சங்கடம் தீர்க்கும் கணபதி வழிபாடு | விநாயகர் சதுர்த்தி சிறப்பு

By கே.சுந்தரராமன்

தீவினைகள் பெருகும்போதும், பக்தர்களை அசுரர்களிடம் இருந்து காப்பதற்காகவும், இறைவன் புதிய அவதாரம் எடுத்து அருள்பாலிக்கிறார். தீய எண்ணங்களை அகற்றவும், அசுரர்களை அழிக்கவும் விநாயகப் பெருமான் அவதாரம் செய்தார். இந்து சமயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் பிறந்த முதல் குழந்தையாக விநாயகர் போற்றப்படுகிறார்.

எந்த நல்ல காரியமானாலும் விநாயகரைப் பிரார்த்தித்து சங்கல்பம் செய்து கொண்ட பின்னரே நாம் எதையும் செய்யத் தொடங்குகிறோம். விநாயகர் வழிபாடு தொன்மையானது, பழமையானது. பல விஞ்ஞான உண்மைகள், யோக சாஸ்திரம், தத்துவங்களை உள்ளடக்கிய வழிபாடு.

அனைத்து மூல மந்திரங்களுக்கும், ஸ்தோத்திரங்களுக்கும் ‘ஓம்’ எனும் ப்ரணவமே முதல். கணபதியின் வடிவமும் ஓம்கார வடிவமே. ஓம் என்ற பிரணவ பொருளின் உருவமாக உள்ள விநாயகரை வழிபடும் இந்து சமயப்பிரிவு ‘கணாபத்தியம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஒவ்வோரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். கணபதி, பிள்ளையார், பாலச்சந்திரன், வல்லப கணபதி, சிந்துரா, மூஷிக வாகனன், கஜானனன், வக்ரதுண்டர், ஏகதந்தன் என்று பலப் பெயர்களால் அழைக்கப்படுகிறார். மகோற்கடர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தந்தை மகேஸ்வரனால் விருபாக்ஷன், பரசுபாணி, விக்னேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் தேவதேவன், கற்பக விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பெருச்சாளியின் மீது அமர்ந்தபடி, குள்ளமான உருவம் கோண்டு, யானை முகம், மனித உடல், பூதகணத்தின் கால்கள், தொந்தி வயிறு, ஐந்து கரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நான்கு கைகளில் பாசம், அங்குசம், மோதகம், எழுத்தாணியும், ஐந்தாம் கையான துதிக்கையில் அமுத கலசமும் ஏந்தி காணப்படுகிறார். ஐந்தொழில் புரிபவராகவும், அனைத்து தெய்வங்களையும் தன்னுள் அடக்கியவராகவும், உடநிடத மகா வாக்கியம் ‘தத்துவமசி’ என்பதன் வடிவமாகவும் விநாயகர் போற்றப்படுகிறார்.

தோப்புக் கரணம்: விநாயகரை வழிபடும்போது இரண்டு கைமுட்டிகளாலும் தலையில் நெற்றி ஓரத்தில் குட்டிக் கொள்கிறோம். தோப்புக் கரணம் போடுகிறோம். கஜமுகன் என்ற அசுரனின் தொல்லையை பொறுக்க முடியாததால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

பிள்ளையார், தந்தையின் ஆணையை ஏற்று அசுரனை கொல்ல தன் பூதகணங்களுடன் சென்று பெருச்சாளி வடிவில் இருந்த அவன் அகந்தையை அடக்கி அவனை தமக்கு ஊர்தியாகக் கொண்டார். தேவர்கள் மகிழ்ந்தனர். பிள்ளையாரின் அருள் பெற்றனர். அசுரனை 1,000 தோப்புக் கரணம் போடச் செய்தனர். விநாயகர், 3 தோப்புக் கரணம் போட்டாலே போதுமானது என்றார்.

தலையில் குட்டிக் கொள்ளுதல்: அகத்தியரின் கமண்டலத்தை காக்கை வடிவில் வந்த விநாயகர் காலால் உந்திவிட்டு, கமண்டல நீர் காவிரியாக ஓடச் செய்தார். அகத்தியர் காக்கையைச் சீறினார். அது சிறுவனாக உருமாறி நின்றது. சிறுவனை இரு கைகளா லும் தலையில் குட்ட ஓடினார் அகத்தியர்.

விநாயகர் தம் உண்மை வடிவை காட்டவே, அகத்தியர் தன் தவற்றை உணர்ந்து தாமே தம் தலையில் குட்டிக் கொண்டார். விநாயகரும் பக்தியுடன் நின்று தன் தலையில் குட்டிக் கொள்வோர் கூரிய அறிவும் சீரிய செல்வமும் பெற்று வாழ்வர் என்றார். அன்று முதல் குட்டிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE