முப்பந்தல் இசக்கியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்

By செய்திப்பிரிவு

தென் மாவட்டங்களிலும், கேரளத்திலும் இசக்கியம்மன் வழிபாடு முக்கியமானது. ‘யட்சி’ என்பதே ‘இசக்கி’ என மருவியதாகக் கூறப்படுகிறது. இசக்கியம்மன் கோயில்களில் தலைமை பீடமாக முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் திகழ்கிறது.

நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 13 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள பக்தர்கள் அதிக அளவில் இங்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். இவ்வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களிலும் பயணிப்பவர்கள் இக்கோயிலில் காணிக்கை செலுத்திய பிறகே பயணத்தை தொடர்கின்றனர்.

தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்விடத்தில் ஒன்றாக கூடி பந்தல் அமைத்து, தமிழ்ப்புலவர் அவ்வையார் தலைமையில் தங்களின் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து தீர்வு கண்டதாகவும், இதன் விளைவாக ‘முப்பந்தல்’ என்று இத்தலத்துக்கு பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கையில் குழந்தையுடன் காட்சி தரும் இசக்கியம்மன் பற்றிய நாட்டுப்புற கதைகள் ஏராளமாக உள்ளன. முப்பந்தல் இசக்கியம்மன் அக்காலத்தில் மிகவும் ஆவேசத்துடன் விளங்கியதாகவும், தமிழ் மூதாட்டி அவ்வையார், அம்மனை சாந்தப்படுத்தியதாகவும் புராண வரலாறு உள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில், முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது. முப்பந்தல் கோயில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். குழந்தை வரம், ஆரோக்கியம் வேண்டுவோருக்கும், பிணி தோஷங்களுக்கும் சிறந்த பரிகார தலமாக இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE