க
டந்த 18 ஆண்டுகளாக 21 நாடுகளைச் சேர்ந்த 135 நகரங்களுக்குள் வலம் வந்துவிட்டுத் தற்போது ஆஸ்திரேலியாவின் பெண்டிகோ நகரத்தில் உள்ள பவுத்த மண்டபத்துக்கு சீனப்பச்சைக் கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான புத்தர் சிலை வந்துசேர்ந்திருக்கிறது. இது ஒரே கல்லில் செய்யப்பட்டது. கிரேன் மூலமாக இறக்கப்பட்டு மண்டபத்தின் மேடையில் ஏற்றப்பட்டிருக்கிறது பத்து லட்சம் டாலர்கள் மதிப்புமிக்க அந்தச் சிலை.
உலுக்கிய பயணம்
ஆஸ்திரேலியாவின் மத்திய விக்டோரியா மாநிலத்தின் பெண்டிகோ நகரத்தில் உள்ளது ‘கிரேட் ஸ்தூபா ஆஃப் யூனிவர்சல் கம்பேஷன்’ என்றழைக்கப்படும் பவுத்த மண்டபம். 38 ஆண்டுகளுக்கு முன்னால் 210 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இந்த மண்டபம் இன்றுவரை மேற்கத்திய உலகின் மிகப் பெரிய மண்டபம் எனச் சொல்லப்படுகிறது.
இந்த மண்டபத்தின் தலைவர் அயன் கிரீன். ஆஸ்திரேலிய விளம்பரத் துறையில் கொடிகட்டிப் பறந்தவர். இந்தியாவுக்கு 1970-களில் வருகை தந்த பிறகு பவுத்தத்தில் சரணாகதி அடைந்திருக்கிறார். “மெழுகுவர்த்தியை இரு புறமும் ஏற்றியதுபோல என்னை முற்றிலுமாக உருக்கியது அந்தப் பயணம். என்னுடைய வாழ்க்கையில் செய்தாகவேண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அதைச் செய்யத் தவறிவிட்டால் இளம்வயதிலேயே நான் இறக்க நேரிடும், அதுவும் அர்த்தமற்ற மரணமாகிவிடுமோ என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” என்கிறார் அயன் கிரீன்.
ஆர்க்டிக் பரப்பில் அவருக்குச் சொந்தமான இடத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியது இந்தப் புத்தர் சிலையின் கதை. வட கனடாவில் நடைபெற்று வந்த சுரங்க வேலைக்கு நடுவில் தென்பட்டது 18 ஆயிரம் கிலோ எடைகொண்ட சீனப்பச்சைப் பாறாங்கல் ஒன்று. இந்தப் பிரம்மாண்டமான பாறாங்கல்லைச் சில்லு சில்லாக உடைத்துக் கை வளையல்களாக மாற்றுவதற்குப் பதிலாக மகத்தான வேறொன்றை உருவாக்கலாமே என்கிற எண்ணம் அந்தக் கல்லைப் பார்த்தும் அயன் கிரீனுக்குத் தோன்றியது. அப்போது, அவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்திருக்கிறது. முன்பின் தெரியாத அமெரிக்கர் ஒருவர், “நாங்கள் மிகப் பெரிய புத்தரைச் செய்யலாம் என நினைக்கிறோம்” என்று தொலைபேசி உரையாடலின்போது சொல்லி இருக்கிறார். தொலைபேசியில் பேசிய செய்யனே சன்ஹில் என்ற அந்த நபர் ஒரு நகை வியாபாரியும் புத்தரின் நேசரும் ஆவார்.
கிடைத்ததை அர்ப்பணி!
தனக்கு வந்த இந்த அழைப்பைக் குறித்துத் தன்னுடைய ஆசான் லாமா ஜோபா ரிம்போச்சேவிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் அயன் கிரீன். “உனக்குக் கிடைத்தது உலகுக்கு அர்ப்பணிக்க வேண்டிய புனிதப் பொருள்” என்றிருக்கிறார் ஆசான். தன்னுடைய ஆசானின் கட்டளைக்கு மறுவார்த்தை பேசாத அயன் கிரீன் அப்படியே செய்ய முடிவெடுத்தார். அதன்படி சிலையை வடித்த பின்னர் டிரக், லாரி, படகு என விதவிதமான வாகனங்களில் ஏற்றி உலகம் முழுவதும் எடுத்துச்சென்றிருக்கிறார். அதில் ஒரு முறை மோசமான சாலைவிபத்தில் சிக்கி லாரியில் இருந்து புத்தர் சிலை கீழே விழுந்தது மறக்க முடியாது சம்பவம் என்கிறார்.
எத்தகைய சூழலிலும் சிலையின் வடிவம் சிதைந்துவிடக் கூடாது என்கிற பதைபதைப்பை அனுபவித்த நாட்களை 18 ஆண்டுகள் கழித்து நினைவுகூருகிறார். இத்தனை பதற்றத்துக்கும் காரணம், அது புத்தரின் சிலை என்பதாலா அல்லது விலையுயர்ந்த சீனப்பச்சைக் கல்லைக் கொண்டு செய்யப்பட்ட சிலை என்பதலா என்று கேள்வி எழுப்பியவர்களுக்குத் திபெத்திய லாமாக்களின் தத்துவப் போதனையை அவர் சுட்டிக்காட்டுகிறார்: “பச்சைக்கல்லோ அல்லது மரமோ எதைக் கொண்டு நீங்கள் புத்தரை வடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அவ்வளவு ஏன் கழிவாலும் கூட அச்சிலையை வடிக்கலாம். ஆனால், வடிவம் மிக முக்கியம்”.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago