தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7) மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கந்த சஷ்டி திருவிழா: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த இடம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, தங்கச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி. வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
1 மணிக்கு நடை திறப்பு: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (நவ.7) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற காலவேளை பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் யாகவேள்வி நடக்கிறது. காலை 9 மணிக்கு யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது.
» கோவையில் 17.17 ஏக்கரில் ஐடி வளாகம், சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் மகாதீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து பகல் 12.45 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். அங்கு தீபாராதனை நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
சூரசம்ஹாரம்: மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருளுகிறார். அங்கு கஜ முகம், சிங்க முகம் மற்றும் சுயரூபத்தோடு வரும் சூரபத்மனை, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வதம் செய்கிறார் ஜெயந்திநாதர். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேருகிறார். அதன் பிறகு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும். தொடர்ந்து 7-ம் நாளான நாளை மறுநாள் (நவ.8) இரவு திருக்கல்யாணம் நடைபெறும்.
பக்தர்கள் குவிந்தனர்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கடந்த 6 நாள்களாக ஆயிரகணக்கான பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். மேலும், லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் வீடுகளில விரதம் மேற்கொண்டுள்ளனர். சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
விரிவான ஏற்பாடுகள்: இதையடுத்து திருச்செந்தூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் கம்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் சூரசம்ஹாரத்தை காண வசதியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 4500 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடற்கரை உள்ளிட்ட இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹாரத்தை பக்தர்கள் சிரமமின்றி காண வசதியாக முக்கிய இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருச்செந்தூர் பேரூராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் பக்தர்களின் உதவிக்கு தீயணைப்பு படையினர் மற்றும் மீன்வளத்துறையினர் படகுகளுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சு.ஞானசேகரன், தக்கார் ரா.அருள்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago