உயிர் வளர்க்கும் திருமந்திரம் 27: மதமும் மதுவும் ஒன்று

By கரு.ஆறுமுகத்தமிழன்

திருவருட்பிரகாச வள்ளலார் தனக்காகச் சிலவற்றைக் கடவுளிடம் வேண்டுகிறார்:

... பெருநெறி பிடித்துஒழுக வேண்டும்;

மதமான பேய்

பிடியாது இருக்க வேண்டும்;

(திருவருட்பா, தெய்வமணிமாலை, 8)

‘மதம்’ ஒரு பேய். அது யாரைப் பிடித்துக்கொண்டதோ அவர்களின் அறிவழிக்கும்; ஆட்டிவைக்கும். அவர்களுக்குச் சொந்தமாகவே எண்ணத் தெரிந்திருந்தாலும் எண்ண விடாது; ஒன்றிரண்டாக எண்ணியவற்றைப் பேசத் தெரிந்திருந்தாலும் பேசவிடாது. தன் எண்ணத்தை அவர்கள்மேல் திணிக்கும்; அதை அவர்கள் வாயால், வெறிகொண்டு பேசத் தூண்டும். அவர்களின் தலைவிரித்துத் தான் ஆடும். எனவே மதம் என்கிற பேய் பிடிக்காமல் இருக்க வேண்டும்.

மதத்தின் குற்றம் என்னவென்றால், அது தன்னிடம் பிடிபட்டவர்களைக் குறுக்கும்; சிறுமைப்படுத்தும். இந்த உலகத்தை, உலகத்தின் இயக்கத்தைப் பரந்தும் பகுத்தும் எவ்வளவு தூரம் அறிய முடியுமோ அவ்வளவு தூரம் அறிவதுதான் அறிவு என்ற நிலைக்கு மாறாக, தன்னை மட்டுமே அறிந்தால் போதும்—அப்படிக்கூடச் சொல்லக் கூடாது—தன்னை மட்டுமே ‘நம்பினால்’ போதும் என்ற நிலைக்கு மதம் மனிதர்களை ஆட்படுத்தும். ஆகவே, பிற எல்லாவற்றையும் நம் பார்வையிலிருந்து மறைத்து, தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் காட்டுகிற மதம், ஒரு பேய்; அது உங்களைப் பிடித்து ஆட்ட விட்டுவிடாதீர்கள்; மாறாக, எல்லாவற்றையும் பார்க்க வகை செய்கிற பெருநெறியைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

‘பெருநெறி’ என்பது தொல்காப்பியம் புழங்கிய சொல். ‘வேளாண் பெருநெறி’ என்று உணவிட்டு விருந்தோம்பும் பெருநெறியைக் குறிக்கிறது தொல்காப்பியம்.

தரும தலைவன் தலைமையில் உரைத்த

பெருமைசால் நல்அறம் பெருகாது ஆகி,

இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி

அறுகையும் நெருஞ்சியும்

அடர்ந்துகண் அடைத்துஆங்குச்

செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்என்று

உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது

(மணிமேகலை,

அறவணர்த் தொழுத காதை, 57-62)

தருமத்தின் தலைவனாகிய புத்தன் நல்லறம் சொன்னான்; அது பல்கிப் பெருகவில்லை. விடுதலைக்கு வழிநடத்தும் பெருவழியைக் காட்டினான்; அந்தப் பெருவழியில் அருகம் புல்லும் நெருஞ்சி முள்ளும் படர்ந்து பாதையை மறைத்தன. துன்பத்தை வழங்கும் பாதை ஒன்று மட்டுமே பாதையாகத் தெரிய, உயிர்கள் அதையே பெருநெறியாகக் கொண்டு ஒழுகத் தொடங்கின என்று பெருநெறியை எதிர்மறையாகக் குறிக்கிறது மணிமேகலை.

முந்தை எழுத்தின் வரவுஉணர்ந்து, பிற்பாடு

தந்தையும் தாயும் வழிபட்டு - வந்த

ஒழுக்கம், பெருநெறி சேர்தல், இம்மூன்றும்

விழுப்பநெறி தூரா ஆறு

(திரிகடுகம், 56)

கசடு அறக் கற்றல், தந்தை தாய்ப் பேணுதல், கற்றும் கண்டும் உணர்ந்தும் அறிந்த சான்றோர்கள் சென்ற பெருநெறியில் செல்லுதல் ஆகிய இம்மூன்றும் ஒருவனுக்கு உயர்வைத் தரும் என்று ஒழுக்கத்தின் அடிப்படையில் பெருநெறியைப் பற்றிப் பேசுகிறது திரிகடுகம்.

முரண்டு பிடிப்பது சிறுநெறி

தமிழ் நெடுகப் பலரும் பலவிதமாய்க் கையாண்ட பெருநெறி என்னும் சொல்லை வள்ளலார் கையாண்ட விதம் புதிது. தமிழை ஆய்ந்து, அதன் தன்மை அறிந்தோர் எல்லோர்க்கும் விரிந்து இடம் கொடுக்கும் சங்கப் பலகை என்ற பழங்கதைபோல, உண்மையை ஆய்ந்து, அதன் இயல்பை உணர்ந்தோர் எல்லோர்க்கும் அகன்று இடம் கொடுக்கும் நெறி பெருநெறி. ‘என் மதம் ஈது, உன் மதம் தீது’ என்பது முரண்டு பிடிப்பது சிறுநெறி. அறிவற்று அயர்வோரை அது பேய் பிடிப்பதுபோலப் பிடித்துக்கொண்டு ஆட்டும். ஆனால், பெருநெறி என்பது பொய்தீர் ஒழுக்க நெறி. மதம் பிடிப்பதைப் போல் பெருநெறி உங்களைப் பிடிக்காது; அறிவோடு அணுகி, நீங்கள்தாம் பெருநெறியைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.

வள்ளலாரின் முன்னோடியாகிய திருமூலரும் பெருநெறி பேசுகிறார்; ஆனால் இவர் பேசும் விதம் வேறு:

பெற்றார் உலகில் பிரியாப் பெருநெறி;

பெற்றார் உலகில் பிறவாப் பெரும்பயன்;

பெற்றார்அம் மன்றில் பிரியாப் பெரும்பேறு;

பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே

(திருமந்திரம், 132)

‘ஆடுகின்றானடீ தில்லையிலே, அதைக் காண வந்தேன் அவன் எல்லையிலே’ என்று ஆடும் கூத்தனின் ஆட்டம் பார்க்கத் தில்லைக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கையால் பெரும்பான்மையினர் என்றாலும், நெறியால் சிறுநெறியினர்; ஏனென்றால், அவர்கள் தில்லையம்பலத்தைவிட்டு நகர்ந்த அடுத்த நொடியிலேயே கூத்தனை விட்டும் நகர்ந்து விடுகிறார்கள். ஆனால், கூத்தன் புறவெளியில் ஆடவில்லை; தனக்குள்ளேயே இருக்கிற அகவெளியில்தான் ஆடுகிறான் என்று கண்டுகொண்டவர்களோ எண்ணிக்கையால் சிறுபான்மையினர் என்றாலும், நெறியால் பெருநெறியினர்; ஏனென்றால் அவர்கள் சிற்றம்பலத்தையும் அதில் ஆடும் கூத்தனையும் எப்போதும் தங்களுடனேயே வைத்திருக்கிறவர்கள்; பிரியாத பெருநிலை பெற்றவர்கள். உயிர் விடுதலை என்பது உலகம் உள்ளிட்ட அனைத்தையும் விட்ட பிறகுதான் கிடைக்கும் என்பதற்கு மாறாக, உள்ளத்தால் இறைவனைத் தொட்ட உடனேயே கிடைத்துவிடும் என்று இந்தப் பாட்டில் முன்வைக்கிறார் திருமூலர். இறைவனைப் பிரியாதிருக்கும் நெறி அனைவருக்கும் கிடைத்துவிடக்கூடிய எளிய நெறி அன்று; அரிதிலும் அரிதாய்க் கிடைப்பது. ஆகவே அது பெருநெறி.

இருவரும் ஒருவரே

பெருநெறி எது என்பதை விளக்கப்படுத்துவதில் திருமூலரும் வள்ளலாரும் வேறுபடுகிறார்களே ஒழிய, மதம் பிடித்து அலைவதைக் கண்டனம் செய்வதில் இருவரும் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.

சாதியிலே, மதங்களிலே, சமயநெறி களிலே,

சாத்திரச்சந் தடிகளிலே, கோத்திரச்

சண்டையிலே,

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!

அலைந்துஅலைந்து வீணேநீர்

அழிதல்அழகு அலவே...

(திருவருட்பா VI,

புனிதகுலம் பெறுமாறு புகலல், 1)

சாதிச் சண்டை, மதச் சண்டை, சமயநெறிச் சண்டை, சாத்திரச் சண்டை, கோத்திரச் சண்டை, எல்லாவற்றிற்கும் ஆதியிலே வந்தது எது என்பது குறித்து எள்ளளவு விவரமும் இல்லாமல், ‘கோழிதான் முதல்,’ ‘முட்டைதான் முதல்’ என்று நீங்களே செய்துகொண்ட ஊகங்களுக்காகப் போடுகிற வெட்டிச் சண்டை—எத்தனை எத்தனை சண்டைகள்? சமாதானத்தைக் கட்டி வைப்பதற்கு அல்லாமல் சண்டையிட்டு முட்டி நிற்பதற்கே அலைகிற மனிதர்களே! இது அழகா என்று மதம் முதலியவற்றை அழுத்தந்திருத்தமாகக் கண்டனம் செய்து பாடுகிறார் வள்ளலார்.

மயக்கும் சமய மலம்மன்னும் மூடர்,

மயக்கும் மதுஉண்ணும் மாமூடர், தேரார்;

மயக்குஉறு மாமாயை மாயையின் வீடு

மயக்கில் தெளியின் மயக்குஉறும் அன்றே

(திருமந்திரம், 329)

மதமும் மதுவும் ஒன்று. ஏனென்றால் இரண்டுமே அறிவைக் கெடுப்பவை. உலக வாழ்வில் வரும் துன்பங்களைவிட்டு நீங்க நினைக்கிறவர்களில் சிலர், உலகத்தை மறந்துவிட்டால் தம்முடைய துன்பங்கள் நீங்கிவிடும் என்று நினைக்கிறார்கள். உலகத்தை மறப்பதற்கு மது உதவும் என்று கருதி மதுவெறி கொண்டு மயங்குகிறார்கள். வேறு சிலரோ உலகத்தை மறப்பதற்கு மதம் உதவும் என்று கருதி மதவெறி கொண்டு மயங்குகிறார்கள். ஒரு வகையினர் முட்டாள்கள் என்றால் மற்றொரு வகையினர் அடிமுட்டாள்கள். துன்பத்திலிருந்து நீங்க விரும்புகிறவர்கள் துன்பத்தின் உற்பத்தி எங்கிருந்து தொடங்குகிறது என்று பார்க்க வேண்டும்; அதற்கு அறிவை விழிப்பாகக் கூர் தீட்டி வைத்திருக்க வேண்டுமே அன்றி, அறிவை மதுவாலும் மதத்தாலும் மயக்கக் கூடாது. காலில் முள் ஏறித் துன்பப்படுத்துகிறது என்றால் முள்ளை எடுத்துத் தூர எறிவதுதான் வழியே தவிர, வலியை மறப்பது அன்று. அறிவை மறைப்பது எதுவாக இருந்தாலும் அதைச் சைவம் மலம் என்று அழைக்கும். மதம் அறிவை மறைத்து உங்களை வெறிகொள்ளச் செய்யுமானால் மதத்தை மலம் என்று அழைப்பதற்கும் திருமூலர் தயங்குவதில்லை.

(சூழும் இருள் களைவோம்) கட்டுரையாசிரியர்,

தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்