பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

மைசூரு, குலசேகரப்பட்டினம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக நெல்லை - பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த தசரா விழாவின் முக்கியத் தலமாக இந்த ஆயிரத்தம்மன் திருக்கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், ஆரம்ப காலத்தில் பட்டாளத்து திடல் என்றழைக்கப்படும் எருமைக்கடா மைதானத்தில் எழுந்தருளி இருந்ததாகவும், பின்னர்தான் தற்போதைய கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின்போது படைவீரர்கள் சூழ்ந்து வாழ்ந்த இடமாக இருந்துள்ளது. இதனால் பட்டாளத்திடல் என்று அழைத்திருக்கிறார்கள். அப்பகுதியில் ஒரு ஓலை குடிசையில் அம்மன் வீற்றிருக்க, ஆயிரம் பட்டாள வீரர்கள் வழிபட்டதால் அம்மனுக்கு ‘ஆயிரத்தம்மன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில் மேற்கு தேர் வீதியில் அமையப் பெற்றுள்ள கோயிலின் முகப்பில், அம்மைக்கு நேர் எதிராக சுடலை மாடசாமி காட்சியளிக்கிறார். உள்ளே சென்றால் முதலில் பலிபீடம், கொடிமரம், வேதாள அம்மன் ஆகியோர் கருவறைக்கு நேர் எதிராக இருக்கிறார்கள். கருவறையில் அம்மை எட்டு கரங்களோடு அமர்ந்த கோலத்தில் வீராவேசமாக காட்சி தருகிறார். கருவறைக்கு வெளியே அம்மைக்கு வலப்புறம் தனி கொலுமண்டபம் உள்ளது.

அங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், தசரா மற்றும் விசேஷ நாட்களிலும் உற்சவ அம்மை காட்சி அருள்கிறார். பிரகாரத்தின் கன்னி மூலையில் கன்னி விநாயகர் சந்நிதி, முன்மண்டபத்தில் துர்க்கையின் பெரிய சித்திர சுவரோவியம் மற்றும் பரிவார மூர்த்திகளான சங்கிலி பூதத்தார், மாடன், மாடத்தி மற்றும் பைரவர் ஆகியோரின் சந்நிதியும் உள்ளது. ஆயிரத்தம்மன் சந்நிதியில் கொடி ஏறிய பிறகே மற்ற கோயில்களில் தசரா தொடங்குகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE