அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா: சுவாமிமலையில் இருந்து புறப்பட்ட பக்தர்கள்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் இருந்து அறுபடை வீடுகளுக்குச் செல்லும் ஆன்மிக சுற்றுலாப் பேருந்து இன்று (ஆக.7) புறப்பட்டுச் சென்றது. மொத்தம் 6 பேருந்துகளில், 204 பக்தர்கள் உட்பட 236 பேர் புறப்பட்டுச் சென்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், ஆன்மிக சுற்றுலா பயணம் உரிய வசதிகள் செய்து கொடுத்து அழைத்துச் செல்லப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சுவாமிமலை முருகன் கோயிலில் இருந்து, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 204 பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட மொத்தம் 236 பேர், 6 பேருந்துகளில் இன்று முருகனின் அறுபடை வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

முன்னதாக, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மற்றும் எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி ஆகியோர் கொடியசைத்து, ஆன்மிக சுற்றுலா பயணத்தைத் தொடங்கி வைத்து, பக்தர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினர். இந்த நிகழ்வில் கும்பகோணம் எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் துணை மேயர் சு.ப.தமிழழகன், அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி, கண்காணிப்பாளர் வி.பழனிவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பேருந்தில் செல்பவர்கள் புதன்கிழமை திருத்தணி சென்றடைந்து அங்கு தங்கிவிட்டு வியாழக்கிழமை காலை மணிக்கு திருத்தணி முருகனை தரிசிப்பார்கள். அதன்பிறகு, பேருந்துகள் பழநி சென்றடையும். 9-ம் தேதி காலை பழநியில் தரிசனம் முடித்து விட்டு, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச் சோலை கோயில்களுக்கு பேருந்துகள் செல்லும். அந்தக் கோயில்களில் தரிசனம் முடித்துவிட்டு அனைவரும் இரவு திருச்செந்தூர் சென்றடைவர். 10-ம் தேதி காலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு, அன்று மாலை மீண்டும் அனைவரும் சுவாமிமலை திரும்புவர் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE