தா
ய்லாந்தில் உள்ளது ப்ரா ப்ரோம் ஆலயம். ‘எரவான் டெம்பிள்’ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஆலயத்துக்கு கோபுரமும் கிடையாது; சுற்றுச்சுவரும் இல்லை.
ப்ரா ப்ரோம் என்ற தெய்வம் யார்? தாய்லாந்து கலாச்சாரத்தில் அதிர்ஷ்டம் அளிப்பவராகவும் பாதுகாப்பு அருள்பவராகவும் இவர் கருதப்படுகிறார். சீனப் பண்பாட்டில் ‘நான்கு முகக்கடவுள்’ என்று இவர் குறிப்பிடப்படுகிறார். இந்தியாவில் நான்கு முகக் கடவுள் பிரம்மா தானே?
தாய்லாந்து புத்தர்கள் நிரம்பிய நாடு. ப்ரா ப்ரோம்-ஐ நான்கு முக புத்தர் என்று குறிப்பிடுவோம். பிரம்மாவும் ப்ரா ப்ரோமும் ஒன்றுதானே என்று கேட்டால் தெரியாது. ஆனால், இந்த இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் வியக்கவைப்பவை. இருவரும் தாமரையில் அமர்ந்திருப்பார்கள். நான்கு முகம் கொண்டவர்கள். ஒருமுகம் மனத்தையும் ஒருமுகம் புத்தியையும் ஒருமுகம் தான் என்ற எண்ணத்தையும் நான்காவது முகம் பக்குவப்பட்ட மனநிலையையும் குறிக்கிறது. இவற்றை முறையே மனஸ், புத்தி, அகங்காரா, சித்த என்று குறிப்பிடுகிறார்கள்.
பலரின் கனவுகளில் ப்ரா ப்ரோம் வருவதாகக் கூறுகிறார்கள். கணிசமானவர்களின் வீடுகளிலும் இந்த உருவம் பூஜிக்கப்படுகிறது. அதுவும் வணிகர்கள் இந்த ஆலயத்துக்கு அதிகம் வருகிறார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிஷ்டத்தையும் தருவதாகக் கூறுகிறார்கள். கெமர் இனத்தினர் ப்ரா ப்ரோமை மிக அதிகமாக வழிபட்டனர். தாய்லாந்து மன்னர்கள் கம்போடியாவிலுள்ள கெமர் இனத்தவரை பதினைந்தாம் நூற்றாண்டில் வெற்றி கண்டபோது ப்ரா ப்ரோம் இறை வழிபாடும் தாய்லாந்துக்கு வந்து சேர்ந்தது.
மூன்று தலை யானை
எரவான் ஆலயம் என்று பெயர் கொண்டிருந்தாலும் எரவான் என்பது உண்மையில் பிரம்மாவையோ, ப்ரா ப்ரோமையோ குறிக்கவில்லை. அவர் அமர்ந்துள்ள மூன்று தலை யானையைத்தான் குறிக்கிறது. அதாவது ப்ரா ப்ரோமின் வாகனம்தான் எரவான். தாய்லாந்தின் தேரவத பவுத்தப் பிரிவில் மட்டுமல்ல மகாயான பவுத்த பிரிவிலும் ப்ரா ப்ரோம் இடம்பெற்றுவிட்டார். எரவான் ஆலயம் பிரம்மனுக்கானது என்றும் கருதுகிறார்கள். அதாவது காலப்போக்கில் ப்ரா ப்ரோம் என்ற தெய்வமும் பிரம்மனும் ஒருவரேதான் என்ற எண்ணமும் வலுத்துவிட்டது.
இந்த ஆலயம் உருவான கதை வித்தியாசமானது. 1956-ல் அரசுக்குச் சொந்தமான எரவான் ஹோட்டல் இங்கே எழத் தொடங்கியது. ஆனால், பல தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. கட்டுமானச் செலவு கூடிக்கொண்டே போனது. கட்டிடத் தொழிலாளர்கள் சிறிதும் பெரிதுமாகக் காயமடைந்த சம்பவங்களும் நடந்தன. இத்துடன் ஒரு வினோதச் சம்பவமும் நிகழ்ந்தது.
அந்த ஹோட்டல் கட்டுமானத்துக்காக ஒரு கப்பலில் நிறைய சலவைக் கற்கள் வரவழைக்கப்பட்டிருந்தன. அவை அத்தனையும் மாயமாய் மறைந்துவிட்டன. அரசை நோக்கி க் கேள்விகள் எழுப்பப்பட்டன. அரசு திணறியது. சோதனைகள் உண்டாகும்போது தனி மனிதன் செய்யும் ஒன்றை அரசு செய்தது. அதாவது ஜோதிடர் ஒருவரைக் கலந்து ஆலோசித்தது.
ஜோதிடர் வந்தார். அந்தப் பகுதியில் முன்னொரு காலத்தில் குற்றவாளிகளுக்குப் பொதுமக்கள் கூடி சாபம் கொடுக்கும் நிகழ்வுகள் நடந்தது தெரியவந்தது. சாபத்துக்கும் தண்டனைக்கும் உள்ளான குற்றவாளிகளின் ஆவிகளைத் திருப்திபடுத்தும் விதமாக இந்த ஆலயத்தைக் கட்டுவதற்கு ஜோதிடர் பணித்தார். இத்தாலி நாட்டின் பளிங்குக் கற்களைக் கொண்டு ஆலயம் எழுந்தது.
இதற்குப் பிறகு ஹோட்டல் கட்டுமானம் எந்தத் தடையும் இல்லாமல் திட்டமிட்டபடி முன்னேறியது. (காலப்போக்கில் எரவான் ஹோட்டல் இடிக்கப்பட்டதும், பல நவீன வசதிகள் கொண்ட ‘கிராண்ட் ஹையத் எரவான்’ என்ற பெயர் கொண்ட ஹோட்டலாக அது மாறியதும் வேறு விஷயம்).
நான்கு முகங்கள் கொண்ட இந்த தெய்வத்துக்கு ஆறு கரங்கள். வழிபடுவோரின் எண்ணிக்கை மிக அதிகமானது. அந்த நாட்டிலுள்ள தாய் மக்கள், இந்தியர்கள், சீனர்கள் எனப் பலரும் வாரம் ஒரு முறையாவது எரவான் ஆலயத்துக்கு வந்து வழிபடுவதைப் பழக்கமாக்கிக்கொண்டனர்.
எரவான் ஆலயத்தில்கூட ‘உயர்வாக எண்ணுங்கள். நினைத்தது நடக்கும்’ என்று அவர் பக்தர்களுக்குக் கூறுவதாகப் படுகிறது. ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்பது ஆன்றோர் வாக்கல்லவா?
நடன வழிபாடு வேண்டுதலாக
இங்கே வித்தியாசமான ஒரு வேண்டுதலும் நடைபெறுகிறது. அது நடன வழிபாடு வேண்டுதல்! ஒரு குறிப்பிட்ட தொகையைக் காணிக்கையாக ஆலய நிர்வாகிகளிடம் செலுத்த வேண்டும். அவர்கள் ஒருவகை நடனத்தை ஏற்பாடு செய்வார்கள். ஆலயத்தைச் சுற்றியுள்ள ஓர் இடத்தில் நடனக்குழு தாய்லாந்தின் தனித்துவமான கண்கவர் வண்ண உடைகளுடன் நடனமாடுவார்கள்.
ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, மலர் மாலைகள், மல்லிகை மலர்கள் போன்ற பலவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள் மக்கள். நான்கு திசைகளில், நான்கு முகங்களோடு காட்சியளிக்கிறார் ப்ரா ப்ரோம். ஒவ்வொரு முகத்துக்கும் எதிரிலுமாக இந்தக் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு விதமான அருளாசியை அளிக்குமாம். தாய்லாந்தின் பண்டைய இசை வடிவம் எரவானுக்கு மிகவும் பிடிக்கும் என நம்பப்பட்டு அது தொடர்ந்து இசைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் வேண்டிக் கொள்ளுங்கள் என்று யாரும் விளம்பரப்படுத்தவில்லை. ஆனால், வேண்டுதல் செய்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை என்றால் சாபம் சூழும் என்று எச்சரிக்கிறார்கள்.
சத்ய லோகத்தை வசிப்பிடமாகக் கொண்ட பிரம்மா பாங்காக்கில் சப்தமில்லாமல் அருளாசிகளை வழங்குகிறார். சொல்லப்போனால் இறைவனின் ஆசிகள் இல்லாத இடம்தான் எது? எரவான் என்பதை EREHWON என்று எழுதுகிறார்கள். அந்த வார்த்தையின் எழுத்துகளைத் தலைகீழாக எழுதிப் பார்த்தால் மேற்படி கேள்விக்கான விடை விளங்கிவிடும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago