சஷ்டியை முன்னிட்டு விழுப்புரத்தில் பரத்வாஜ் சுவாமிகளின் பாலா பூஜை

By எஸ். நீலவண்ணன்

விழுப்புரம்: சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ஶ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் இன்று (சனிக்கிழமை) சஷ்டி திதியை முன்னிட்டு விழுப்புரத்தில் பாலா பூஜை நடத்தினார்.

நாட்டில் விவசாயம் செழிக்கவும், நீர் நிலைகள் நிரம்பிப் பெருகவும், இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களுக்கு ஆபத்து நேரிடாத வகையிலும், அவர்களைப் பாதுகாக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு கல்வி சிறப்பாக அமைய வேண்டியும் சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகரைச் சேர்ந்த ஶ்ரீ யோகமாயா புவனேசுவரி பீடாதிபதி ஜகத்குரு பரமஹம்ச ஶ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் இந்த பூஜையை நடத்தினார்.

விழுப்புரத்திலுள்ள பக்தர் ஒருவரது இல்லத்தில் அம்பாளைக் குழந்தையாக பாவித்து, அவருக்கு அலங்காரம் செய்து பாலா பூஜையை பரத்வாஜ் சுவாமிகள் நடத்தினார். அப்போது குழந்தையின் பாதத்தில் பால், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட 9 வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடத்திய சுவாமிகள், பால சகஸ்ரநாம அர்ச்சனைகளை செய்தார். மேலும், 64 வகையான உபஜாரங்களை நடத்திய பரத்வாஜ் சுவாமிகள், அம்மனாக பாவிக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்ட குழந்தைக்கு சர்க்கரைப் பொங்கல், பழங்களைக் கொண்டு நைவேத்தியம் செய்தார்.

பூஜைக்குப் பின், “அன்னை பராசக்தி குழந்தை வடிவமானவள். எனவே, குழந்தையை இறைவியாகப் பாவித்து, அவருக்கு பல்வேறு விதமான பூஜைகள் செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். வீட்டில் செல்வமும், தனமும் பெருகும். பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மட்டுமல்லாது, மற்ற நாள்களிலும் இதுபோன்ற பூஜைகளை நடத்தி வழிபடுவது பெரும் பலனைத் தரும்” என்று பரத்வாஜ் சுவாமிகள் கூறினார். இந்த பாலா பூஜை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பரத்வாஜ் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE