தேனி | ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வராக நதியில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

By என்.கணேஷ்ராஜ்

தேனி: தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. பெரியகுளத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் வராக நதியில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. தேனியில் இந்து முன்னணி சார்பில் பெத்தாட்சி விநாயகர் கோயில் எதிரே தலைமை விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் முருகன், மாவட்டச் செயலாளர் உமையராஜன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கணபதி ஹோமம், யாகசாலை பூஜை நடைபெற்றது.

இதேபோல், இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி அல்லி நகரம் நகராட்சி அலுவலகம் அருகே விநாயகர் சிலை வழிபாடு நடைபெற்றது. நிறுவன தலைவர் பொன்.ரவி, மாவட்டத் தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் தேனி நகரின் பல பகுதிகள், ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 863 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. பெரிய குளத்தில் நேற்று(செப்.7) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதில் 40-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். இந்து முன்னணி நிர்வாகிகள் முருகன், விஷ்ணு பிரியன், பெரியகுளம் நகர பாஜக. தலைவர் முத்துப் பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியே விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு தென்கரை பால சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகில் உள்ள வராக நதியில் கரைக்கப்பட்டன.

தேனி, போடி, கோம்பை, தேவாரம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், கடமலைக் குண்டு, ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் இன்றும் (செப்.8), சின்னமனூரில் நாளையும் (செப்.9) ஊர்வலம் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வினோஜி, சுகுமார் உள்ளிட்டோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE