பழநியில் இருந்து மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 24 அடி உயரமுள்ள கருப்பணசாமி சிலை

By பி.டி.ரவிச்சந்திரன்


பழநி: மதுரையில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பழநியில் இருந்து ஒரே கல்லில் ஆன 24 அடி உயர கருப்பணசாமி சிலை லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

மதுரையில் அருப்புக்கோட்டை பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோயிலில் பிரம்மாண்ட கருப்பணசாமி சிலையை பிரதிஷ்டை செய்ய, கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதற்காக, திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள சிற்பக் கலைக்கூடத்தில் சிலை வடிவமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

கடந்த 8 மாதமாக, 3 சிற்பிகள் 70 டன் கருங்கல்லில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலையை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். சிலை வடிவமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, பழநியில் இருந்து மதுரைக்கு சிலையை கொண்டுசெல்லும் பணி நடைபெற்றது.

முன்னதாக சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கிரேன் மூலம் தூக்கி அதிக எடையை தாங்கும் வைகையில் அதிக எண்ணிக்கை டயர்களை கொண்ட லாரியில் சிலை ஏற்றப்பட்டு பழநியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து சிலையை வடிவமைத்த சிற்பிகள் கூறுகையில், “கரூரில் இருந்து 70 டன் எடையுள்ள ஒரே கருங்கல்லை வாங்கி வந்து சிலை வடிவமைக்கும் பணியை துவக்கினோம். செதுக்கப்பட்ட கழிவுகள் போக, தற்போது 40 டன் எடையில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிலை பணிகள் நிறைவடைந்ததையடுத்து மதுரைக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் செய்து சிலையை அனுப்பிவைத்தோம், இந்த சிலை விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த சிலையின் மொத்த விலை ரூ.17 லட்சம்,” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE