உயிர் வளர்க்கும் திருமந்திரம் 35: ஏல நினைப்பவருக்கு இன்பம் செய்தானே

By கரு.ஆறுமுகத்தமிழன்

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்று சொற்களை நால்வகைப்படுத்துகிறார் தொல்காப்பியர். இயற்சொல் என்பது இயல்பான வழக்குச் சொல்; கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் விளங்கும் சொல். நீர், மலை என்பதைப் போல. திரிசொல் என்பது பொருள் திரிந்த சொல். ஒரு சொல் பல பொருள்களைச் சுட்டலாம்; அல்லது பல சொற்கள் ஒரு பொருளைச் சுட்டலாம்; வெற்பு (மலை), கிள்ளை (கிளி) என்பதைப் போல. கல்லாதவர்கள் பொருள் உணர்வது கடினம். படித்தவர்கள் யாராவது பொருள் சொல்ல வேண்டும். திசைச்சொல் என்பது செந்தமிழ் நிலத்தின் பக்கத்து நிலங்களில் வழங்கும் சொற்கள்.

தாயைத் தள்ளை என்றும் தந்தையை அச்சன் என்றும் வழங்குவதைப் போல. வடசொல் என்பது வடமொழிகளில் வழங்கும் சொல். அந்தச் சொல்லில் வட எழுத்து இருந்தால் அந்த எழுத்தை நீக்கித் தமிழ் ஒலிப்பு முறைக்குப் பொருந்துமாறு அதை மாற்றி வழங்குதல். பங்கஜத்தைப் பங்கயம் என்றும் பக்ஷி என்பதைப் பட்சி என்றும் வருஷத்தை வருடம் என்றும் வழங்குதைப் போல.

சில திரிசொற்களை நம் ஆட்கள் தமிழ் என்றே நம்ப மாட்டார்கள். அவை தமிழ் ஒலிப்பு முறைக்கு மாற்றப்பட்டுவிட்ட வடசொற்கள் என்று உறுதியாக நம்புவார்கள். ‘சலம்’ என்பது அவற்றில் ஒன்று. ‘சலம்’ என்றால் நீர். வடமொழிச் சொல்லான ‘ஜலம்’ என்பதைத்தான் ஒலி பெயர்த்துச் ‘சலம்’ என்று தமிழில் எழுதுவதாகப் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால், சலம் என்பது ஒலிபெயர்ப்புச் சொல் அன்று; அது தமிழ்ச் சொல்லே.

‘சலசல’ என்னும் ஓசையுடன் ஓடியது ‘சலம்’ என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அதெப்படிப் பொருந்தும் என்றால், ‘காகா’ என்று ஒலி எழுப்பும் பறவையைக் காக்கை என்று வழங்கவில்லையா? ‘குர்குர்’ என்று ஒலி எழுப்பும் விலங்கைக் ‘குரங்கு’ என்று வழங்கவில்லையா? அப்படித்தான் ‘சலசல’ என்று ஒலியெழுப்பி ஓடிய நீரைச் ‘சலம்’ என்று வழங்கினோம்.

தண்அம்துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்...

(பரிபாடல், 10:90)

சிலுசிலுவென்று தண்மையாக இருக்கிற செந்நிறப் பொடிகளைப் பூசிக்கொண்டும், கலகலவென்று சிரித்துக்கொண்டும், சலசலவென்று ஓடுகிற வைகைச் சலத்தில் குடைந்து குடைந்து ஆடுகிறார்கள் மதுரைக் குமரிகள் என்று குறிக்கிறது பரிபாடல்.

அசைவது சலம்

சலம் வருகிற வழிக்குப் பெயர் சலவாய். ‘சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்’ என்பதைச் ‘சின்னச் சலவாய்க்குப் போய்வருகிறேன்’ என்று ஒரு காலத்தில் இடக்கரடக்கிப் பேசியிருக்கிறார்கள். நீர்க்கடுப்பைச் சலக்கடுப்பு என்றும் நீரிழிவைச் சலக்கழிச்சல் என்றும் குறித்திருக்கிறார்கள். சிரங்கிலிருந்து வரும் நீர்ப்பொருளுக்குச் சலம் என்று பெயர். சலக்கோவைப் பிடித்தால் சளி வரும். ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் கொண்ட இராசத் திராவகம் என்ற அமிலக் கலவை தங்கத்தை நீரைப் போலக் கரைப்பதற்குப் பயன்படுகிறது. இந்த அமிலக் கலவைக்குத் ‘தங்கம் சலமாக்கி’ என்று தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள்.

சலசலத்துக்கொண்டும் அசைந்துகொண்டும் இருப்பது ‘சலம்’ என்றால், சலசலக்காமலும் அசையாமலும் இருப்பது ‘அசலம்,’ அதாவது மலை. அருணாசலம் அண்ணாமலை; விருத்தாசலம் பழமலை; தணிகாசலம் தணிகைமலை; வேங்கடாசலம் வேங்கடமலை.

ஓடுகின்ற நீருக்கு, சலசலக்கிற ஓசை பற்றி வந்த ‘சலம்’ என்கிற பெயர், நீரின் அசைவு பற்றி, அதாவது நிலையில்லாமல் ஓடுகின்ற தன்மைபற்றி வேறு புதிய பொருள்களைப் பெறுகிறது. அசைவு என்பது மாற்றத்தை, நிலையில்லாத தன்மையைக் குறிக்கிறது. சங்க இலக்கியத்தில் நிலையாமைக் கருதுகோளைச் சித்திரிப்பதற்கான பின்புலமாகக் கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலைத்தான் முன்வைக்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் சலம் என்பது நிலையின்றி அசைகிற, மாற்றத்துக்கு உள்ளாகிற எல்லாவற்றையும் குறிக்கிற சொல் ஆகிறது. இவ்வாறாகச் சலம் என்பது நீரை மட்டும் குறிக்கிற இயற்சொல்லாக இல்லாமல், அசைவு, சுழற்சி, நடுக்கம், பொய், வஞ்சகம், கோபம் ஆகியவற்றையும் குறிக்கிற திரிசொல்லாக உருவெடுக்கிறது.

சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடி...

(சிலம்பு, புகார்க் காண்டம், கனாத்திறம் உரைத்த காதை, 69)

‘மாதவி நிலையான உள்ளம் கொண்டவள் அல்லள்; நேற்றொரு கொள்கை, இன்றொரு கொள்கை என்று தேவைக்குத் தகுந்தாற்போலக் கொள்கைகளை மாற்றி அலைபாயும் உள்ளம் கொண்ட வஞ்சகி’ என்று மாதவியைக் கண்ணகியிடம் பழிக்கிறான் ‘சலம்புணர் கொள்கைச் சலவன்’ கோவலன்.

சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ அற்று.

(குறள் 660)

அரசைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சன், களவாணித்தனம் செய்து, வஞ்சனையான தீய வழிகளில் பொருள் சேர்த்து, கறை படிந்த அந்தக் காசைக் கொண்டு அரசைப் பாதுகாப்பேன் என்பது, இன்னும் சூளையில் சுட்டு இறுக்கப்படாத பச்சை மண் பாண்டத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதைப் போன்றது. பானையும் கரைந்து போகும்; தண்ணீரும் வீணாய்ப் போகும்.

இறைவன் சலமயன்

கோவலன் மாதவியைச் ‘சலதி’ என்றான். வள்ளுவர் திருட்டு வழியில் பணம் சேர்க்கும் அமைச்சனைச் ‘சலவன்’ என்றார். திருமூலரோ இறைவனையே ‘சலமயன்,’ ‘சலவியன்’ என்கிறார்.

தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை;

வான்ஒரு கூறு மருவியும் அங்குஉளான்;

கோன்ஒரு கூறுஉடல் உள்நின்று உயிர்க்கின்ற

தான்ஒரு கூறு சலமயன் ஆமே.

(திருமந்திரம் 112)

கடவுள் என்று பேசினால் அவனது இருப்பு எப்படி, அவனது வண்ணம் எவ்வண்ணம், யார் அவன் என்ற கேள்விகள் வரும். ‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாதே’ என்று, விடை சொல்ல முடியாமல் கைவிரித்த தருணங்களும் உண்டு. திருமூலரைப் போல முரட்டுத் துணிச்சலுடன் சுட்டிக்காட்ட முயன்ற தருணங்களும் உண்டு. இறைவன் எங்கிருக்கிறான், எப்படி இருக்கிறான் என்று கேட்பவர்களே! நீங்கள் பார்க்கின்ற எல்லாவற்றிலும் அவன் இருக்கிறான். நீங்கள் பார்க்காதவற்றிலும் அவன் இருக்கிறான். உங்களுக்கு உள்ளே நின்று இயக்குகின்றவனாகவும் அவன் இருக்கிறான். அவனே இயக்கமாகவும் இருக்கிறான். இறைவன் அசைவில்லாமல் நிலைகுத்தி நிற்கிறவன் அல்லன். அசையாமல் இருந்த இடத்தில் இருக்க அவன் என்ன ஜவுளிக் கடைப் பொம்மையா? அவன் இயக்கமயமாக இருக்கிற சலமயன். ஆடிக்கொண்டே இருக்கிறவன். கூத்தன். சிவமயம் என்பது சலமயம். அறிக.

காலை எழுந்தவர் நித்தலும் நித்தலும்

மாலை படுவதும் வாழ்நாள் கழிவதும்

சாலும்அவ் ஈசன் சலவியன் ஆகிலும்

ஏல நினைப்பவர்க்கு இன்பம்செய் தானே

(திருமந்திரம் 182)

காலையில் எழுகிறோம்; உண்கிறோம்; உடுத்துகிறோம்; திரிகிறோம்; மாலையில் விழுகிறோம்; உறங்குகிறோம். வாழ்நாள் கழிகிறது. வீழ்நாள் வருவதற்குள் அவனைத் தேடிக்கொள்ளுங்கள் என்றால், அவன் சுடுகாட்டையே அரங்கமாக்கி ஆடிக்கொண்டிருக்கிற சலவியன். எந்தச் சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருக்கிறானோ? எங்கே தேடுவது என்கிறவர்களே! நினையுங்கள்! உங்கள் உள்ளக் காட்டிலும் ஆட அவன் வருவான்.

தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்...

(கம்ப ராமாயணம், பாலகாண்டம், மிகை. 85)

தமிழ் என்ற அளவிட முடியாத சலதியைத் தந்தவன் அகத்தியன் என்று பெருமை பேசுகிறது கம்ப ராமாயணத்தின் மிகைப் பாடல் ஒன்று. சலதி என்றால் அசைந்துகொண்டே இருக்கிறவள்.

எது அசைகிறதோ அதுதான் உயிர்ப்போடு இருக்கிறது; எது அசையவில்லையோ அது பிணம். தமிழ் சலதி; சிவன் சலவியன். தமிழும் சரி, சிவமும் சரி, வெள்ளத்துக்குத் தகுந்தாற்போல மலர் தன்னை நீட்டிக்கொள்வதைப் போல, மக்களின் உள்ளங்களுக்கும் உயரங்களுக்கும் தகுந்தாற்போலத் தங்களை நிலைமாற்றி நீட்டிக்கொள்கின்றன.

(தமிழ் அசையும்...)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.co
m

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்