சூளைமேடு திரிபுரசுந்தரி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

சென்னை சூளைமேடு, திருவள்ளுவர்புரம் 1-வது தெருவில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
76 ஆண்டுகள் பழமையான இக்கோயில், சூளைமேடு பகுதியில் மிகவும் பிரபலம். இக்கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஆண்டில் இருமுறை திருவிழாக்கள் நடைபெறுகின்றன. நவராத்திரியின் போது 10 நாட்கள் 10 விதமான அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிப்பதை காண கண் கோடி வேண்டும்.

அடுத்த திருவிழா அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமான ஆடியில் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், திரிபுர சுந்தரி அம்மனுக்கு பொங்கலிடுதல், உடுக்கை அடித்து அம்மனிடம் அருள் கேட்பது, கரகம் எடுப்பது, அம்மனின் வீதி உலா ஆகியன தனிச்சிறப்புடன் நடக்கிறது.

இந்த அம்மனிடம் மனமுருகி வேண்டினால், வேண்டியது வேண்டியபடியே நடைபெறும் என்பது இப்பகுதி மக்கள், குறிப்பாக திருவள்ளுவர்புரம் 1 மற்றும் 2-வது தெரு மக்களின் தீவிர நம்பிக்கை. குறிப்பாக இப்பகுதி வியாபாரிகள் அம்மனின் அருளால் தாங்கள் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.

“செல்வம் சேர்ந்து பெரிய நிலைக்கு வந்து வேறு பகுதிக்கோ அல்லது வெளியூர்களுக்கோ சென்றவர்கள் திரிபுரசுந்தரி அம்மனை தங்களது குலதெய்வமாக பாவித்து ஆண்டுதோறும் மறவாமல் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்” என்று தெரிவிக்கிறார் இக்கோயிலை நிர்வகிக்கும் திருவள்ளுவர்புரம் நல வாழ்வு சங்கத் தலைவர் ஆர்.நாகராஜன்.

ஆடி மாதத்தில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் திருவிழாவை இப்பகுதி மக்கள் தங்களது குடும்ப விழா போல வெகு விமரிசையாக கொண்டாடுவது இக்கோயிலின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE