உயிர் வளர்க்கும் திருமந்திரம் 37: காண்பது சக்தி இந்தக் காட்சி நித்யம்

By கரு.ஆறுமுகத்தமிழன்

சடங்குகளை முன்னிறுத்துகிற சமய நெறிகளுக்குள் மக்களை அடைத்து வைப்பதைக் காட்டிலும், ஓகம் போன்ற கட்டற்ற விடுதலை நெறிகளின் வழியாக ஆற்றுப்படுத்துவதில்தான் திருமூலருக்குப் பெருவிருப்பம் இருந்திருக்க வேண்டும்.

அந்நெறி, இந்நெறி என்னாது அட்டாங்கத்

தன்நெறி சென்று சமாதியி லேநின்மின்;

நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்;

புன்னெறி ஆகத்தில் போக்கில்லை ஆகுமே

(திருமந்திரம் 551)

-என்று ஓகத்தைச் சிறப்பித்துப் பேசுகிறார் திருமூலர். ‘இந்த நெறி புது நெறி; இங்கே வா; வேண்டியவற்றைப் பெறுவாய்’ என்று ஒரு பக்கம் அழைக்கிறார்கள். ‘அந்த நெறி சக்கை; எங்கள் நெறியில்தான் இருக்கிறது சாரம்’ என்று மற்றொரு பக்கம் அழைக்கிறார்கள். அந்த நெறியில் போவதா, இந்த நெறியில் போவதா, எந்த நெறி நல்ல நெறி என்று நமக்குத் தடுமாற்றம் வருகிறது. ‘தடுமாறவே வேண்டாம்; அவை அவர்களுடைய நெறிகள்; அவற்றில் அவர்கள் செல்வார்கள்; நீங்கள் ஏன் செல்ல வேண்டும்? நீங்கள் செல்வதற்கு உங்கள் நெறியே இருக்கிறதே? பிறகென்ன? உங்கள் நெறி வழியே நீங்கள் செல்லுங்கள்!

அவரவர்க்கு அவரவர் நெறி!’ என்று திருமூலர் சொல்லும்போது நமக்குக் குழப்பம் வருகிறது: ‘எனக்கென்று ஒரு நெறி இருக்கிறதா? அது என்ன நெறி?’ என்றால், ‘தன் நெறி என்பது ஒருவருக்கு அட்டாங்க நெறியே ஆகும்’ என்று அடையாளம் காட்டுகிறார் திருமூலர். அட்டாங்க நெறி என்பது எட்டு உறுப்புகளால் ஆகிய நெறி. அந்த நெறியில் செல்கிறவர்கள் புலன்களின் வழியில் சிக்கித் தடுமாறாமல் தெளிந்த அறிவைப் பெறுவார்கள்.

புலன்களின் வழிச் செல்வது அவ்வளவு பெரிய குற்றமா? அப்படித்தான் சொல்கின்றன பல்வேறு இந்திய மெய்யியல் கருதுகோள்கள். புலன்கள் பொய்யாக வழிநடத்தும்; எனவே, புலன்கள் வழியாக வருகிற எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பது ஒரு பொதுக் கருத்து.

கண்ணை நம்பாதே;

உன்னை ஏமாற்றும்

நீ காணும் தோற்றம்;

உண்மை இல்லாதது!

-என்று மருதகாசி எழுதிய திரைப்படப் பாட்டில் இந்தப் பொதுக்கருத்தின் செல்வாக்கு வெளிப்படவில்லையா?

புலன்களின்மீது ஏன் இவ்வளவு பெரிய கண்டனம் என்றால், உயிர் வளர்க்கும் தொழிலில் ஆதாரமாகக் கருதப்படுபவை எல்லாமே காட்சிக்கு அப்பாற்பட்டவை—உயிர், கடவுள், அவ்வுலகம் என்று எல்லாம். காண்பதுதான் மெய் என்றால் கடவுளைக் காட்டு என்று கேட்க மாட்டார்களா? காட்டுவதற்குக் கடவுள் என்ன காட்சிப் பொருளா? கருத்துப் பொருள் இல்லையா? எனவே, புலன்களின்மீதான சார்புணர்ச்சி, புலன்களின் வழியாக வருவதே உண்மை என்று நம்புகிற எண்ணம் அடித்து நொறுக்கப்பட வேண்டியிருக்கிறது. அப்போதுதான் கருத்துப் பொருட்களை நிலைநிறுத்த முடியும்.

பாரதி செய்த விசாரணை

இந்த மரபில், புலன்களின் வழி வருவன எல்லாம் மாயை என்று எல்லை கடந்து பேசுகிறது அத்துவைதம். உலகே மாயம்; வாழ்வே மாயம். இவை எல்லாம் உண்மைபோலத் தோன்றுகின்றனவே தவிர, உண்மையில்லை, வெறும் சொப்பனம் என்று அந்தக் கொள்கை அழுத்திச் சொல்கிறது. அதனை முற்கோளாக எடுத்துக்கொண்டு விசாரணை செய்கிறான் பாரதி:

நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே!

நீங்கள்எல்லாம்

சொற்பனம்தானோ? – பல

தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே! கேட்பதுவே! கருதுவதே!

நீங்கள்எல்லாம்

அற்பமாயைகளோ – உம்முள்

ஆழ்ந்த பொருள்இல்லையோ?

(உலகத்தை நோக்கி வினவுதல்)

-என்று கேட்டுக்கொண்டே போனவன், இறுதியில் இவையெல்லாம் சொப்பனமாக, தோற்ற மயக்கங்களாக, அற்ப மாயைகளாக இருக்க முடியாது என்ற முடிவுக்கும் வருகிறான். அந்த முடிவுக்கு வருவதற்கு அவன் ஒரு நியாயம் வழங்குகிறான்:

காண்பஎல்லாம் மறையும்என்றால்

மறைந்ததுஎல்லாம் காண்பம்அன்றோ?

(மேற்படி)

காண்பன எல்லாம் அழியக்கூடியவை; ஆகவே அவை நிலையில்லாதவை; எனவே மாயை என்கிறீர்களே, அழியக்கூடியவை எல்லாம் மீண்டும் உருவாகாவா? அப்போது அவற்றை மீண்டும் பார்க்க மாட்டோமா? மீண்டும் அவை நம் காட்சிக்குக் கூடி வரும் என்ற நிலையில் அவை எப்படிப் பொய்யாகும்? எந்த அடிப்படையில் அவற்றை மாயை—முழுப் பொய் என்கிறீர்கள்?

வீட்டுத் தோட்டத்தில் மாமரம் ஒன்று இருந்தது; காலஞ் சென்று அழிந்தது; அதன் கொட்டை ஒன்று விழுந்து முளைத்து மரமானது; என்றால் மாமரத்தை முழுப் பொய் என்று முற்றாகத் தள்ளிவிட முடியுமா? உண்மையின் சாரம் கொஞ்சம்கூட இல்லாமலா ஒன்று மீண்டும் மீண்டும் முளைத்து வரும்?

அத்துவைதம் சொல்கிறது: இருப்பது ஒன்றே ஒன்றுதான்; மற்ற எல்லாம் அதனுடைய நிழல்கள்; ஆகவே பொய்கள். பாரதி சொல்கிறான்:

சோலையிலே மரங்கள்எல்லாம்

தோன்றுவதுஓர் விதையில்என்றால்

சோலை பொய்யாமோ?-இதைச்

சொல்லொடு சேர்ப்பாரோ?

மரங்கள் எல்லாம் விதையில் இருந்து தோன்றின. இவற்றில் விதை மெய்; விதையில் இருந்து வந்த மரங்கள் பொய் என்றால், இது என்ன அநியாயம்? விதை மெய்யென்று கொண்டால், விளைவையும் மெய்யென்று கொள்ளத்தானே வேண்டும்? விளைவைப் பொய்யென்று கொண்டால், விதையையும் பொய்யென்று தள்ளத்தானே வேண்டும்? ஒன்று மெய், மற்றொன்று பொய் என்றால், இதை ஒரு பேச்சென்று யாரேனும் மதிப்பார்களா? எனவே,

காண்பதுவே உறுதிகண்டோம்

காண்பதுஅல்லால் உறுதிஇல்லை

காண்பது சக்தியாம் – இந்தக்

காட்சி நித்தியமாம்!

- என்று விசாரணையை முடித்துக்கொள்கிறான். அத்துவைதத்தில் தொடங்கிய பாரதியின் விசாரணை சைவ சித்தாந்தத்தில் வந்து முடிகிறது.

நல்லது. திருமூலர் என்ன சொல்கிறார்? அத்துவைதத்தைப் போலப் புலன்களின் வழியாக வரும் அறிவைத் தள்ளுபடி செய்யச் சொல்கிறாரா என்றால், இல்லை. அதற்கு நேர்மாறாகப் பேசுகிறார்:

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவுஇலார்;

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇலை;

அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட்டு

அஞ்சும் அடக்காது அறிவுஅறிந் தேனே.

(திருமந்திரம் 2033)

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து கருவிகள்தாம் உங்களை அலைக்கழிக்கின்றன; இவற்றால் வருகிற இன்பங்களுக்காகத்தான் நீங்கள் அலைபாய்கிறீர்கள்; நீங்கள் நிலைகுத்த வேண்டுமானால் இவற்றை அடக்குங்கள் என்பார்கள். ஆனால் நானோ உங்களுக்குச் சொல்கிறேன்: இந்த ஐந்தையும் அடக்கியாண்ட விண்ணாதி விண்ணன் எவனுமே இல்லை என்பதற்கு அகலிகையைத் தேடி வந்த விண்ணவனாகிய இந்திரனே போதுமான சாட்சி.

கடினந்தான் என்றாலும் ஐந்தையும் அடக்கித்தான் ஆக வேண்டும் என்பவர்களுக்கு வேறொன்று சொல்கிறேன்: ஐந்தையும் அடக்கினால் அடிமுட்டாள் ஆவீர்கள்; அறிவிலி ஆவீர்கள்; சடப்பொருள் ஆவீர்கள். நாற்காலி நீங்கள் அதன்மேல் உட்கார்ந்திருப்பதை அறிவதில்லை; எனவே அது ஐம்புலன்களையும் அடக்கிப் பிரம்மத்தை அறிந்துவிட்டதாக அறிவித்துவிடலாமா? சமையல் பாத்திரம் தனக்குள் சமைக்கப்படும் உணவின் சுவையை அறிவதில்லை; எனவே அதை முற்றும் துறந்த ஞானி என்று பாராட்டுப் பத்திரம் வழங்கலாமா? அறிக நண்பர்களே: புலன்கள் இயங்காத நிலை என்பது உயிரற்ற சடப்பொருள்களுக்கு மட்டுந்தான் வாய்க்கும். உயிர்களோ அறிவுப் பொருட்கள்.

அவை எதை அறிந்தாலும் தங்கள் புலன்களின் வழியாகவே அறிகின்றன. புலன்கள்தாம் நமக்குள் அறிவு வருவதற்கான வாயில்கள். அவற்றை அடைத்துவிட்டால், அறிவு வராது. எனவே புலன்களைத் திறந்து வையுங்கள்; அறிவு வரட்டும் என்கிறார் திருமூலர்.

திருமூலர் மட்டுந்தான் இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கவேண்டாம். திருவள்ளுவரும் சொல்கிறார்:

சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.

(குறள் 27)

ஐந்து புலன்களின் வகை தெரிந்தவனுக்குத்தான் உலகத்தின் வகை தெரியும்.

(வகை வகையாய் அறிவோம்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்