சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

By த.அசோக் குமார்

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டத்தில் பழமை வாய்ந்த தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரநாராயண சுவாமி கோயில் அமந்துள்ளது. இந்த கோயிலில் கடந்த 2008-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 16 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணி வேலைகள் நடைபெற்று இன்று (வெள்ளிக்கிழமை) குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதற்காக கோயிலில் 66 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. கடந்த 16-ம் தேதி மங்கல வாத்தியம் முழுங்க வேத பாராயணம், திருமுறை பாராயணத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தினமும் காலை, மாலையில் வேத பாராயணம், திருமுறை பாராயணம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

கடந்த 19-ம் தேதி அனைத்து பரிவாரமூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி மாலையில் முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 21-ம் தேதி காலையில் இரண்டாம்கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜை, 22-ம் தேதி காலையில் நான்காம்கால யாகசாலை பூஜை, அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடு, மாலையில் ஐந்தாம்கால யாகசாலை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இன்று காலை 6.30 மணிக்கு ஆறாம்கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.20 மணிக்கு கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி விமானம், ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழாவும், கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, மூலஸ்தான குடமுழுக்கு விழா, தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி தொகுதி எம்பி டாக்டர் ராணிஸ்ரீ குமார், சங்கரன்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.ராஜா, முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அதிமுக மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் , அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனி செல்வம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.

அனுமதி சீட்டு வழங்குவதில் குளறுபடி: குடமுழுக்கு விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். குடமுழுக்கு விழாவுக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படுவதாக தகவல் பரவியதையடுத்து நேற்று இரவு 8 மணி முதல் ஏராளமானோர் கோயிலில் உள்ள அலுவலகம் முன்பு திரண்டனர். இரவு 12 மணி வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டதாகவும், 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE