கிறிஸ்துவின் தானியங்கள்: குருவையும் சீடரையும் கண்டடைதல்

By அனிதா அசிசி

வா

ழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லவற்றை நேர்வழியில் தேடித்தேடி தேர்வு செய்ய விரும்புகிறது தூய்மையான மனம். தூய்மையற்ற மனமோ குறுக்குவழியில் அனைத்தையும் அடைந்துவிடத் துடிக்கிறது. மனிதனுக்கு ஆன்மிகமும் அடிப்படையான தேவையாகும். மனிதன் தனக்கான ஞானகுருவைக் கண்டடையும்போது புதையலைக் கண்டுபிடித்துவிட்டதைப்போல துள்ளிக் குதிக்கிறான். போலியான ஞானகுருவைத் தேர்ந்துகொண்டவர்கள் ஏமாற்றத்தைச் சந்திக்கிறார்கள். தனக்கான சீடர்களைத் தேர்ந்துகொள்ளும் ஞானகுருக்களுக்கும் இது பொருந்துகிறது. இயேசு தனது சீடர்களைத் தேர்வு செய்தபோதும், தாங்கள் தேடிய ஞானகுரு இவர்தான் என சீடர்கள் இயேசுவைக் கண்டடைந்தபோதும் எப்படி உணர்ந்திருப்பார்கள்?

தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு அவற்றைவிட உயர்வான ஒன்றைப் பெற்றுக்கொள்கிறபோது ஏற்படும் உணர்வே ஆன்மிகத்திலும் கிடைக்கிறது. பதவி, பணம், புகழ் இந்த மூன்றும் கிடைத்துவிடும்போது அந்தஸ்து தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த மூன்றையும்விடச் சிறந்தது ஆன்மிக வாழ்வுதான். அதைப் பெறுவதற்காக தன்னிடமுள்ள அனைத்தையும் துறக்க யாராவது முன்வருவார்களா என்று கேட்டால், அது அரிதானதே. அப்படிப்பட்ட அரிய முன்மாதிரிகளாக இருந்தார்கள் இயேசுவும் அவரது சீடர்களும். இப்படிப்பட்ட அரிதான, அருமையான குணத்தைப் பற்றி இயேசு ‘விலை உயர்ந்த ஒரு முத்து’ பற்றிய உவமை வழியாக எடுத்துக் கூறினார்.

விலை உயர்ந்த முத்தும்

நல்ல மீன்களும்

மத்தேயு நற்செய்தி அதிகாரம் 13-ல் 45 முதல் 48 வரையிலான இறைவசனங்களைப் படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இயேசு தாம் தேர்ந்தெடுத்த தன் சீடர்களைப் பார்த்து, “விண்ணுலக அரசாங்கம் அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய், தன்னிடம் இருந்த அனைத்தையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான்.

அதோடு, விண்ணுலக அரசாங்கம், கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற வலையைப் போல் இருக்கிறது. வலை நிறைந்ததும் மீனவர்கள் அதைக் கடற்கரைக்கு இழுத்துக்கொண்டுவந்து அங்கே உட்கார்ந்து நல்ல மீன்களைக் கூடைகளில் சேகரிப்பார்கள், ஆகாதவற்றையோ தூக்கியெறிவார்கள்.” என்றார்

நேசித்த தொழிலை விட்டுவிட்டு

மீன்பிடி தொழில் நிரந்தரமான வருவாயைத் தரக்கூடியது. மழை பொய்த்துப் போகலாம், ஆனால் கடலும் அதில் உற்பத்தியாகும் மீனும் என்றுமே வற்றுவதில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த, உடல் உழைப்பு கொண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுரு, அவரது சகோதரர் அந்திரேயா, யாக்கோபு அவரது சகோதரர் யோவான் ஆகியோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டு இயேசு அழைத்ததும் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். இதை மத்தேயு நற்செய்தி அதிகாரம் 4-ல் 18 முதல் 22 வரையிலான இறைவசனங்கள் நமக்கு விளக்குகின்றன.

“கலிலேயா கடலோரமாக இயேசு நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும் அவருடைய சகோதரர் அந்திரேயாவையும் பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள். இயேசு அவர்களிடம், ‘என் பின்னால் வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார். அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள். அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும். அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையும் இயேசு அழைத்தார். அவர்கள் உடனடியாகப் படகையும் தங்களுடைய அப்பாவையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.”

யாக்கோபுவும் யோவானும் தாங்கள் நேசித்த தொழிலை மட்டுமல்ல இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். இயேசு போன்ற ஒருவருடன் செல்ல அந்தத் தகப்பனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இயேசு தன் உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த வியாபாரி செய்தது முட்டாள்தனமான ஒரு காரியமாக இன்றுள்ள பல வியாபாரிகளுக்குத் தோன்றலாம். காரணம் லாப நோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வியாபாரி, இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஆர்வம் செலுத்தமாட்டார். ஆனால் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரியின் உயரிய கண்ணோட்டம் வேறு வகையானது. பொருளாதார லாபத்தை அல்ல, ஆனால் ஒப்பற்ற மதிப்பு கொண்ட ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதில் கிடைக்கிற மகிழ்வு, நிறைவு ஆகிய உணர்வுகளையே அவர் லாபமாகக் கருதினார். அந்த லாபம் ஆன்மிக ரீதியிலானது. உங்கள் குருவை நீங்களும் குரு உங்களையும் கண்டுகொள்ளும்போது நீங்களும் அதை அடைவீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

17 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்