வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நிறைவு: பெரிய தேர் பவனியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் இரவு பெரிய தேர் பவனி நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆக. 29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நவ நாட்கள் திருப்பலி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி, தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் பேராலயத்தில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேர் பவனியில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து கோயில்அர்ச்சகர், முஸ்லிம் தர்கா நிர்வாகி, கிறிஸ்தவ பாதிரியார்கள் பங்கேற்று, உலக மக்கள் நன்மைக்காக வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து, இரவு 7.50 மணி அளவில் பேராலய முகப்பில் இருந்து உத்திரியமாதா, அந்தோணியார் உள்ளிட்ட சிறிய தேர்களையும், புனித ஆரோக்கிய அன்னையின் பெரிய தேரையும் பக்தர்கள் சுமந்து வந்தனர். பின்னர், வேளாங்கண்ணியின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் தேர்கள் மீது மலர்களைத் தூவி, வழிபட்டனர்.

தொடர்ந்து, வேளாங்கண்ணி அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை பேராலயத்தில் ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. மாலையில் கொடி இறக்கத்துடன் ஆண்டுப் பெருவிழா நிறைவு பெற்றது. ஆண்டுப் பெருவிழா நடைபெற்ற 10 நாட்களிலும் வேளாங்கண்ணிக்கு பல லட்சம் பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE