தஞ்சை, திருவையாறில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம்: நீர்நிலைகளில் ஏராளமான பெண்கள் வழிபாடு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர், திருவையாறு பகுதிகளில் பொதுமக்கள் நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழாவை இன்று (ஆக.3) உற்சாகத்தோடு கொண்டாடினர்.

ஆடி மாதத்தில் 18-வது நாளில் வரும் ஆடிப்பெருக்கு விழாவை காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் காவிரி ஆற்றுக்கு வந்து அரிசி, பழங்கள், அவல், காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து படையலிடுவது வழக்கம். அதேபோல் சுமங்கலிப் பெண்கள் நீர்நிலைகளுக்குச் சென்று எப்போதும் தங்களுடைய வாழ்வும், வளமும் குன்றாமல் இருக்க வேண்டும் என காவிரி நதியிடம் வேண்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் கயிறை கழுத்தில் அணிந்து கொள்வர்.

புதுமணத் தம்பதியர் தங்களது திருமணத்தின்போது அணிந்து கொண்ட மாலைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்து அதனை ஆடிப்பெருக்கு விழாவின் போது கொண்டு வந்து ஓடும் நீரில் விடுவது வழக்கம். அப்போது அவர்கள் முன்னமே கட்டிய தாலி கயிற்றை பிரித்து புதிதாக தாலிக்கயிறு அணிந்து கொள்வது மரபு.

அதன்படி இன்று காலை (சனிக்கிழமை) தஞ்சை, திருவையாறு பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்ப மண்டப படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் காவிரித்தாய்க்கு படையலிட்டனர். சுமங்கலிப் பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். புதுமணத் தம்பதியர் பலரும் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை கொண்டு வந்து ஆற்றிவில் விட்டு வணங்கினர்.

அப்போது ஐயாறப்பர், கோயிலிலிருந்து அறம்வளர்த்த நாயகியுடன் காவிரி ஆற்றின் புஷ்பமண்டபத் துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து நான்கு வீதிகளிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. அதேபோல் தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றின் படித்துறையில் ஏராளானோர் படையலிட்டு வழிபாடுகளை செய்தனர். பின்னர் பெரிய கோயிலுக்குள் சென்று பெருவுடையார், பெரியநாயகி அம்மனை வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் இன்று ஆடிப்பெருக்கு விழாவின்போது பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறை மாற்றிக் கொண்டனர்.

மேலும், கல்லணையில் ஏராளமானோர் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் விதமாக காவிரி, வெண்ணாறு கரைகளில் வழிபாடுகளை நடத்தினர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைப் பகுதிகளிலும் இன்று ஆடிப்பெருக்கு விழா வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE