விண்ணைப் பிளந்த ‘அரோகரா’ முழக்கம்: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.

கந்தசஷ்டி விழா: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சூரசம்ஹாரம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின.

காலை 9 மணிக்க பூர்ணாகுதி தீபாராதனை, அதனை தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பகலில் மூலவருக்கு உச்சிக்கால தீபாராதனையும், யாகசாலையில் சுவாமிக்கு மகாதீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மக்கள் வெள்ளம்: தொடர்ந்து மாலை 4.15 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற்கரைக்கு புறப்பட்டார். மாலை 4.30 மணியளவில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். முன்னதாக சிவன் கோயிலிருந்து சூரபத்மன் எழுந்தருளி உள்மாட வீதி, ரதவீதிகள் சுற்றி கோயில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். தொடர்ந்து சூரசம்ஹாரம் தொடங்கியது.

முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை ஆணவத்தோடு மூன்று முறை வலம் வந்து போரிட்டான். அவனை, மாலை 4.54 மணிக்கு ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 5.10 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடனும் போரிட்ட சூரபத்மனை 5.22 மணிக்கும் வதம் செய்தார். பின்னர் மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டார் ஜெயந்திநாதர். அப்போது கடற்கரையில் அலை கடலென திரண்டிருந்த பக்தர்கள் எழுப்பிய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கச் செய்தது.

விரதம் நிறைவு: சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். கடலா கடல் அலையா என வியக்கும் வண்ணம் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தன. சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்தும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோச மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.

சூரசம்ஹார விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் புகேழந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி. வேல்முருகன், தனபால், விக்டோரியா கவுரி,, மாவட்ட நீதிபதிகள் தாண்டவன், வஷிஷ்குமார், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) சுகுமாறன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலர் க.அஜய்சீனிவாசன், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, நெல்லை சரக டி.ஜ.ஜி மூர்த்தி, கோயில் தக்கார் அருள்முருகன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பலத்த பாதுகாப்பு: சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா, திருநெல்வேலி சரக டிஜஜி பா.மூர்த்தி, தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 4500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸார், பைனாகுலர் மூலம் கடற்கரையை கண்காணித்தனர். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.

மேலும் போலீசார் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு அறிவிப்புகளையும். எச்சரிக்கைகளையும் விழிப்புணர்வு தகவல்களையும் வெளியிட்டுக் கொண்டே இருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் பிரமாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த திரைகள் முன்பு திரளான பக்தர்கள் திரண்டு சூரசம்ஹாரத்தை கண்டுகளித்தனர். இந்த இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. கடற்கரை பகுதி முழுவதும் டிரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. கடற்கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு படகு மற்றும் மிதவைகளுடன் தற்காப்பு பணியில் ஈடுபட்டனர்.

மரைன் போலீஸார் கடற்கரை பகுதியில் படகு மூலம் ரோந்து சுற்றி வந்தனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் நகரமே மாலையில் மனித தலைகளாக காட்சியளித்தது. அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் இருந்து இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர்கள். துணை ஆணையர்கள். உதவி ஆணையர்கள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர்.

நாளை திருக்கல்யாணம்: கந்தசஷ்டி விழாவில் 7-ம் நாளான நாளை (நவ.8) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள முருகமடத்தை சென்று சேருகிறார். அங்கு மாலை 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் காட்சி கொடுத்ததும் தெற்குரத வீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்கபெருமான் - தெய்வானை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன், தக்கார் ரா.அருள்முருகன் மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்