சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களை தரிசிக்க ஒருநாள் சுற்றுலா திட்டம்: சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களை தரிசிக்க ஒருநாள் சிறப்பு சுற்றுலா திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செயல்படுத்துகிறது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக தமிழக அரசின் சுற்றுலாத் துறை ஆணையரும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திவ்ய தேசம் பெருமாள் கோயில் ஒருநாள் சுற்றுலா திட்டம், சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தின்படி, சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் சுற்றுலா பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள், மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள், சிங்கபெருமாள்கோவில் பாடலாத்ரி நரசிம்மர், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

இன்னொரு பயண திட்டத்தில், வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும் பேருந்து, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருநீர்மலை நீர்வண்ண பெருமாள், திருமழிசை ஜகன்னாத பெருமாள், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள், பெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் ஆகிய கோயில்களுக்கு சென்று மாலை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தை வந்தடையும்.

இந்த ஒருநாள் சுற்றுலாவுக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக முன்பதிவு மையத்தில் நேரடியாகமுன்பதிவு செய்யலாம். மேலும், சுற்றுலா வளர்ச்சிக் கழக இணையதளத்தின் (www.ttdconline.com ) வாயிலாக ஆன்லைனிலும் முன்பதிவு செய்ய முடியும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் (180042531111), 044-25333333,044-25333444 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். , இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE