞர்கள், சிஷ்டர்கள்கூடப் புராணத்தை இரண்டாம் பக்ஷமாக நினைத்து வருவதாக எதனாலோ ஏற்பட்டுவிட்டது. மற்ற சாஸ்திரங்களில் வாக்யார்த்தம், உபன்யாஸம் பண்ணுகிறவர்களைவிடப் புராணப் பிரவசனம் செய்யும் பௌராணிகர்கள் தாழ்த்தி என்ற அபிப்ராயமும் இருக்கிறது. ஆனால், மஹாமஹோபாத்யாய பட்டம் பெற்ற மஹா பண்டிதர்களான யக்ஞஸ்வாமி சாஸ்திரிகள், காபே ராமசந்திராச்சார் முதலியவர்கள் புராணப் பிரவசனம் நிறைய பண்ணி வந்திருக்கிறார்கள். இப்போது ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா பதினெண் புராணங்களைக் கண்டுபிடித்துத் தமிழில் (சுருக்கியாவது) அச்சுப் போடுவதே காரியமாக இருக்கிறார்.
(தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி)
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago