பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதீனகர்த்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: தமிழக அரசு பொறுப்பேற்ற பின்னர் 2,000-வதாக நேற்று நடைபெற்ற, பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஆதீனகர்த்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள பரசலூரில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இளம் கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோயில்உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்துக்கான முதல்கால யாகசாலை பூஜை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மங்கல வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க கடங்கள்புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகபரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் 234-வது குருமகா சந்நிதானம் நாகராஜ் சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் முன்னிலையில், சிவாச்சாரியார்கள் விமானக் கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

விழாவில், அறநிலையத் துறைஆணையர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, மயிலாடுதுறை எம்.பி. சுதா, எம்எல்ஏக்கள்நிவேதா எம்.முருகன், எஸ்.ராஜகுமார், காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கும்பாபிஷேகம், தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் 2 ஆயிரமாவது கும்பாபிஷேகம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE