சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா: 50,000-க்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

By அ.கோபால கிருஷ்ணன்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுகிழமை) காலை 4 மணி முதல் 11 மணி வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் மதுரை மாவட்டம் சாப்டூர் வனச்சரகத்தில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவே சஞ்சீவிகிரி எனும் சதுரகிரி மலை உள்ளது. இதனால் சதுரகிரி பஞ்சபூத லிங்கத்தலம் என போற்றப்படுகிறது. சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கமும் இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாகவும், சுந்தரமூர்த்தி ஆரிட லிங்கமாகவும், சந்தன மகாலிங்கம் தைவீக லிங்கமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

சதுரகிரியில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவிற்காக ஆகஸ்ட் 1 முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து ஆகஸ்ட் 1ம் தேதி பிரதோஷத்தை முன்னிட்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஆகஸ்ட் 2ம் தேதி சிவராத்திரி முன்னிட்டு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு 17 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். காலை 11 மணி நிலவரப்படி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்றுள்ளனர். தொடர்ந்து தாணிப்பாறை மலை அடிவாரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி மற்றும் 18 சித்தர்களுக்கு காலை 6 மணிக்கு 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. 12 வகையான மலர்களால் சுந்தர மகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE