துளி சமுத்திரம் சூபி 25: வாழ்வின் ஜீவன் தேடிய இளவரசன்

By முகமது ஹுசைன்

 

சதிகள் இல்லை என்று வருந்துவோர் நிறைந்திருக்கும் இவ்வுலகில், அந்த வசதிகளால் அலுப்புற்று அதை வெறுத்து ஒதுக்கிய சிலர் எப்போதும் இருந்துள்ளார்கள். அதிலும் சிலர் வசதியோடு புகழையும் குவிந்திருக்கும் அதிகாரத்தையும் துச்சமெனத் தூக்கியெறிந்து இருக்கிறார்கள். தன்னிடம் இருந்தவற்றைத் துறந்தவர்களில் ஷா இப்னு ஷூஜா கர்மானியும் ஒருவர்.

ஷா இப்னு ஷூஜா, ஒன்பதாம் நூற்றாண்டில் ஈரானில் அரச குடும்பத்தில் இளவரசராகப் பிறந்து பின்னாட்களில் மிகப் பெரிய சூபி ஞானியாக வரலாற்றில் நிலைத்தவர். ராஜ வாழ்க்கை அளித்த வசதிகளில் சிறு வயது முதலே அவருடைய மனம் ஒட்டாமல்தான் இருந்தது. சொல்லப்போனால் அவருக்கு அது ஒரு வேடிக்கையாகவே இருந்துள்ளது. ஷூஜா ஒரு சிறந்த பாடகர். இனிமையான குரல்வளம் கொண்ட இவர் பாடினால், கேட்பவரின் இதயம் உருகி கண்களில் நீர் வழியும்.

ஏனென்று தெரிந்தோ தெரியாமலோ தன் மார்பில் இறைவனின் பெயரை ஒன்பது வயதிலேயே பச்சை குத்திக்கொண்டார். எல்லாமிருந்தும் அவருடைய ஆன்மா ஒரு இனம் புரியாத சோகத்தில் எந்நேரமும் மூழ்கி இருந்தது. அந்தச் சோகத்தைத் தான் பாடும் இதயத்தை அறுக்கும் பாடல்களைக்கொண்டு தணிக்க முயல்வார். தினமும் அரண்மனையின் அந்திவேளை அவருடைய பாடல்களால் நிரம்பி வழியும்.

தங்கள் செயல் முறையானதா?

ஒரு நாள் இரவு மெய்மறந்த நிலையில் பாடிய படியே அரண்மனையை விட்டு வெளியே வந்துவிட்டார். அவர் குரலின் இனிமை அங்கு வசித்த மக்களைப் பரவச நிலைக்கு இட்டுச் சென்றது. அப்போது அன்றுதான் மணமான பெண் ஒருவர் தன் கணவர் இருப்பதையும் மறந்து ஷூஜாவைப் பார்க்கத் தெருவுக்கு வந்துவிட்டார். அந்தப் பெண்ணின் செயலால் சினங்கொண்ட கணவன், தங்கள் செயல் முறையானதுதானா என்று ஷூஜாவை வழிமறித்துக் கேட்டுள்ளார்.

சுயநினைவுக்குத் திரும்பிய ஷூஜா, தன் பின்னால் வந்துகொண்டிருக்கும் கூட்டத்தைப் பார்த்து வெட்கி தலைகுனிந்தபடி அரண்மனைக்குள் ஓடிச் சென்றார். “தங்கள் செயல் முறையானதுதானா?” என்ற கேள்வியும் அவரைத் துரத்திக்கொண்டே வந்தது. அன்று இரவு முழுவதும் அந்தக் கேள்வி அவரைத் தூங்க விடவில்லை. அதன் அர்த்தமும் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்தக் கேள்வியில் இருக்கும் ‘செயல்’ தான் இதுவரை செய்யாமல் இருக்கும் ‘செயலை’ப் பற்றியது என்பது மட்டும் அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.

அடுத்த நாள் காலையில் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. சாப்பிடவும் இல்லை. ஆன்ம விசாரணையில் மூழ்கித் தன்னுள் பார்க்க ஆரம்பித்தவர், பசி தூக்கம் என்பதை எல்லாம் மறந்து கிட்டதட்ட நாற்பது நாட்கள் அப்படியே உறைந்த நிலையில் இருந்தார். நாற்பது வருட வாழ்வை அந்த நாற்பது நாட்களில் வாழ்ந்ததாகத் தன்னுடைய உரையொன்றில் பின்னொரு சமயம் அதைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

உண்மைதான் அந்த நாற்பது நாட்கள் அவருடைய வாழ்வை முற்றிலும் மாற்றி அமைத்துவிட்டது. அவருடைய கேள்விகளுக்கு எல்லாம் அவை விடைகளை வழங்கின. வாழ்வுக்கான அர்த்தத்தை அவை உணர்த்தின. அதற்கான பாதையை அவை வடிவமைத்துக் கொடுத்தன. இருப்பினும், அவர் துறவறம் என்று தனியாக எங்கும் செல்லவில்லை. ஆன்மிகத்தில் திளைத்து மெய்ஞானத்தில் நீந்தியபடி இல்லற வாழ்வையும் தொடர்ந்தார். அவருக்கு ஓர் ஆண்குழந்தையும் பெண்குழந்தையும் இருந்தனர். அவர்களும் ஆன்மிகத் தேடலிலும் இறை நம்பிக்கையிலும் தந்தையை மிஞ்சி நின்றனர்.

ஷூஜாவின் மகளைத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைக்கப் பக்கத்து நாட்டு அரசன் விரும்பிக் கேட்டார். ஷூஜா அவரிடம் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டார். தன் பதிலுக்காக அந்த அரசர் காத்திருக்கும் வேளையில்,ஷூஜா அந்த ஊரில் உள்ள மிக வறியவனிடம் சென்று தன் மகளைத் திருமணம் செய்துகொள்ள முடியுமா என்று கேட்டார். அவர் சம்மதித்தவுடன் தன் மகளிடம் சம்மதம் கேட்டார். மகளும் சம்மதித்தவுடன் உடனடியாக இருவருக்கும் திருமணம் செய்துவைத்து விட்டார்.

நாளை இறைவனுடைய கையில்

அரண்மனையில் வாழ்ந்த அந்த இளம் பெண் வாழச் சென்ற வீட்டில் ஒரே ஓர் அறைதான் இருந்தது. அந்த அறை வறுமையின் பிடியில் மூழ்கி இருந்தது. அந்த அறையின் வறுமையை ஷூஜாவின் மகளின் விழிகள் துழாவின. தரையில் விரிப்பதற்கும் போர்த்துவதற்கும் இரண்டு கிழிந்த சணல் பைகளையும் எண்ணெய் அணைந்து போன விளக்கையும் பார்த்து அவள் விழிகள் மகிழ்ச்சியில் விரிந்தன. ஆனால், அந்த அறையின் ஓரத்திலிருந்த காய்ந்த ரொட்டிகள் அந்த விழிகளின் மகிழ்வைச் சினமாக்கியது.

இப்னுவின் மகள் தன் கணவரின் கண்களைப் பார்த்து, “நாளை என்பது நம் கையில் இல்லை. அது இறைவனுடைய கையில் உள்ளது. ஆனால் அளவுக்கு அதிகமாக உங்களிடம் இருக்கும் ரொட்டித் துண்டு, இறைவனிடம் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைபாட்டை உணர்த்துகிறது. இறைவனின் ஆளுமையில் நம்பிக்கையற்ற உங்களுடன் வாழ்வது எனக்குச் சாத்தியமற்ற ஒன்று. மன்னித்து விடுங்கள். இனி என்னால் இங்கு ஒரு நிமிடம் கூட வாழ முடியாது” என்று சொல்லியபடி அங்கிருந்து வெளியேறினாள்.

வளத்திலும் வசதியிலும் புகழிலும் அதிகாரத்திலும் வாழ்வின் ஜீவனில்லை என்ற புரிதலை இவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்? யாரிடம் கற்றார்கள்? புத்தருக்கு முன்னும் பின்னும் பலர் அந்த உண்மையை உலகில் உள்ளோருக்கு தங்கள் வாழ்வின்மூலம் எடுத்துரைத்தும், ஏன் இன்னும் அந்தப் புரிதலின்றி மனிதர் தம் வாழ்வை அர்த்தமற்ற புகழ் போதையிலும் அதிகார மோகத்திலும் தொலைத்து மறைகிறார்கள்? மனிதர்களின் வாழ்க்கை ஒரு விசித்திரமான புதிர்தான்.

884-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு உடலால் மட்டும் பிரிந்து சென்ற ஷா இப்னு ஷூஜா, சூபி ஞானிகளில் முக்கியமானவராக அன்று கருதப்பட்டதில் வியப்பில்லை. ஆனால் இன்றும் அவ்வாறு அவர் கருதப்படுவதுதான் வியப்பாக உள்ளது. ஏனென்றால் அவர் எழுதிய எண்ணற்ற புத்தகங்களில் ஒன்றுகூட இன்று நம்மிடையே இல்லை. அவை அப்போதே அழிக்கப்பட்டுவிட்டன. அவருடைய பக்தியின் வீரியத்தையும் ஞானத்தின் ஆழத்தையும் எண்ணங்களின் மேன்மையையும் உணர்த்துவதற்கு இவற்றை விட வேறு சான்று தேவையா!

(மெய்த்தேடல் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

14 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்