பழநி: கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி அருகே பெரியகலையம்புத்தூரில் உள்ள ஶ்ரீ மகாலட்சுமி கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்த நெய்க்காரப்பட்டி அருகே பெரியகலையம்புத்தூரில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னதாக, பாரம்பரியமான சேர்வை ஆட்டத்துடன் தீபத் தூணில் விளக்கேற்றப்பட்டது. இதையடுத்து, நேர்த்திக் கடன் செலுத்த வந்த பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களின் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார். அதன் பின் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இந்தப் பூஜையில் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE