வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்பதை ஒரு பெரிய போராட்டமாக நம்மில் பலரும் நினைக்கிறோம். சாமானியர்களாக இருப்பதற்குப் பயப்படுகிறோம். இந்தப் போராட்டத்தையும் பயத்தையும் எப்படிக் கையாள்வது என தத்துவ அறிஞர் ஜே. கிருஷ்ணமூர்த்தி ‘Think on These Things’ புத்தகத்தில் விளக்கியிருக்கிறார்.
பள்ளி மாணவர்களிடம் ஜே. கிருஷ்ணமூர்த்தி நடத்திய கேள்வி-பதில் உரையாடலாக இந்தப் புத்தகம் விரிகிறது. இந்தப் புத்தகத்தில் அவர் கல்வி என்பது ஒரு வேலையைப் பெறுவதற்குத் தயார்படுத்தும் கருவி மட்டும் அல்ல; “அது ஒட்டுமொத்த வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள உதவும் அம்சம்” என்று சொல்கிறார். பிரபலம், அந்தஸ்து, பணம், வெற்றி போன்ற அம்சங்களின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை இந்தப் புத்தகம் உடைக்கிறது.
அடைய விரும்புவதற்கான ஆசை எப்படித் துன்பத்துக்கு வழிவகுக்கிறது என்பதும் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவருமே ‘யாரோ ஒருவராக’ மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வதாகக் கூறும் கிருஷ்ணமூர்த்தி, இந்த முயற்சியில் நாம் சராசரி மனிதர்களாக மாறிவிடும் முரணையும் சுட்டிக்காட்டுகிறார்.
வெற்றியும் லட்சியமும்
‘Think on These Things’ புத்தகம், லௌகீக வெற்றியைப் பற்றி விரிவாக அலசுகிறது. லட்சியங்களையும் சாதனைகளையும் நமது பண்பாடு தொடர்ந்து புனிதப்படுத்தியும் கொண்டாடியும் வருகிறது. அதனால், நாம் அனைவரும் ஏதோவொரு லட்சியத்தின் பின்னால் ஓட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், ஏதோவொன்றை அடைய வேண்டுமென்ற ஆசை எப்போதும் ஏமாற்றத்திலும் வெறுமையிலும் முடிவதாக விளக்குகிறார் அவர்.
இப்படி ஓடிக்கொண்டேயிருப்பது வாழ்க்கையை வாழ்வதற்கான அறிவார்த்த வழி இல்லை. ஏனென்றால், அது தற்காலத்தில் முடிவற்ற, நிறைவேறாத ஆசைகளால் மகிழ்ச்சியற்றவர்களாக நீங்கள் இருப்பதாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் அவர். “நாம் அனைவரும் பிரபலங்களாக இருக்க விரும்புகிறோம். நாம் வேறு யாரோ ஒருவராக மாற நினைக்கும் அந்த நொடியிலேயே நம் சுதந்திரத்தை இழந்துவிடுகிறோம்” என்று சொல்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
மாற்றுவழி
குறைவானவற்றை விரும்புவதால் மன நிறைவைப் பெற முடியும். ஆனால், யாரும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தாமல் இருப்பதை விரும்ப மாட்டார்கள். இந்தப் புத்தகத்தில் மன அழுத்தத்துடன் வாழ்க்கையில் எதன் பின்னாலும் ஓடாமல் அதேவேளையில் படைப்பூக்கத்துடன் திகழ்வதற்கான மாற்றுவழியை விளக்குகிறார் இவர்.
மனிதர்கள் எதைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதை அடையாளம் கண்டுபிடிக்க உதவுவதுதான் கல்வியின் கடமை. மனம் விரும்பும் பணியைச் செய்வதால் அன்றாட வாழ்க்கையில் திருப்தியும் செய்யும் பணியின் மீதான உற்சாகமும் இயல்பாக வெற்றியை வசப்படவைக்கும் என்று விளக்குகிறார் அவர்.
படைப்பாற்றல் நிறைந்தவர்கள்
பிரச்சினைகளால் மனம் சூழப்பட்டிருக்கும்போது, அதற்கான தீர்வையும் அதுவே வழங்காது. “ஆக்கிரமிக்கப்படாத மனதால் மட்டுமே ஒரு பிரச்சினையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும்” என்கிறார் அவர். உங்கள் எண்ணங்களுக்கிடையில் போதுமான இடைவெளியை உருவாக்கும்போது, உங்களால் துல்லியமான, படைப்பாற்றல் நிறைந்த மனதை அடைய முடியும் என்று விளக்குகிறார். நம்மில் பெரும்பாலானவர்கள் வெறும் இயந்திரத்திறனாளர்களாகவே வாழ்கிறோம் என்று சுட்டிக்காட்டும் அவர், “நாம் இயந்திரத்தனமாகத் தேர்வுகளில் வெற்றிபெறுகிறோம்.
பணிக்குச் செல்கிறோம். சமூகத்தில் வெற்றிபெறுவதற்கான உத்திகளைக் கற்றுக்கொள்கிறோம். ஆனால், வாழ்க்கைக்கு அவசியமான அழகு, நேசம், அமைதி ஆகிய அம்சங்களின் மீது நாம் கவனம் செலுத்தாவிட்டால், கடினமானதும் சிதறுண்டதாகவும் தோன்றக்கூடிய உலகத்தில் வாழ வேண்டியிருக்கும்” என்கிறார்.
“விட்டுவிடும் மனப்பான்மை இருக்கும்போதுதான் படைப்பாற்றலுடன் விளங்க முடியும். எங்கே நிர்பந்த உணர்வு இல்லையோ, எங்கே இல்லாமல் போவதைப் பற்றிய அச்சம் இல்லையோ, இலக்கு பற்றிய உணர்வு இல்லையோ அங்கு மட்டுமே நீங்கள் படைப்பாற்றலுடன் திகழ முடியும்” என்கிறார் அவர்.
மகிழ்ச்சியும் அன்பும்
பெரும்பாலானவர்கள் மகிழ்ச்சியை அடையக்கூடிய ஒரு பொருளாகவே பார்க்கிறோம். ஆனால், மகிழ்ச்சி அடையக்கூடிய பொருளல்ல என்று மறுக்கும் கிருஷ்ணமூர்த்தி, “மகிழ்ச்சியைக் கண்டடைய முடியாது. அது அச்சமில்லாத இடத்தில், வாழ்க்கை அர்த்தப்படுத்தும் உடன்விளைவாக இருக்கிறது” என்கிறார். அது சாதனைகளாலும் லட்சியங்களாலும் உருவாகவில்லை.
மகிழ்ச்சியைப் பற்றிச் சிந்திப்பதும் பேசுவதும் நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதையே குறிப்பதாகச் சொல்கிறார் அவர். அதேபோல், மகிழ்ச்சியின்மை என்பது அன்பில்லாதபோதும், நமக்கும் மற்றவருக்கும் இடைவெளி உருவாகும்போதும் ஏற்படுகிறது. இந்த இடைவெளி நமது விமர்சனங்களாலும் முன்தீர்மானங்களாலும் ஏற்படுவதாக இந்தப் புத்தகத்தில் அவர் விளக்குகிறார்.
மனிதர்கள் தங்களது மனம் விரும்பும் வேலையைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் போக்கு உலகில் பிரபலம் அடையாத காலகட்டத்திலேயே ‘Think on These Things’ என்ற இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. இந்தப் புத்தகம், உங்களை ‘நான் என் வாழ்க்கையில் இயந்திரத்திறனாளனாக மட்டும் இருக்கிறேனா, அல்லது படைப்பாளியாகவும் இருக்கிறேனா’ என்ற கேள்வியைக் கேட்கவைக்கும்.
ஜித்து கிருஷ்ணமூர்த்தி
ஜே. கிருஷ்ணமூர்த்தி சென்னையில் 1895-ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை சென்னை பிரம்மஞான சபையில் பணியாற்றினார். அவருக்குப் பதினைந்து வயதாகும்போது, மிரம்மஞான சபை நிறுவனர் அன்னி பெசண்ட் மற்றும் சி.டபிஸ்யூ. லெட்பீட்டர் ஆகியோர் அவரிடம் தெரிந்த பிரபையைக் கண்டு உலகத் தலைவராகப் பயிற்சிக் கொடுக்கத் தேர்ந்தெடுத்தனர். 1979-ம் ஆண்டு, தான் யாருக்கும் குருவோ, ரட்சகரோ அல்ல என்று கூறித் தனது பெரும்பதவியையும் அதற்குப் பின்னாலிருந்த சகல அதிகாரங்களையும் துறந்தார். அவர் 1985-ம் ஆண்டு மறைந்தார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago