கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கோடம்பாக்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயிலில் கடந்த சிலமாதங்களாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக வாராஹி, அன்னபூரணி, ஆஞ்சநேயர், பூர்ணா புஷ்கலா சமேத தர்மசாஸ்தா, நாகாத்தம்மன், கன்னிமார் சந்நிதிகளோடு, கோயில் தெய்வங்களான விநாயகர், பாலமுருகன், வைஷ்ணவி, மாஹேஸ்வரி, துர்கை, நவக்கிரகங்கள் சந்நிதிகளுடன் அங்காள பரமேஸ்வரிக்கு விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்காக கடந்த செப்.8-ம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து, செப்.13-ம் தேதி மகா கணபதி ஹோமம்,கோ பூஜை, லட்சுமி ஹோமம், அஸ்வ பூஜை நடைபெற்றது. 14-ம் தேதி நவக்கிரக ஹோமங்கள், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பண பூஜை, கும்பம் அலங்காரம், கலாகர்ஷணம், கலசங்கள் யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தன.

செப்.15-ம் தேதி கோயிலில் புதிதாக எழுந்தருளி அருள்பாலிக்கவுள்ள அனைத்து விக்கிரகங்களும் கிரிவலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து நேற்று அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக, நேற்று காலை 5 மணிக்கு நான்காம் கால பூஜை, தத்வார்ச்சனையும், தொடர்ந்து கிரஹப்ரிதி கலசங்கள் புறப்பாடும் நடந்தது. காலை 6.50 மணிக்கு கோயில் விமான கும்பாபிஷேகம் நடந்தது.

காலை 7.10 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் கருவறை விமானம் மற்றும் பரிவாரதெய்வங்கள் சந்நிதி விமானங்களில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்பு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து நேற்று இரவு புஷ்பக வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்வில், திமுக எம்எல்ஏ கருணாநிதி, கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE