முனுகப்பட்டு பச்சையம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் முனுகப்பட்டு கிராமத்தில் பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயில் உள்ளது. முன்னொரு காலத்தில், தீவிர சிவ பக்தரான பிருங்கி முனிவர், சிவனை வழிபட்டு விட்டு, பார்வதி தேவியை வழிபடாமல் சென்றார்.

இதனால், வருத்தமடைந்த பார்வதி தேவி, தனக்கும் முக்கியத்துவம் தர சிவனின் உடலில் சரிபாதி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதற்கு சிவன் செவிசாய்க்கவில்லை. எப்படியும் சிவனின் உடலில் சரிபாதியை பெற்றிட வேண்டி, செய்யாறு அருகே முனுகப்பட்டு பகுதியில் வாழைத் தோட்டங்களுக்கு நடுவில் மண்ணால் சிவலிங்கத்தை தோற்றுவித்து பூஜை செய்தார்.

நாள்தோறும் பூஜைக்கான தண்ணீர் வேண்டும் என்பதால் விநாயகரையும், முருகனையும் தண்ணீர் எடுத்து வருமாறு வேண்டினார். அவர்கள் வருவதற்கு தாமதமானதால் பார்வதி தேவி பூமியைத் தோண்டி கங்கா தேவியை வரவழைத்து, பூஜை செய்யத் தொடங்கினார். இதைக்கண்ட இந்திரன் முதலான தேவர்கள், ரிஷிகள் அவரை வணங்கினர்.

இந்த புண்ணிய தலமே பிற்காலத்தில் பச்சையம்மன் கோயிலாக மாறியதாக கோயிலின் தல வரலாறு கூறுகிறது. பிள்ளை வரம் வேண்டுபவர்கள் கோயிலில் உள்ள வேப்பமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.

இந்தக் கோயிலில் அரச மரமும், வேப்ப மரமும் இணைந்திருப்பதால், இங்கு வந்து வேண்டினால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. முனுகப்பட்டு பச்சையம்மனுக்கு ஆடி மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவார பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE