உ
லகம் எப்படி உருவானது என்ற கேள்விக்கு மாந்தர்கள் விடை சிந்தித்திருக்கிறார்கள். அறிவியல் கூரோடு சிந்தித்த ஆசீவகவாதி இப்படியாகச் சொல்கிறான்.
அவ்அணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
பெய்வகை கூடிப் பிரியவும் செய்யும்;
நிலம்நீர் தீக்காற்று எனநால் வகையின
மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும்;
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்.
(மணிமேகலை, சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை, 114-118)
நிலம், நீர், தீ, காற்று என்று நால்வகை அணுக்கள். புலன்களால் நேரடியாக அறிய முடியாத அளவுக்கு நுணுக்கமாக இருக்கும் இந்த நால்வகை அணுக்கள், நாம் தொட்டும் கண்டும் உணர்ந்துகொள்ளும் வகையில், ஒன்றோடு ஒன்று கலக்கும் வீதத்தில் கலந்து, மலை, மரம், உடம்பு என்று பல்வேறு பொருள்களாக ஆகித் திரளவும் செய்கின்றன; தங்களுக்குள்ளாகவே பகுப்படைந்து, பிரிந்து, பல்வேறாகிப் பெருகவும் செய்கின்றன.
மதங்கள் உருவான கதையும் இதுதான். கடவுள், உயிர், இவ்வுலகம், அவ்வுலகம் என்ற நான்கும் ஒன்றோடு ஒன்று கலக்கும் வீதத்தில் கலந்து பெருமதங்களாகித் திரளவும் செய்கின்றன; தங்களுக்குள்ளாகவே பகுப்படைந்து, பிரிந்து, பல்வேறாகிப் பெருகவும் செய்கின்றன. கடவுள் உட்பட ஒன்றுமே இல்லை என்று ஒரு மதம்; கடவுளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்று ஒரு மதம்; உலகம் மட்டுமே உண்டு என்று ஒரு மதம்; உலகமும் உயிரும் மட்டுமே உள்ளன என்று ஒரு மதம்;
கடவுள், உயிர், இவ்வுலகம், அவ்வுலகம் என்று எல்லாமே உண்டு என்று ஒரு மதம்; கடவுள் இருக்கிறார் என்பது சரி, ஆனால் யார் கடவுள் என்று வரும்போது கடவுளை வெவ்வேறாக அடையாளம் காட்டும் பல மதங்கள்; ஒரே கடவுளை அடையாளம் காட்டினாலும் அவரை வழிபடும் முறையால் தனித்தனியாக வேறுபட்டு நிற்கும் சில மதங்கள்; கடவுள் உயிரை எவ்வாறு ஆட்கொள்வார் என்று வகைவகையாக விளக்கப்படுத்தும் பல மதங்கள்—என்று இவ்வாறாகத் திரண்டும் பெருகியும் நிற்கின்றன மதங்கள்.
பிரிந்து பெருகிக் கிடக்கிற மதங்கள் ஒருங்கிணைந்து ஒன்று திரள்வது நல்லதா, திரண்டு கிடக்கிற மதங்கள் பிரிந்து பெருகுவது நல்லதா? அது காலத்தின் தேவையைப் பொறுத்தது. பானை செய்கிற குயவரின் விரல்கள் எந்தப் போக்கில் வளைகின்றனவோ அந்தப் போக்கிலேயே வளைந்து பானை உருப்பெறுவதைப் போல, காலம் வகிர்ந்துவிட்டால் ஒன்றிக் கிடப்பவை பிளந்துபடுகின்றன; காலம் குழைத்துவிட்டால் பிளந்து கிடப்பவை ஒருங்கிணைகின்றன.
சைவத்தில் இத்தனை திறங்களா
திருமூலர் காலத்தில் சைவம் ஒற்றை மதமாக இல்லை. வாமம், வயிரவம், பாசுபதம், மாவிரதம் என்ற காபாலிகம், காளாமுகம், ஐக்கியவாத சைவம் என்று ஆறு பெரும் பிரிவுகளாகப் பிரிந்து கிடந்தது. இவை தவிரத் தமிழ்நாட்டில் வழங்கும் சித்தாந்த சைவம், காசுமீரத்தில் வழங்கும் காசுமீர சைவம், லிங்காயத்தை உடன்வைத்துக் கருநாடகத்தில் வழங்கும் வீரசைவம்.
இவையும் போகப் பேதவாத சைவம், பாடாணவாத சைவம், சிவசங்கிராந்த சைவம், ஈசுவர அவிகார சைவம், சிவாத்துவைத சைவம், ஊர்த்துவ சைவம், அனாதி சைவம், ஆதி சைவம், மகா சைவம், பேத சைவம், அபேத சைவம், அந்தர சைவம், குண சைவம், நிர்க்குண சைவம், அணு சைவம், கிரியா சைவம், நாலுபாத சைவம் என்று எண்ணற்றுப் பெருகிக் கிடந்த சைவக் குறும்பிரிவுகள். ‘சைவத்தில் இத்தனை திறங்களா!’ என்று மலைப்பாக இருக்கிறதல்லவா? வழிபடும் கடவுள் ஒன்று; அந்தக் கடவுளைப் பற்றிய கருத்து நிலைகள், வழிபடும் முறைகள் வேறு வேறு.
‘இருப்பது ஒன்றே ஒன்று; ஆகவே கையைக் கட்டு, வாயைப் பொத்து’ என்று இறுக்கிப் பிடிப்பதைக் காட்டிலும், ‘இருப்பது எதுவோ அதை நீ எண்ணிய வண்ணம் கருதிக்கொள்ளலாம்; ஆகவே வசதிபோலக் கையைக் காலை நீட்டு; கிடக்க விரும்பினால் கிட; இருக்க விரும்பினால் இரு; நிற்க விரும்பினால் நில்; இயல்பாக இரு’ என்று விட்டுப் பிடிப்பதுதானே நல்லது? குட்டையும் நெட்டையுமாய், கனமும் மெலிவுமாய், கரவும் செறிவுமாய், கறுப்பும் வெளுப்புமாய் மனிதர்கள் பல சாயல்கள் உடையவர்கள் இல்லையா? அவர்களுடைய கருத்து நிலைகளும் அப்படித்தானே?
அங்கையுள் அனலும் வைத்தார்;
அறுவகைச் சமயம் வைத்தார்;
தம்கையில் வீணை வைத்தார்;
தம்அடி பரவ வைத்தார்;
திங்களைக் கங்கை யோடு
திகழ்தரு சடையுள் வைத்தார்;
மங்கையைப் பாகம் வைத்தார்
மாமறைக் காட னாரே
(தேவாரம் 4:33:6)
-என்று பாடுகிறார் அப்பர். திங்களையும் கங்கையையும் தலையில் வைத்துக்கொண்ட இறையனார், மங்கையைத் தன்னில் ஒரு பாகமாகவே வைத்துக்கொண்டார்; ஒரு கையில் வீணை வைத்துக்கொண்டார்; ஒரு கையில் அனலை வைத்துக்கொண்டார். எதையும் தள்ளவில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் இடம். இவற்றையெல்லாம் தனக்காக வைத்துக்கொண்டவர், மனிதர்களுக்காக ஆறு வகைச் சமயம் வைத்தார். ‘எவ்வண்ணம் கருத விரும்புகிறாயோ அவ்வண்ணமே என்னைக் கருது; எவ்வண்ணம் என்னைப் பரவ விரும்புகிறாயோ அவ்வண்ணமே என்னைப் பரவு’ என்று, கைகட்டி வாய்பொத்தச் சொல்லாமல், தன்னையும் தந்து என்னையும் விடுதலையாக்கினார் வான்கருணை வள்ளல்.
ஒருமை பாடும் திருமூலர்
சனங்களுக்காகச் சிவனார் வைத்த நெறி ஆறு என்று அப்பர் பன்மை பாட, சிவ நெறி ஒன்றே ஒன்று என்று ஒருமை பாடுகிறார் திருமூலர்:
சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுஉண்டு;
தெய்வச் சிவநெறி, சன்மார்க்கம், சேர்ந்துஉய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே. (திருமந்திரம் 1567)
சைவ சமயத்தின் தனித் தலைவனாகிய இறையனார் சனங்கள் உய்வதற்காகத் தானே வகுத்து வைத்த அறிவு நெறி ஒன்று உண்டு. அது உண்மை நெறியாகிய சிவநெறி. உய்வடைய நினைப்பவர்களுக்கு அதுவே வழி.
ஒரே சமயத்தைத் தழுவி, ஒரே இறைவனைப் பாடிய இருவர் பார்வையிலும் எவ்வளவு வேறுபாடு! உண்மையில் அது வேறுபாடுதானா? தோண்டிப் பார்க்கலாம்.
மெய்யியலில் கடைப்பிடித்தே ஆக வேண்டிய மரபு ஒன்று உண்டு. பேசுவது எதைப் பற்றியானாலும் முதலில் தான் அதைக் கருதிய விதம் எவ்வாறு என்பதை வரையறை செய்துவிட்டுப் பிறகு பேச வேண்டும்; பயன்படுத்தும் பதங்கள் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிவுபடுத்திவிட்டுப் பிறகு பேச வேண்டும். பொருள் குழப்பம் இல்லாமல் இருக்க இந்த வழிமுறை.
சைவம் என்றால் என்ன என்பதைத் தெளிவாக வரையறை செய்தவர் திருமூலர்.
சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆகுதல்;
சைவம் தனைஅறிந் தேசிவம் சாருதல்;
சைவம் சிவம்அன்றிச் சாராமல் நீவுதல்;
சைவம் சிவானந்தம்; சாயுச் சியமே. (திருமந்திரம் 1512)
இதற்கென்ன வரையறை? சிவனைக் கும்பிட்டால் சைவம். இதைப் போய் வரையறை செய்ய வேண்டுமா என்றால், சிவனைக் கும்பிட்டால் மட்டுமே சைவம் கிடையாது; சிவனோடு சம்பந்தம் ஆனால்தான் சைவம். தான் யார் என்று அறிந்து, சிவம் யார் என்று உணர்ந்து, சிவத்தையே சார்ந்து கொள்ளுதல் சைவம். சிவத்தைச் சார்ந்துகொண்டபின் வேறெதையும் சாராமல் விலகி நிற்றல் சைவம். சிவ இன்பத்தில் தோய்ந்திருத்தல் சைவம். சிவத்துக்குள் ஒன்றிப்போதலே சைவம். முரட்டுச் சைவம் பேசுகிறாரோ திருமூலர்?
(தொடர்வோம் திருமூலரை...)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago