நத்தம் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலில் அம்மன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். கோயிலின் வெளிப்பிரகாரம் கருங்கற்களால் கட்டப்பட்டு, அழகுடன் காட்சியளிக்கிறது.

இந்தக் கோயிலில் 22 கல் தூண்கள் நிலை நிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. மாசி மாதத்தில் நடைபெறும் மாசிப் பெருந்திருவிழாவில் பங்கேற்க பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நத்தம் மாரியம்மன் கோயிலுக்கு வருகின்றனர். 15 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவின் தொடக்கமாக நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் மஞ்சள் காப்பு அணிந்து, கரந்தமலை சென்று தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிபடுகின்றனர்.

இத்திருவிழாவில், அம்மனை வேண்டி, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்குவது சிறப்பு அம்சம். திருவிழாவில் நடைபெறும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதுண்டு.

இதைக் காண சுற்று வட்டார கிராமத்தினர் திரளாக கூடுவது உண்டு. நத்தம் மாரியம்மன் கோயில் அபிஷேக தீர்த்தம் பல நோய்களை தீர்க்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி மாத சிறப்பு வழிபாடுகளும் நத்தம் மாரியம்மன் கோயிலில் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பகல் 12 மணிக்கு அடைக்கப்படும், மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு அடைக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE