திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே அமைந்துள்ளது வெயிலுகந்தம்மன் திருக்கோயில். சூரபத்மனை வதம் செய்த கந்தனுக்கு அன்னை பராசக்தி, காட்சி கொடுத்த திருத்தலம் இது. சூரசம்ஹாரம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் இரவு முருகப் பெருமான், சூட்சும உருவில் இக்கோயிலுக்கு வந்து அன்னைக்கு பூஜை செய்து, அருளாசி பெற்று வேல் வாங்கிச் செல்வதாக ஐதீகம்.

‘வேல் ஈந்த அம்மன்’ என்ற சொல்லே, ‘வேலீந்த அம்மன்’ என்றாகி, பின் ‘வெயிலுகந்த அம்மன்’ ஆக மாறியதாக கூறப்படுகிறது. தனது அன்னைக்கு நித்திய பூஜை செய்வதற்காக பாரசைவர்களை சுப்பிரமணிய சுவாமியே நியமித்ததாக திருக்கோயில் வரலாறு கூறுகிறது. அன்று முதல் அம்பாளுக்கு பாரம்பரியமாக யாமள ஆகம முறைப்படி பாரசைவர்கள் நித்திய பூஜை செய்து வருகின்றனர்.

இங்குள்ள வதனாரம்பரத் தீர்த்தத்தில், ஆடி செவ்வாய்களில் அதிகாலையில் பெண்கள் நீராடி, மஞ்சள் அணிந்து, செவ்வரளி மாலை அணிந்து, வெயிலுகந்த அன்னையை வணங்கினால் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். திருமண வரம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் முருகனுக்கு ஆவணி மற்றும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு முன்னதாக, வெயிலுகந்தம்மனுக்கு பத்து நாள் உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்போது அன்னை சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வருவாள். இரண்டு திருவிழாக்களிலும் அன்னைக்குக் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பிறகு, திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதிக்கு எதிரே உள்ள சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி, புதல்வனுக்கு அருளாசி வழங்குகிறார். அதன் பிறகே சுப்பிரமணிய சுவாமிக்கு உற்சவம் தொடங்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE