பழநி பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலம்

By ஆ.நல்லசிவன்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா ஆக.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பக்தி சொற்பொழிவு மற்றும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் 7-ம் நாளான ஆக.21-ம் தேதி அகோபில வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ( வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம் நடந்தது.

முன்னதாக, பெருமாள் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர், தேரேற்றம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் கோவிந்தா முழக்கத்துடன் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை (ஆக.24) கொடியிறக்குதல், ஆக.25-ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE