செ
ன்னையில் ஆளுநர் மாளிகை இருக்கும் சர்தார் படேல் சாலையும் டைடெல் பார்க், எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் ஆகியவை அமைந்துள்ள ராஜீவ் காந்தி சாலையும் சந்திக்கும் இடத்தில் ‘மத்திய கைலாஷ்’ ஆலயம் உள்ளது. இதில் மையமாக அமர்ந்து அருள் பாலிப்பவர் ஸ்ரீவெங்கடேச ஆனந்த விநாயகர். ‘வெங்கடேச’வுக்குக் காரணம் உண்டு. இந்தக் கோயிலில் உள்ள பல தெய்வத்திரு உருவங்கள் திருப்பதி தேவஸ்தானத்தால் அளிக்கப்பட்டவை.
பிரம்மாண்டமான வெங்கடேச ஆனந்த விநாயகருக்கு முன்னால் இருப்பவர் ஆனந்த விநாயகர். இந்தச் சிலை இப்போதைய மத்திய கைலாஷுக்கு வெளிப்புறம் அமைந்துள்ள நடைபாதையில் அரசமரத்துக்குக் கீழே பல வருடங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
திதி செய்ய ‘பித்ருகர்மா’
இந்த ஆலயத்தில் ‘பித்ருகர்மா’ என்னும் திட்டம் செயல்படுகிறது. நீத்தார்க்கு இந்த ஆலயத்தில் திதி செய்ய முடியும். அதாவது பெயர், நட்சத்திரம், கோத்திரம், இறந்தவர் உங்களுக்கு என்ன வகையில் உறவு என்பன போன்ற தகவல்களை அளித்துவிட்டு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து பதிவுசெய்து கொண்டால், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட நாளில் அவருக்கு திதி செய்யப்படும். திதி செய்பவர் நேரடியாக வர வேண்டும் என்பதில்லை. ஆலயத்தின் பிரதிநிதியே அதைப் பார்த்துக்கொள்வார். வெளிநாட்டில் இருந்து பித்ருக்களுக்குக் கடனாற்ற விரும்புபவர்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது.
1954-ல் இங்கு ஒரே ஒரு பிள்ளையார் சன்னிதிதான் இருந்தது. அதற்கு அப்போது ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. 1990-ல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. அப்போது பல சன்னிதிகள் தோன்றின. பக்தர்கள் ஏராளமாக வந்து வழிபடத் தொடங்கினார்கள்.
1993-ல், மிக வித்தியாசமான ஒரு தெய்வ உருவம் நிறுவப்பட்டது. அதை இரண்டு தெய்வங்களின் சங்கம உருவம் என்று குறிப்பிடுவதே சரி. ஆலயத்தை விரிவுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகித்த மறைந்த ஸ்வாமி என்பவர் தஞ்சை சரஸ்வதி மகாலுக்குச் சென்றிருந்தபோது ஒரு நூலில் மிக வித்தியாசமான ஒரு தெய்வத்தின் உருவத்தைக் கண்டார். ‘ஒரு பாதி விநாயகர். மறுபாதி ஆஞ்சநேயர்’. அது அவரது மனதில் பதிந்துவிட்டது. அப்படியொரு தெய்வத்தை ஆனந்த விநாயகர் ஆலயத்தில் நிறுவ விருப்பப்பட்டார்.
ஓவியர் மணியம் செல்வம், சிற்பி கணபதி ஸ்தபதி ஆகியோரின் கற்பனையும் கைகோத்தன. எதனால் இந்த இரு தெய்வங்களும் இணைந்து ஒரே திருவுருவமாகக் காட்சி அளிக்க வேண்டும்? விநாயகருக்கும் அனுமனுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன? தொடக்கத்தில் ஒன்றிரண்டாகத் தோன்றிய பதில்கள் விரைவிலேயே அதிகரிக்கத் தொடங்கின.
05chsrs_gss (2)ஆத்யந்த பிரபு
விநாயகர், அனுமன் இருவருமே பிரம்மச்சாரிகள். இருவருக்குமே மனித முகங்கள் அல்ல. விநாயகர் ஆனைமுகன். அனுமன் வானரன். இருவருமே அசாத்திய சக்தி பெற்றவர்கள். இந்த தெய்வ உருவத்துக்கு ஆலயத்தார் வைத்துள்ள பெயர் ‘ஆத்யந்தப் பிரபு’. ஆத்யந்த என்பதை ஆதி, அந்தம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். காலட்சேபங்களிலும், பூஜைகளிலும் விநாயகரை முதலில் வழிபடுவது மரபு. இறுதியில் ஆஞ்சநேயரைத் துதிப்பதும் மரபுதான். ஆக ஆதியும் அந்தமுமாக விநாயகரும் ஆஞ்சநேயரும் இங்கே விளங்குகிறார்கள்.
அனுமன், விநாயகர் இருவருமே புத்திக்கூர்மைக்குப் பெயரெடுத்தவர்கள். ஆத்யந்தப் பிரபு, புத்திக் கூர்மையின் சங்கமமாகவும் தோன்றுகிறார். இவரை வணங்கும் பக்தர்கள் எளிதில் வாழ்வை எதிர்கொண்டு அதில் ஆனந்தத்தைக் காண முடியும் என்பதன் கருத்தாக ஆத்யந்தப் பிரபு உருவம் உள்ளது. புவனேஸ்வரி ஸ்வாமிகளின் தலைமையில்தான் ஆத்யந்தப் பிரபு சன்னிதி திறக்கப்பட்டது. எனினும், இந்த சன்னிதிக்கான கும்பாபிஷேகத்தை நடத்தியவர்கள் பொது மக்கள்தான். அவர்களே கலசங்களில் அபிஷேகம் செய்தார்கள்.
இந்த சன்னிதியில் பொது மக்களின் பங்கு வேறொரு விதத்திலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பக்தர்களே அங்கிருக்கும் தாம்பாளத்தில் கற்பூரத்தை ஏற்றி தீபாராதனை காட்டலாம். சன்னிதியின் உட்புறத்தில் வலம் வரலாம்.
“சன்னிதிகளில் அர்ச்சகர்கள் தீபாராதனை காட்டுவதுதான் வழக்கம். சில இடங்களில் கற்பூரத்தை நாம் தரையில் வைத்து ஏற்றிவிட அனுமதிப்பதுண்டு. ஆனால், நம் கையால் தீபாராதனைத் தட்டை இறைவனுக்கு எதிரே சுற்றிக் காட்டும்போது ஏற்படும் அமைதி அலாதியானதுதான்’’ என்றார் அங்கு வந்திருந்த பக்தர் ஒருவர். மத்ய கைலாஷில் ஆத்யந்தப் பிரபு திருவுருவம் திறக்கப்பட்டதற்குப் பிறகு பெங்களூருவிலும் அதேபோன்ற ஆலயம் ஒன்று எழுந்துள்ளதாம்.
கடந்த சில வருடங்களாக விற்கப்படும் நவராத்திரிக்கான கொலு பொம்மைகளில் ஆத்யந்தப் பிரபுவின் உருவமும் உலா வருகிறது.
பக்தியில் தலைசிறந்த ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தையே தன் தந்தம் கொண்டு எழுதிய விநாயகன் என இரு ‘காவிய நாயகர்களும்’ இணையும்போது ஆசிகளுக்குக் குறைவேது?
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago