செ
ன்னையின் பல இடங்களில் “என்ன ஒரு போக்குவரத்து நெரிசல்! இது நகரமா? நரகமா?’’ என்ற ஆதங்க முணுமுணுப்புகளைக் கேட்க முடியும். ‘வர வர சென்னை தெருக்கள் நடப்பதற்கே லாயக்கில்லாமல் ஆகிவிட்டன’ என்ற விமர்சனங்களும் சகஜம்.
ஆனால் இப்படிப்பட்ட விமர்சனங்களெல்லாம் 70 வருடங்களுக்கு முன்பாகவே சென்னையின் ஒரு பகுதியில் ஒலித்தன. அது இப்போதைய பாரிமுனை-பூக்கடைப் பகுதிதான். அது சென்னையின் இதயம். போதாக்குறைக்கு ‘அப்போதைய கோயம்பேடான’ கொத்தவால் சாவடி காய்கறி அங்காடியும் புறநகர்ப் பேருந்து நிலையமும் கூட அங்குதான் இருந்தன.
அந்தப் பகுதியில் அமைதித் தீவு ஒன்று உள்ளது. அதாவது எள் போட்டால் எண்ணெய்யாக விழும் அந்தப் பகுதியில் அமைதியாக அருகருகே இரண்டு பெரிய கோயில்கள் காட்சி தருகின்றன. தனித்தனி வாயில்கள் இருந்தாலும் எதில் நுழைந்தாலும் இன்னொரு ஆலயத்துக்கும் செல்ல முடியும். இந்த இரண்டில் ஒன்று சிவனின் ஆலயம், மற்றொன்று திருமாலின் ஆலயம். சென்னைக்கு அந்தப் பெயரைக் கொடுத்ததே இந்த ஆலயங்கள்தான் என்கிறது ஒரு தகவல்.
ஒன்று சென்னமல்லீஸ்வரர் ஆலயம் மற்றொன்று சென்னகேசவ பெருமாள் ஆலயம். இந்த இரண்டு ஆலயங்களையும் இணைத்து ‘பட்டணம் கோவில்’ என்று அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள் . இப்போதைய உயர்நீதிமன்றம் முன்னொரு காலத்தில் ஆலயமாக இருந்தது என்றால் உங்களுக்கு வியப்பு உண்டாகலாம்.
இடம் மாறிய ஆலயங்கள்
வியாபாரம் என்ற போர்வையில் நம் நாட்டில் நுழைந்த ஆங்கிலேயர் வாழை மரங்களாகக் குவிந்து கிடந்த பகுதியை இடித்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை எழுப்பினார்கள். ராணுவத்தைப் பெருக்க விரிவான நிலம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்போதைய உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்பு இருந்த சென்னமல்லீஸ்வரர் மற்றும் சென்னகேசவர் ஆகிய திருக்கோயில்களை இடிக்கத் தொடங்கினார்கள்.
சென்னை மக்கள் கொதித்தனர். பெரும் கலவரம் நேர்ந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் முக்கிய அதிகாரியாக இருந்த பிக்கோட் என்பவர் தனது துபாஷியாக (மொழி பெயர்ப்பாளராக) இருந்த முத்துகிருஷ்ண முதலியாரிடம் கலவரத்தை அடக்க வழி கோரினார். “மக்கள் உணர்வை நீங்கள் மதிக்கத் தவறியதால்தான் இந்த நிலை’’ என்ற முத்துகிருஷ்ண முதலியார், “இடித்த இந்தத் திருக்கோயிலின் கற்களைக் கொண்டே நான் வேறு இடத்தில் ஆலயங்களை எழுப்பி விடுகிறேன். கலவரம் அடங்க வாய்ப்பு உண்டு’’ என்றார்.
பிக்கோட் துரை திருக்கோவில் அமைய இடம் அளித்தார். தேவராஜ முதலி தெரு என்று அழைக்கப்படும் தெருவில் ஆலயத்துக்கான நிலம் வழங்கப்பட்டது. தன் சொந்தச் செலவிலேயே இந்த இரு கோயில்களையும் கட்டி முடித்தார் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார்.
ஆலயப் பணி முடியும்வரை சென்னகேசவர் உற்சவ விக்ரகம் திருநீர்மலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. பட்டணம் கோயில் உருவானதும் அந்த விக்ரகத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. திருநீர்மலையில் நான்கு விக்ரகங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றை சென்னகேசவர் என நம்பி அவரை எடுத்து வந்து உற்சவராகப் பிரதிஷ்டை செய்தனர்.
ஆனால், பிறகுதான் பழைய கேசவர் திருநீர்மலையிலேயே தங்கியிருக்கிறார் என்பதும், நரசிம்மர் இங்கு வந்து சேர்ந்து விட்டார் என்பதும் தெரிய வந்தது. (அது சாந்த நரசிம்மர் என்பதுடன், சிங்கமுகம் அற்றவர் என்பதால் அடையாளம் காணத் தவறி விட்டார்கள்). திருமங்கையாழ்வாரால் பாசுரம் பாடப்பட்ட தலம் திருநீர்மலை. எனவே, பாடல் பெற்ற தலத்தின் எம்பெருமான் பட்டணம் கோவிலில் உற்சவராக இருக்கிறார் என்பதும் தனிச்சிறப்புதான்.
பிரசன்ன விநாயகர்
சென்னமல்லீஸ்வரர் திருக்கோவில் நுழைவு வாயிலில் மணிமண்டபம் ஒன்று காணப்படுகிறது. அங்கு மலர் மாலைக் கடைகள் அமைந்து மணம் பரப்புகின்றன. உள்ளே நுழைந்ததும் பிரசன்ன விநாயகர் காட்சியளிக்கிறார். இவருக்குப் பின்புறத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதன் நீர்தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மேற்குப் பிராகாரத்தில் வில்வ மரமும் முருகர் சன்னிதியும் உள்ளன.
சென்னமல்லீஸ்வரர் கோயிலில் முக்கிய தெய்வமாகக் காட்சியளிப்பவர் சென்னமல்லீஸ்வரர். அன்னை பிரமராம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது.
வடக்குப் பிராகாரத்தில் அருணகிரிநாதர் காட்சியளிக்கிறார். திருப்புகழ், கந்தர் அலங்காரம் போன்ற பலவற்றைப் பாடிய இவருக்குத் தனிச் சன்னிதி அமைந்த ஆலயங்கள் குறைவு. அவற்றில் இதுவும் ஒன்று.
சென்னமல்லீஸ்வரர் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள நுழைவு வாயில் உள்ளே நுழைந்தால் சென்னகேசவப் பெருமாள் ஆலயம். ஆக அந்த ஆலயச் சுவரின் ஒருபுறம் ‘சிவ சிவ’ என்று எழுதப்பட்டிருக்க, மறுபுறம் திருநாமச் சின்னங்கள் காட்சியளிக்கின்றன.
நாம், சென்னகேசவப் பெருமாளின் தனிவாயில் வழியாக நுழைந்தோமானால் நுழைவுவாயில் வரை அழகிய மண்டபம் ஒன்று காட்சி தருகிறது. இங்கும் பல கடைகள். வாயிலின் இருபுறமும் ஜெயன், விஜயன் ஆகிய காவல் தெய்வங்களைக் கடந்து உள்ளே செல்கிறோம்.
கண்ணாடி அறை ஒன்று உள்ளது. இறைவனுக்குரிய விழாக்காலங்களில் மற்றும் பிரம்மோற்சவ சமயங்களில் இறைவனின் எழிலைக் கண்டு களிக்க இந்த அறையைத் திறப்பார்கள்.
சக்கரத்தாழ்வார், சஞ்சீவிராயர் (அனுமன்தான்) ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.
அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் இடப்புறம் ஸ்ரீதேவி மற்றும் வலப்புறம் பூமாதேவி ஆகியோருடன் காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக உற்வச மூர்த்தியாக முன்பு நாம் குறிப்பிட்ட சாந்த நரசிம்மர் புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்.
கேசி என்றும் அசுரன் நல்லோர்களுக்குத் தாங்க முடியாத தொல்லைகளை அளிக்கவே, திருமால் அவனை அழித்தார். அதனால் அவருக்கு கேசவர் என்ற திருப்பெயரும் சூட்டப்பட்டது. அவர்தான் சென்னகேசவராக இங்கே எழுந்தருளியிருக்கிறார்.
இருவருக்கும் ஒரே தேர்
ஆலயங்களைச் சுற்றி வரும்போதே நல்லதிர்வுகள் உண்டாகின்றன. ஒவ்வொரு மூலையிலும் ஆலயம் தன் தொன்மையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. வெளியே காணப்படும் இரைச்சலுக்கும் உள்ளே இருக்கும் அமைதிக்கும் உள்ள வேறுபாடு பளிச்சென்று புலனாகிறது. நமக்குள்ளும் ஓர் அமைதி பரவுகிறது.
சிவன், திருமால் ஆகிய இருவருக்குமே ஒரே தேர்தான். தேரின் ஒருபுறம் சிவபெருமானுக்கு உகந்ததாகவும், மறுபுறம் திருமால் ஆலயத் தேர்போலவும் வடிவமைக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பு.
இந்த இரண்டில் ஒன்று ஆலயத்துக்கு ஒரே திருக்குளம்தான். வைர, வெள்ளி நகைகள் கூட இரு முக்கிய தெய்வங்களுக்கும் மாற்றி மாற்றி அணிவிக்கப்படுகின்றன. சிவராத்திரியின்போது லிங்கத்துக்கு அணிவிக்கப்படும் கிரீடம், வைகுண்ட ஏகாதசியின்போது திருமாலின் சிரத்தை அலங்கரிக்கிறது.
சென்னை மக்கள் வேறொரு கோணத்திலும் மறக்கக் கூடாத ஓர் ஆலயம் இது. மதராஸ் என்ற பெயர் சென்னை என்று ஆனதற்கு இரண்டு மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் ஒன்று இந்த ஆலயம் தொடர்பானது. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவப் பெருமாள் ஆகிய பெயர்களிலிருந்து தோன்றியதுதான் சென்னை என்ற பெயர் என்கிறார்கள். சென்னி என்றால் தலை. சென்னி நகர், சென்னை நகர் ஆனது என்கிறார்கள்.
பல மாவட்ட, மாநில மக்கள் சங்கமமாகும் சென்னையில் பொதுவாக இணைந்து காணப்படாத இரு மாபெரும் தெய்வத் திருவுருவங்கள் ஒரே இடத்தில் காட்சியளிப்பதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 hours ago
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
11 days ago